அமர்த்தியா சென் யோசனை இந்தியாவுக்கு தேவையில்லை; வெளிநாடு செல்லட்டும்
கொல்கத்தா, ஜன. 19–
பிரபல பொருளாதார நிபுணரும், நோபல் பரிசு பெற்றவருமான அமர்த்தியா சென் வெளிநாடு செல்லட்டும், அவரது ஆலோசனை இந்தியாவுக்கு தேவையில்லை என்று பா.ஜ.க.வின் சுவேந்து அதிகாரி சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
பிரபல பொருளாதார நிபுணரும், நோபல் பரிசு பெற்றவருமான அமர்த்தியா சென் அண்மையில் டி.வி. சேனலுக்கு அளித்த பேட்டியில், குஜராத் மாநிலத்தில் உள்கட்டமைப்பு நன்றாக இருக்கலாம், ஆனால் சிறுபான்மையினருக்கோ அல்லது பெரும்பான்மையினருக்கோ மோடி போதுமான அளவு செய்யவில்லை என்று விமர்சனம் செய்து இருந்தார்.
மேலும், மேற்குவங்க முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸின் தலைவியுமான மம்தா பானர்ஜிக்கு பிரதமராகும் தகுதி இருப்பதாக தெரிவித்தார். அமர்த்தியா சென்னின் கருத்துக்கு பா.ஜ.க. உடனடியா பதிலடி கொடுத்தது. இந்நிலையில் தற்போது, மேற்கு வங்க பா.ஜ.க. எம்.எல்.ஏ.வும். அம்மாநில சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவருமான சுவேந்து அதிகாரி, அமர்த்தியா சென்னை விமர்சனம் செய்துள்ளார்.
மோடியை விரும்பவில்லை
இது தொடர்பாக சுவேந்து அதிகாரி கூறியதாவது:–
கொரோனா வைரஸ் நாட்டை தாக்கியபோது அமர்த்தியா சென் எங்கே இருந்தார்?. 2021 மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலை தொடர்ந்து வங்கத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறையில் இந்துக்கள் கொல்லப்பட்டபோது அமர்த்தியா சென் எங்கே இருந்தார்? 2014 மக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்று நரேந்திர மோடி ஆட்சி வருவதற்கு முன், மோடி பிரதமராவதை விரும்பவில்லை என்று அமர்த்தியா சென் தெரிவித்தார்.
2019ம் ஆண்டும் இதே கருத்தை அமர்த்தியா சென் கூறினார். ஆனால் பா.ஜ.க. 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றது. 2024 தேர்தலிலும் மோடி அதிக இடங்களில் வெற்றி பெறுவார். அமர்த்தியா சென் ஒரு பக்கச் சார்பானவர், இப்படி பேசக்கூடாது. அவர் வெளிநாடு செல்லட்டும்; அவரது ஆலோசனை இந்தியாவுக்கு தேவையில்லை. அவர் ஆலோசனை வழங்க வேண்டும் என்றால், தலிபான் ஆளும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்கு தனது யோசனைகளுக்கு வழங்க முடியும் என சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.