சிறுகதை

பக்கத்துச் சீட்டு – ராஜா செல்லமுத்து

மணி 10 ஐத் தாெடப் போகும் இரவு வேளையில் தன் வீட்டிற்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் நின்றிருந்தான் பரந்தாமன்.

அந்த இரவில் காற்று வீசாமல் உயிர் ஓவியங்களாக நின்று கொண்டிருந்தன மரங்கள் .ஒன்று கூடத் தலையாட்டவில்லை. வீதியெங்கும் வெப்பம் கக்கியது.

தன் கைகுட்டையை எடுத்து வழியும் வியர்வையை துடைத்துக் கொண்டிருந்தான் பரந்தாமன்.

எதிர்வரும் பேருந்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தவனுக்கு எரிச்சல் கூடியது.

தமிழ்நாட்டின் தலைநகர் 10 மணிக்குள் கூடு அடைய கிளம்பி விட்டன பேருந்துகள். ராத்திரி பஸ் விட்டா கொறஞ்சு போவாங்களா என்ன? நைட் டூட்டி பார்க்கிறவங்க எப்படி வீட்டுக்கு போவாங்க . இந்த மனிதர்களுக்கு இன்னொரு மனிதரைப் பற்றிய வருத்தம் இல்லையே. அவனவன் வாழ்க்கை. அவனவன் மேம்பாடு .அவனவன் சுயநலம் என்று தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று நொந்து கொண்டான்.

திருப்பத்தில் ஒரு பேருந்து திரும்பி வந்தது. அவ்வளவாகக் கூட்டம் இல்லை என்றாலும் ஆட்கள் நின்று கொண்டு தான் இருந்தார்கள்.

புளிமூட்டை போல மனிதர்களை ஏற்றிக் கொண்ட பேருந்து தன் இரு பக்க கதவுகளையும் பட்டென்று மூடிக்கொண்டது.

வேர்த்துக் கொட்டுது. இதுல கதவ வேற மூடி வச்சா விளங்கிரும் என்று கூறியேபடியே பரந்தாமன் நின்று கொண்டிருந்தான்.

அடுத்து வந்த நிறுத்தத்தில் இரண்டு பேர் இறங்க… ஜன்னலோர சீட்டு கிடைத்தது; அமர்ந்து கொண்டான் பரந்தாமன் .

அப்போதுதான் அவனுக்கு நிம்மதி வந்தது போல் நினைத்தான் . நின்ற பேருந்தில் புழுக்கம் இருந்தது. பேருந்து மெல்ல தன் சக்கரங்களை அசைத்து கிளம்பிய போது காற்று பரந்தாமன் முகத்தில் பட்டு அவனுக்குள் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தியது.

சந்தோஷப்பட்டு திரும்பிய அவன் நிம்மதி ஒரு நிமிடத்தில் உடைந்து போனது .

அவன் அருகில் ஒரு குப்பையள்ளும் தொழிலாளி அமர்ந்திருந்தான். அவனின் உடை கொஞ்சம் அழுக்காக இருந்தது. அதுவரையில் நிம்மதியாக அமர்ந்திருந்தவனுக்கு எதற்காக இந்தக் குப்பைகளும் தொழிலாளி தன் அருகில் அமர்ந்திருக்கிறான் என்று அவனுக்குள் ஒரு விதமான எரிச்சல் வர அந்த குப்பையள்ளும் தொழிலாளியைத் திரும்பித் திரும்பி பார்த்தவாறு அமர்ந்திருந்தான்.

அவைன் நிம்மதி உடனே பறிபோனது .அதுவரையில் விசாலமாக அமர்ந்திருந்தவன் குப்பையள்ளும் தொழிலாளி தன் பக்கத்து சீட்டில் அமரவும் இவனுக்கு குமட்டிக் கொண்டு வந்தது.

அவரின் உடலைத் தொட்டு விடக்கூடாது. கை உரசி விடக்கூடாது என்ற கவனிப்பில் ரொம்பவும் ஜாக்கிரதையாக அமர்ந்திருந்தான் பரந்தாமன்.

தன் பின் இருக்கையும் முன்னிருக்கையும் பார்த்துக் கொண்டான். யாரும் தன்னை பார்க்கிறார்களா? இப்படி ஒரு குப்பை தொழிலாளியுடன் அமர்ந்திருப்பது மற்றவர்களுக்கு அசிங்கமாக தெரிகிறதா? என்று சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டான்.

அந்த குப்பைள்ளும் தொழிலாளியோ தன் இரு கைகளையும் எடுத்து எதிர் சீட்டில் பிடித்தபடி இருந்தார். கொஞ்சம் கூட பரந்தாமன் கைகளையோ உடைகளையோ உரசாமல் அந்த குப்பையள்ளும் தாெழிலாளி பார்த்துக் கொண்டார் .

குண்டும் குழியுமாக இருந்த தார்ச் சாலையில் பேருந்து குலுங்க ஒரு சில நேரம் அந்த குப்பைள்ளும் தொழிலாளி பரந்தாமன் மீது சாய்ந்த போது அவனுக்கு கோபம் தலைக்கேறியது.

ஏன் இந்த மனிதன் நம்மிடம் அமர்ந்து கழுத்தை அறுக்கிறான்.? வேறு எங்காவது அமர வேண்டியதுதானே? என்று அவன் முன்னும் பின்னும் திரும்பி ஏதாவது காலி இடம் இருக்கிறதா என்று நோட்டமிட்டான் .

ஆனால் எல்லோரும் இருக்கையில் அமர்ந்து இருந்தார்கள் . எந்த இருக்கையும் காலியாக இல்லை என்பதைத் தெரிந்து கொண்டான். நாம் இறங்கும் நிறுத்தம் வரும் வரை இந்தக் ஆளுடன் தான் பயணிக்க வேண்டும் போல தலை எழுத்து என்று நினைத்துக் கொண்டான் பரந்தாமன் .

வேறு வழி இன்றி பல்லை கடித்துக் கொண்டும் தன் கைகுட்டையை எடுத்து மூக்கை துடைப்பது போல மூக்கை பொத்திக்கொண்டும் அந்த ஆள் தன்னை உரசி விடக் கூடாது என்ற கவனத்தில் அவனது பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது.

நான்கு நிறுத்தங்கள் தள்ளித்தான் அவன் இறங்க வேண்டும் என்று அவனுக்குத் தெரிந்தால் கூட அந்த நான்கு நிறுத்தமும் நானூறு நிறுத்தங்களாக அவன் எண்ணத்தில் கனத்தது .

எப்படியும் இவனுடன் தான் நாம் பயணித்தாக வேண்டும் எழுந்து நின்றால் வேறு மாதிரி நினைப்பார்கள். என்ன செய்வது ? என்று நினைத்துக் கொண்டே வந்தான்.

இன்னும் இரண்டு நிறுத்தங்கள் தான் என்று மனதுக்குள் சந்தோஷப்பட்டான்.

அடுத்த நிறுத்தம் அடுத்த நிறுத்தத்தில் அவன் இறங்கி ஆக வேண்டும். அந்த ஆளைத் தொடாமலே எக்ஸ்கியூஸ்மீ என்று சொல்லி இறங்கணும் என்று சைகையில் சொன்ன போது அந்தத் ஆளு பரந்தாமன் இறங்குவதற்கு வழி விட்டார்.

தப்பித்தோம், பிழைத்தோம் என்று கம்பியைப் பிடித்து வெளியே வந்த பரந்தாமன் சீக்கிரம் பேருந்தில் இருந்து இறங்கி விட வேண்டும் என்ற முனைப்பில் ஓடிக்கொண்டிருந்த பேருந்தில் இருந்து இறங்க பேருந்து நிறுத்தத்தின் அருகில் இருந்த சாக்கடையில் பொத்தென்று விழுந்தான்.

அங்கு கூடி இருந்தவர்களும் பேருந்தில் இருந்த மொத்த ஆட்களும் பரந்தாமன் விழுந்ததை வேடிக்கை தான் பார்த்தார்களே ஒழிய சாக்கடைக்குள் கைவிட்டு அவனை தூக்கவோ அல்லது ஒரு மனிதன் இப்படி விழுந்து விட்டான் என்று பதட்டப்படவாே இல்லை. மாறாக ஐயோ ஒருவன் சாக்கடையில் விழுந்து விட்டான் என்று சாதாரணமாகச் சொன்னார்கள் .

ஒரு சிலர் தங்கள் செல்போன்களை ஆன் செய்து வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார்கள்.

இதைக் கவனித்த குப்பையள்ளும் தொழிலாளி பேருந்தில் இருந்து குதித்து சாக்கடைக்குள் விழுந்த பரந்தாமனை அலாக்காகத் தூக்கினார் . தூக்கிதோடு மட்டுமல்லாமல் அவன் கை, கால் முகம் என்று அத்தனையும் துடைத்து விட்டு அருகில் இருக்கும் டீக்கடையில் இருந்த தண்ணீரை எடுத்து தலைவழியாக ஊற்றி, சட்டை, முகம், கைகால் என்று ஒட்டியிருந்த சாக்கடையை துடைத்து விட்டார்.

ஒருவிதமாக விழித்துக் கொண்ட பரந்தாமன் தன்னைத் தூக்கியது யார் என்று கண்களை அகல திறந்து பார்த்தான்.

சார் உங்களுக்கு ஒன்னும் இல்ல. நான் உங்கள சாக்கடையில இருந்து தூக்கிட்டேன் .வீட்டுக்கு போங்க. குளிங்க; சரியாப் போகும். ஏதோ கெட்ட நேரம். நீங்க எதையோ நினைச்சுட்டு வந்து இறங்கியிருக்கிங்க. அதான் சாக்கடையில விழுந்துட்டீங்க .

நம்ம எண்ணமும் செயலும் சுத்தமா இருந்தா நமக்கு எந்த தீங்கும் வராது சார். போங்க வீட்டில குளிச்சிட்டு சாமியக் கும்பிடுங்க. உங்க வீட்டுல உங்க பொண்டாட்டி பிள்ளைக எல்லாம் காத்துகிட்டு இருப்பாங்கன்னு நினைக்கிறேன் என்று கை கொடுத்து அனுப்பினார் குப்பையள்ளும் தாெழிலாளி

சற்று தூரம் சென்ற பரந்தாமனை பார்த்தவர் மறுபடியும் பின்னால் ஓடிய அந்த குப்பையள்ளும் தொழிலாளி பரந்தாமன் முதுகின் பின்னால் இருந்த சேற்றை தன் இரு கைகளைக் கொண்டு துடைத்து விட்டார்.

இதற்கு முன் அதே குப்பையள்ளும் தொழிலாளி தன் பக்கத்து சீட்டில் அமர்ந்த போது அவரை உரசி விடக் கூடாது. தாெட்டுவிடக்கூடாது என்ற கவனத்தில் இருந்த பரந்தாமனை அதே தொழிலாளி தான் தன்னைக் காப்பாற்றி இருக்கிறார். இவர் தான் மனிதர் என்று நினைத்தவன் அந்தக் குப்பையள்ளும் தொழிலாளியைத் தன் இரு கைகளையும் எடுத்து நெஞ்சோடு அணைத்துக் கொண்டு தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தான்.

சார் உங்களுக்கு ஒன்னும் இல்ல சார் . வீட்டுக்கு போங்க குளிச்சா சரியா போகும் சார்.

நான் வேணா உங்கள வீடு வரைக்கும் வந்து விட்டுட்டு வரட்டுமா?. என்று அந்த குப்பையள்ளும் தொழிலாளி பரந்தாமனைத் தேற்றினார் இன்னதென்று தெரியாமல். தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தான் பரந்தாமன்.

அந்த அழுகையின் அர்த்தம். எதற்காக அவன் அழுகிறான்? என்று அவனுக்கு மட்டும் தான் தெரியும் .

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *