பர பரவென இயங்கிக் கொண்டிருந்தது
கன்னிமாரா நூலகம்.
நூலகத்திற்குச் சிலர் படிக்க வருகிறார்கள். சிலர் தூங்க வருவார்கள். சிலர் பொழுதுபோக்க வருவார்கள். சிலர் எதுக்கு வருகிறோம் என்று தெரியாமலேயே வருகிறார்கள்.
கோபால் ஒரு புத்தகப் புழு. படிப்பாளி ; எப்பவும் புத்தகமும் கையுமாகவே இருப்பான். இலக்கியங்களில் இறங்கி, கவிதைகளில் முத்துக்குளித்து கதைகளில் கரையேறும் கற்பனைக்காரன்.
அன்று இரண்டாவது மாடியில் இயங்கும் தமிழ்ப் பிரிவில் அடுக்கி வைக்கப்பட்ட புத்தகங்களில் ஒன்றை எடுத்தான் அந்தப் புத்தகத்தின் பெயர் “
பக்கங்கள் ” புத்தகத்தின் தலைப்பே பக்காவாக இருந்தது. அந்தப் புத்தகத்தை எடுத்துப் பக்கங்களைப் புரட்ட ஆரம்பித்தான்.
அது ஒரு திகில் கலந்த மர்மக் கதை. ஒவ்வொரு பக்கத்த அவன் வாசிக்கும் போது இதயத்துடிப்பு இரண்டு மடங்கானது .
அக்கம் பக்கம் இருப்பவர்களைக் கூட மறந்து அனிச்சையாக எச்சிலைத் தொட்டுப் பக்கங்களை புரட்டிக் கொண்டே இருந்தான்.
கதை போகும் வேகத்திற்கு அவன் கண்களும் உருண்டு உருண்டு சென்றன. எப்படியும் அந்த மர்மக்கதையின் முடிவு என்னவாக இருக்கும் ? என்று கடைசியில் தான் தெரியும் என்ற ஆவல் அவனுக்குள் மூழ்கிக் கிடந்தது.
காலை 11 மணிக்கு வாசிக்க ஆரம்பித்த பக்கங்கள் பக்கத்தில் கதையை மதியம் மூன்று மணி ஆன போதும் கூட அவன் மதிய உணவை உண்ணவில்லை. கதை அவனைத் தின்று காெண்டிருந்தது. அருகில் இருப்பவர்கள் கூட அவனை ஒரு மாதிரியாக பார்த்துச் சென்றார்கள்.
என்ன இவன், இந்தப் புத்தகத்தை இவ்வளவு ஊர்ந்து படிச்சிட்டு இருக்கான் .அதுல அப்படி என்ன இருக்கு? என்று அவனைச் சற்று முற்றும் பார்த்துவிட்டு எழுந்து சென்றார்கள்.
கொஞ்சம் கூட அவன் கவனம் சிதையாமல் பக்கங்கள் பக்கங்களிலேயே பதிந்து இருந்தது.
இன்னும் 50 பக்கம் தான் இருக்கிறது அதற்குள் இந்த மர்ம கதையின் மர்மம் விலகிவிடும் என்று வாசித்துக் கொண்டே இருந்தான் காேபால்.
50 பக்கங்கள் தாண்டியவுடன் கடைசி அத்தியாயத்தின் பக்கங்கள் கிழிக்கப்பட்டிருந்தன திருப்பித் திருப்பி படித்துப் பார்த்தான். புத்தகம் அவ்வளவுதான் இருந்தது.
முன் பக்கம் புத்தகத்தின் பக்கங்களைப் பார்த்தான்; 450 பக்கங்கள் என்று இருந்தன.
ஆனால் பக்கங்கள் 400 மட்டுமே இருந்தன.
என்ன இது? 50 பக்கத்தை காணலையே? என்று புத்தகத்தை மறுபடியும் மறுபடியும் பார்த்தான். கையில் இருந்த காசை தொலைத்த குழந்தை போல அந்தப் புத்தகத்தை தேடினான்.
புத்தகத்தை பாதுகாக்கும் உதவியாளரிடம் சென்றான்.
சார் இந்த புத்தகத்தில 50 பக்கத்தை காணோம் எங்கே ? என்று கேட்டான்.
அவனை ஒரு மாதிரியாகப் பார்த்த புத்தக காவலர் எங்களுக்கு தெரியாதுங்க. அவ்வளவுதான் இருக்கு
என்று பொறுப்பில்லாமல் பதில் சொன்னார்.
என்ன சார் இவ்வளவு சாதாரணமா சொல்றீங்க? 450 பக்க இருக்க வேண்டிய புத்தகத்தில 400 பக்கம் தான் இருக்கு. மிச்ச 50 பக்கம் எங்க?
என்று அவன் கேட்டபோது, அதற்கு மேல் அவரிடம் பேசாதவர் அருகில் இருந்த கணினியில் கண் பதித்தார்.
மீதமுள்ள 50 பக்கத்தை படிக்காமல் அவனுக்கு மர்மம் விலகாது என்று மண்டையில் மையூரியது.
அத்தனை பீரோக்களையும் தேடினான். ஏதாகிலும் வேற புத்தகத்தில் ஒளிந்து இருக்கிறதா? என்று அந்த 50 பக்கத்தை காணவே இல்லை.
அவனுக்குப் பைத்தியம் பிடித்தது போலானது.
கடைசியில் அந்த மர்ம கதையில் என்ன நடந்திருக்கும் ?ஒருவேளை அந்தப் பெண் என்ன ஆனாள்? அவளுடன் வந்த குழந்தை என்ன ஆனது? அந்தக் கடைசி அத்தியாயத்தை வாசிக்காமல் கலவரம் கண்டது அவனது மனது.
8 மணி வரை இயங்கும் அந்த நூலகத்தில் எட்டாத இடங்களில் எல்லாம் கூட அந்தக் கதையின் கடைசிப் பக்கங்களை தேடிப் பார்த்தான். அது அகப்படவே இல்லை.
அவன் தேடுவதை பார்த்து அங்கு இருந்த நூலக அலுவலகப் பெண்மணி
தம்பி அந்த புத்தகம் அவ்வளவு தான் இருக்கு. 50 பக்கத்தை காணல. யாரோ கிழிச்சிட்டுப் போயிட்டாங்க.
என்று கோபாலிடம் குறையாகச் சொன்னாள்.
அதான் எப்படி கிழிச்சிட்டு போனாங்க ? நீங்க எல்லாம் சம்பளம் வாங்குற அரசாங்க ஊழியர் தானே?
என்று காட்டு கத்தல் கத்தினான். அமைதியாக இருக்கும் நூலக வளாகம் முழுவதும் இவன் போட்ட சத்தத்தில் எல்லோரும் இவனைத் திரும்பிப் பார்த்தார்கள்.
கிறுக்கு புடிச்சவனா இருப்பான் போல ? அதான் மிச்சப் பக்க இல்லன்னு சொல்றாங்க. விட்டுட்டு போக வேண்டியது தானே? அதை விட்டுட்டு தேவையில்லாம இப்படி கத்துறானே? என்று ஆளாளுக்கு பேசினார்கள். அவனின் அவஸ்தையை அறிந்து கொண்டு ஒரு பெரியவர் அவனை அருகில் அழைத்தார் .
தம்பி இங்க வாங்க . பக்கங்கள் புத்தகத்தை படிச்சீங்களா? என்றார் அவனின் தோள் தொட்டு,
ஆமா என்ற தலையாட்டினான் கோபால்.
அந்த 50 பக்கம் கதைய நான் சொல்றேன் என்று கன்னிமாரா நூலகத்தின் எதிரில் உள்ள இடத்தில் அமர்ந்து கதையைச் சொல்ல ஆரம்பித்தார்.
அதைக் கேட்க கேட்க கோபாலுக்கு கோபம் தணிந்தது.
ஐயா அந்த கதையை அச்சுப் பிசகாம அப்படியே சொல்றீங்களே நீங்க யார்யா ?என்று கேட்டான் கோபால்.
தம்பி அந்த புத்தகத்தை எழுதின ஆசிரியரே நான் தான்
என்றார் அந்தப் பெரியவர்.
அதுவரையில் அவனைச் சுற்றி இருந்த கவலை மேகங்கள் எல்லாம் கலைந்து சென்றன.
ரொம்ப நன்றிங்க
என்று அவரைக் கையெடுத்துக் கும்பிட்டான் கோபால். முழுக் கதையை வாசித்த திருப்தி அவனுக்குள் இருந்தது.
மறுபடியும் அந்த இரண்டாவது மாடிக்குள் நுழைந்து பக்கங்கள் புத்தகத்தை புரட்டினான்.
அதன் முதல் பதிப்பை பார்த்தான் 1936 என்று இருந்தது.
தம்பி அந்த புத்தகத்தை ஏன் படிக்கிறீங்க? அதான் மீதம் இல்லையே அத வச்சிருங்க வேற கதையை படிங்க என்றார் நூலக உதவியாளர்
இல்ல அந்த ஆசிரியரே மிச்ச கதையை எங்கிட்ட சொல்லிட்டார் என்று கோபால் சொன்னபோது
என்னது ஆசிரியர் மிச்சக் கதைய சொல்லிட்டாரா ?அந்த ஆசிரியர் இறந்து போயி 50 வருஷம் ஆகுது. அவரு எப்படி உங்களுக்கு மிச்சக்கதைய சொன்னாரு ? என்று நூலக உதவியாளர் கேட்க
இல்ல அந்த தாடி வச்ச பெரியவர் என் கிட்ட சொன்னாரு
என்று கோபால் சொன்னான்.
இருக்க முடியாது தம்பி அவர் இறந்து 50 வருஷத்துக்கு மேல் ஆச்சு. நம்பிக்கை இல்லைன்னா. இங்க வாங்க
என்று தன் முன்னால் உள்ள கணினியைத் திறந்து பக்கங்கள் பக்கத்தில் ஆசிரியர் குறிப்பைக் காட்டினார்.
அதில் ஆசிரியரின் பிறப்பு, இறப்பு, அவரிடம் புகைப்படம் இருந்தது.
இவர்தான் என்கிட்ட மீதிக் கதையை சொன்னார்.
என்று கோபால் சொன்ன போது
என்ன தம்பி உளறீங்க? எதுவும் கனவு ஏதும் கண்டீங்களா?
என்றார் அந்த நூலக உதவியாளர்
இல்ல சார் வெளிய ஒக்காந்து மிச்ச கதையை சொன்னாரே என்று அடித்துச் சொன்னான் கோபால்.
அவனை நூலகத்திலிருந்தவர்கள் எல்லாம் ஒரு மாதிரியாக பார்த்தார்கள்:
அப்படியானா, நம்முடன் பேசியது யார் ?என்று அவனுக்கு குழப்பம் மேலிட்டது .
பித்துப் பிடித்தவன் போல அமர்ந்திருந்தான். அவனால் அதை நம்பவே முடியவில்லை. நமக்கு நடந்தது நிஜமா? கனவா?
என்று அவனுக்குள்ளே ஒரு போராட்டம் நடந்து கொண்டிருந்தது.
அடுத்த ரேக்கில் இருந்து இன்னொரு புத்தகத்தை எடுத்தான்
பாதை என்று அந்தப் புத்தகம் தலைப்பிடப்பட்டிருந்தது.
அந்த புத்தகத்தில் எந்த பக்கங்களும் கிழிக்கப்படவில்லை
ஆனால், அதைப் புரட்டுவதற்கு காேபாலுக்குப் பயம் ஏற்பட்டது.
அந்த புத்தகமும் 1936 இல் பதிக்கப்பட்டதாக இருந்தது.என்ன நடக்குமோ? என்று பயந்து கொண்டே பாதை புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தான்.
திக்திக்கென்று இருந்தது…..