நோபல் அறக்கட்டளை அறிவிப்பு
ஸ்டாக்ஹோம், செப்.5–-
நோபல் பரிசு விழாவில் கலந்து கொள்ள ரஷியா, ஈரான், பெலாரஸ் நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்படாது என நோபல் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
நோபல் பரிசு என்பது உலகளவில் பெரிதும் மதிக்கப்படும் ஒன்றாகும். இது சர்வதேச அளவில் சமூகத்துக்கு அளப்பரிய பங்காற்றுபவர்களுக்கு வழங்கப்படுகிறது. சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நடைபெறும் இந்த விழா ஆண்டுதோறும் டிசம்பர் 10–-ந் தேதி நடைபெறும்.
இந்த விழாவில் கலந்துகொள்வதற்கு சுவீடனில் உள்ள நோபல் அறக்கட்டளை சார்பில் அழைப்பு விடுக்கப்படும். ஆனால் உக்ரைன் மீதான படையெடுப்பு, மனித உரிமை மீறல் உள்ளிட்ட பல காரணங்களால் கடந்த ஆண்டு ரஷியா, ஈரான், பெலாரஸ் ஆகிய நாடுகளின் தூதர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
இந்த ஆண்டுக்கான விழா நடைபெற இன்னும் ஒருசில மாதங்களே உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த ஆண்டு புறக்கணிக்கப்பட்ட நாடுகளுக்கு இந்த முறை அழைப்பு விடுக்கப்படும் என நோபல் அறக்கட்டளை கூறியது. இதற்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்தன. மேலும் சுவீடனில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விழாவை புறக்கணிப்பதாக அறிவித்தனர்.
இதனையடுத்து நோபல் பரிசு அறக்கட்டளை நிறுவனம் தனது முடிவை மறுபரிசீலனை செய்வதாக கூறியது. அதில் ரஷியா, ஈரான், பெலாரஸ் ஆகிய 3 நாடுகளின் தூதர்களுக்கும் இந்த விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் வழக்கமான நடைமுறையின்படி அமைதிக்கான நோபல் பரிசு விழாவுக்கு அனைத்து நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. அமைதிக்கான நோபல் பரிசு நார்வே தலைநகர் ஓஸ்லோவில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. நோபல் அறக்கட்டளையின் இந்த முடிவை வரவேற்று பல நாடுகளின் தலைவர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.