செய்திகள்

நோபல் பரிசு பெற்ற மியான்மர் ஜனநாயக கட்சித் தலைவர் ஆங் சான் சூகிக்கு மொத்தமாக 33 ஆண்டுகள் சிறை தண்டனை

ராணுவ நீதிமன்றம் அறிவிப்பு

நைபிடோவ், டிச. 31–

மியான்மர் நாட்டின் ஜனநாயகக் கட்சித் தலைவரான நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூகிக்கு அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் மேலும் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, மொத்த தண்டனை காலத்தை 33 ஆண்டுகளாக உயர்த்தியுள்ளது.

மியான்மரில் கடந்த 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற தோதலில் ஆங் சான் சூகி (வயது 77) தலைமையிலான தேசிய ஜனநாயகக் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. எனினும், அந்தத் தோதலில் முறைகேடுகள் நடைபெற்றக் கூறி அவரது ஆட்சியை அந்நாட்டு ராணுவம் கடந்த ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி கலைத்தது.

அத்துடன், அவரையும் மற்ற அரசியல் தலைவர்களையும் கைது செய்து அவர்கள் மீது பல்வேறு வழக்குகளை ராணுவ ஆட்சியாளர்கள் பதிவு செய்துள்ளனர். அந்த வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவா்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, ஆயுதப் போராட்டத்தை ஊக்குவித்ததாக ஆங் சான் சூகி ஆட்சியில் எம்.பி.யாக இருந்தவர் உள்ளிட்ட 4 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, அந்த தண்டனை கடந்த ஜூலை மாதம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு சா்வதேச நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

33 ஆண்டுகள் சிறை தண்டனை

இந்த நிலையில், அனுமதியில்லாமல் கம்பியில்லா தொலைத் தொடர்பு சாதனங்களை வைத்திருந்தது, கொரோனா விதிகளை மீறியது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளில் ஆங் சான் சூகிக்கு ஏற்கெனவே 26 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று மேலும் 5 வழக்குகளை விசாரித்த மியான்மர் ராணுவ நீதிமன்றம் தற்போது மேலும் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஆங் சான் சூகிக்கு மொத்தமாக 33 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது

ஏற்கெனவே, மியான்மரில் மக்களாட்சியை அமைக்க வலியுறுத்திப் போராடி வந்த ஆங் சான் சூகியை ராணுவ ஆட்சியாளர்கள் பல ஆண்டுகளாக சிறையில் அடைத்திருந்தனா். அந்தப் போராட்டத்துக்காக, ஆங் சான் சூகிக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது நினைவு கூரத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *