செய்திகள்

பக்தர்கள் இல்லாமல் நடைபெற்ற திருச்செந்தூர் கோயில் விசாக திருவிழா

திருச்செந்தூர்,ஜூன்,04–

பக்தர்கள் இல்லாமல் திருச்செந்தூர் கோவில் விசாக திருவிழா நடைபெற்றது. இதனால் திருச்செந்தூர் கோவில் பக்தர்கள் இல்லாமல் களையிழந்து காணப்பட்டது.

கொரோனா தொற்றால் நாடு முழுவதும் கடந்த மார்ச் 24–ம் தேதி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடும் கட்டுப்பாடுகள் மத்திய, மாநில அரசுகள் நடைமுறைப்படுத்தியது. அதே போல் அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பக்தர்கள் தரிசனம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருச்செந்தூர் முருகன் கோவில் வைகாசி விசாகத் திருவிழா பக்தர்கள் யாரும் கலந்து கொள்ளாததால் களையிழந்து நடைபெற்றது. குறிப்பிட்ட அர்ச்சகர்கள் மற்ற கோயில் பணியாளர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

விசாகத் திருவிழாவை முன்னிட்டு கோவில் நடை இன்று காலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. 5.10 மணிக்கு சுப்ரபாத சேவையும் 5.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. காலை 9 மணிக்கு விசாகத் திருவிழாவை முன்னிட்டு மூலவருக்கும், சண்முகருக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன.

திருச்செந்தூர் முருகன் கோவிலில் எந்த திருவிழா நடைபெற்றாலும் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். விசாகத் திருவிழாவிற்கு ஏராளமான பக்தர்கள் கால்நடையாக வந்து முடி காணிக்கை செலுத்தி கடலில் புனித நீராடி அங்கபிரதக்ஷணம் செய்து நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். ஆனால் இன்று நடைபெற்ற விசாகத் திருவிழா பக்தர்கள் யாருமின்றி நடைபெற்றது.

இதே போல் ஒரு சம்பவம் இனி எந்தக் காலத்திலும் நடைபெறாமல் இருக்க வேண்டும் என பக்தர்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடியே பிரார்த்தனை செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *