சிறுகதை

பக்கிரிசாமி …! – ராஜா செல்லமுத்து

Makkal Kural Official

பிரதான தெருவில் இருக்கும் நடைபாதையில் நிறைய கடைகள் இருந்தன. காலையிலிருந்து இரவு வரை ஜருராக வியாபாரம் நடக்கும் கடைகளில் ரோஜா ஸ்டோர்ஸ் முன்னால் பக்கிரிசாமி அமர்ந்திருப்பார்.

அழுக்கு உடை, நீண்ட தலைமுடி, குளிக்காத தேகம். அவரைப் பார்த்தாலே அருவருப்பு வந்து ஒட்டிக் கொள்ளும் என்ற அளவிற்கு இருப்பார் பக்கிரிசாமி.

எப்போது இரவு நேரத்தில் கடை அடைக்கிறார்களோ அப்போது ஓடிப்போய் ரோஜா ஸ்டோர்ஸ் முன்னால் போய் படுத்துக் கொள்வார் . அவருக்கு வியாபாரம் நடக்கிறதோ இல்லையோ? எப்போது இந்தக் கடையை மூடுவார்கள் என்று தான் காத்திருப்பார்.

இப்படியாகத் தான் தினமும் நடந்து இவரின் வாழ்க்கை நடந்து கொண்டிருக்கும். பக்கிரிசாமி ரோஜா ஸ்டோர்ஸ் முன்னால் தூங்குவதைப் பார்த்துக் கோபம் கொண்ட முதலாளி

“உனக்கு வேற இடம் கிடைக்கலையா? இங்க எல்லாம் படுக்க கூடாது .விலை உயர்ந்த பொருட்கள் எல்லாம் கடைக்கு உள்ளே இருக்குது. நீ பேசாம ஏதோ ஒன்னு பண்ணிட்டா என்ன பண்றது ? இங்க படுக்கக் கூடாது என்று அந்த முதலாளி நடு இரவில் வந்து பக்கிரிசாமியை எழுப்பி விட்டார் .வேறு வழியின்றி பக்கிரிசாமி இன்னொரு இடத்திற்கு நகர வேண்டியிருந்தது. இரவு தூங்கிப் பார்த்தார். மற்ற இடங்கள் எல்லாம் அவருக்கு சரியாகப் படவில்லை. மறுபடியும் துரத்தி விடப்பட்ட ரோஜா ஸ்டாேர்ஸ் அருகே வந்து படுத்துவிட்டார். மறுநாள் காலை வந்த ரோஜா ஸ்டாேர் உரிமையாளருக்கு ரொம்ப சந்தோஷம்.

இனிமேல் நம் கடை முன்னால் அந்தப் பிச்சைக்காரர் படுக்க மாட்டார் என்று நினைத்து சந்தோஷப்பட்டு கொண்டார் முதலாளி.

சில நாட்களுக்குப் பின்னால் அந்த நடைபாதை கடைகளில் இருந்த சில கடைகளில் திருடு போயிருந்தது. அந்த நடைபாதையில் இருந்த கடைகளில் உரிமையாளர்கள் அழுது புலம்பினார்கள். என் கடையில இவ்வளவு திருடு போய்விட்டது . அவ்வளவு திருட போய்விட்டது என்று அழுது புலம்பினார்கள்.

ஆனால் ராேஜா ஸ்டோர்ஸில் மட்டும் திருடு போகவில்லை. காவல்துறையால் திருடர்கள் கண்டுபிடிக்கப்பட்டார்கள். காவல்துறையினர் திருடியவர்களைக் கைது செய்து விசாரித்த போது

திருடியதை ஒப்புக் கொண்டார்கள். எந்தெந்த கடைகளில் என்னென்ன விலை உயர்ந்த பொருள் இருந்தன என்பதைக் கணக்கிட்டுச் சொன்னார்கள். அத்தனையும் உண்மை என்றார்கள் கடை முதலாளிகள். ஆனால் ரோஜா ஸ்டோர்ல மட்டும் எங்களால் திருட முடியல. அங்க ஒரு பெரியவர் படுத்திருந்தாரு இல்லன்னா ரோஜா ஸ்டோர்லயும் நாங்க திருடி இருப்போம் என்று வாக்குமூலம் கொடுத்தார்கள். இந்தச் செய்தி ரோஜா ஸ்டார் உரிமையாளருக்கு எட்டியது.

தினமும் நாம் அந்தப் பெரியவரை விரட்டி இருக்கிறோம். ஆனால் அந்த நபர் தான் நம் கடையிலிருந்த பொருட்களை எல்லாம் பாதுகாத்திருக்கிறார் என்று நினைத்தார்.

மறுநாள் வாசலில் அமர்ந்திருந்த பக்கிரி சாமியை அழைத்தார்.

” என்ன மன்னிச்சிடுங்க. நான் தப்பு பண்ணிட்டேன். உங்களால தான் கடையில இருந்த விலை உயர்ந்த பொருட்களெல்லாம் தப்பிச்சு இருக்கு; ரொம்ப நன்றி “

என்று பக்கிரிசாமியைக் கையெடுத்துக் கும்பிட்டார் , ரோஜா ஸ்டோர்ஸ் முதலாளி. அவர் பேசியதற்கு எதுவும் பதில் பேசாமல் சிரித்துக் கொண்டிருந்தார் பக்கிரிசாமி.

அந்த இரவு ரோஜா ஸ்டோர்ஸ் முன்னால் பக்கிரிசாமி படுக்கும் போது அவர் படுக்கும் இடத்திற்கு அருகே தண்ணீர் பாட்டில் மற்றும் சில சிற்றுண்டிகள் இருந்தன.

#சிறுகதை

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *