செய்திகள்

பக்கிங்காம், கூவம், அடையாறு வடிகால்களில் ரூ.5439.76 கோடியில் சுற்றுச்சூழல் மறு சீரமைக்கும் பணிகள்

Spread the love

சென்னை, பிப்.14–

பக்கிங்காம், கூவம், அடையாறு வடிகால்களில் ரூ.5439.76 கோடியில் சுற்றுச்சூழல் மறு சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று சட்டசபையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:–

வனங்களைப் பாதுகாப்பதும், வனவிலங்களைக் காப்பதும் அரசின் தலையாய கடமையாகும். 2019ஆம் ஆண்டிற்கான இந்திய வன நிலவர அறிக்கையின்படி, 2017ஆம் ஆண்டைக் காட்டிலும் 83.02 சதுர கிலோமீட்டர் அளவிற்கு தமிழ்நாட்டின் வன நிலப்பரப்பு அதிகரித்துள்ளது. மேற்கு மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில், புலிகள் மற்றும் அவைகளின் வாழ்விடங்களைப் பேணுவதில் மாநில அரசு மேற்கொண்ட முயற்சிகளின் பலனாக, 2014ஆம் ஆண்டில் 229 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை 2018ஆம் ஆண்டில் 264-ஆக அதிகரித்துள்ளது.

உயிர்ப்பன்மை பாதுகாப்பு – பசுமையாக்குதல் திட்டத்துக்கு ரூ.920 கோடி ஒதுக்கீடு

தமிழ்நாடு உயிர்ப்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் 2020–21ஆம் நிதியாண்டில் 920.56 கோடி ரூபாய் செலவில் தொடங்கப்படும். சமூகப் பங்களிப்புடன் சீர்குலைந்த காடுகளை மீட்டெடுப்பதற்கான ஒரு விரிவான திட்டத்தை 2,029.13 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்த நபார்டு நிதியுதவிக்காக, நிலைக்கத்தக்க வேளாண்மை, நீர்வள ஆதாரப் பாதுகாப்பு, கடலோர மண்டல மேலாண்மை, வனம் மற்றும் உயிர்ப் பன்முகத்தன்மை, நிலைக்கத்தக்க வாழ்விடங்கள், எரிசக்தி செயல்திறன், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சூரியவழி எரிசக்தி, அறிவுசார் மேலாண்மை என்ற ஏழு துறைகளை உள்ளடக்கிய பருவநிலை மாற்றம் குறித்த மாநில செயல் திட்டம் 2.0 தயாரிக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத் தழுவல் மற்றும் தணிப்புக் கொள்கையை செயல்படுத்துவதற்காக, நிதி ஆதாரங்களைத் திரட்டுவதற்கான அடிப்படைத் தளமாக இந்த செயல்திட்டம் அமையும்.

சிட்லபாக்கம் ஏரி மீட்டெடுக்கப்படும்

கூவம் நதியில் மேற்கொள்ளப்படும் சுற்றுச்சூழல் மறுசீரமைப்புப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. அடுத்த கட்டத்தில், பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் அதன் வடிகால்களையும் கூவம், அடையாறு நதிகளின் அனைத்து வடிகால்களையும் 5,439.76 கோடி ரூபாய் செலவில் அரசு மறுசீரமைக்கும். இத்திட்டத்தின் முதல் கட்டத்தில், நதிகளில் கழிவுநீர் கலப்பதை தவிர்க்கும் திட்டத்திற்காக அரசு ஏற்கெனவே 1,001 கோடி ரூபாய் அனுமதி வழங்கியுள்ளது. ஒட்டுமொத்த செலவினத்தில் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் குடியிருப்புகள் கட்டுமானத்திற்கான 3,339.90 கோடி ரூபாயும் அடங்கும். மீதமுள்ள நிதி, திடக்கழிவு மேலாண்மை, நகர்ப்புற நீர்நிலை மேம்பாடு, நீரோடைகள் புனரமைப்பு போன்ற பணிகளுக்காக செலவிடப்படவுள்ளது. பொதுப்பணித் துறை மூலம் 25 கோடி ரூபாய் செலவில், செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள சிட்லபாக்கம் ஏரியை மீட்டெடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். ஈரோடு மாவட்டம் ஓடத்துறை ஏரியை மீட்டெடுக்கும் பணிகள் 3.2 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்.

உயர்நிலைக் கல்வி நிலையம்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டிய, வன உயிரினப் பாதுகாப்பிற்கான உயர்நிலைக் கல்வி நிலையத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். இக்கல்வி நிலையத்திற்கு, தொடர் மானியமாக 1.35 கோடி ரூபாய் உட்பட, 2.5 கோடி ரூபாய் மொத்த மானியத்தை அரசு வழங்கும்.

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *