டெல்லி, ஏப். 16–
நேஷனல் ஹெரால்ட் பத்திரிக்கை தொடர்பான வழக்கில் சோனியா, ராகுல் காந்தி ஆகியோருக்கு எதிராக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அக்கட்சியின் மூத்த தலைவராக இருந்த ஆஸ்கர் பெர்னாண்டஸ் ஆகியோரால் கடந்த 2010-ஆம் ஆண்டு யங் இந்தியன் நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையை நடத்தி வருகிறது. தற்போது யங் இந்தியன் நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குதாரர்களாக சோனியா காந்தி, அவரின் மகள் பிரியங்கா காந்தி, மகன் ராகுல் காந்தி ஆகியோர் உள்ளனர்.
குற்றப்பத்திரிகை தாக்கல்
இந்த நிறுவனத்தில் நிதி முறைகேடுகள் நிகழ்ந்ததாக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு எதிராக அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
இவர்களுடன் சேர்த்து காங்கிரஸ் மூத்த தலைவர்களான சாம் பித்ரோடா, சுமன் துபே உள்ளிட்டோரின் பெயர்களையும் குற்றப்பத்திரிகையில் அமலாக்கத் துறை குறிப்பிட்டுள்ளது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணைக்காக வழக்கு இம்மாதம் 25ஆம் தேதிக்கு எடுத்துக்கொள்ளப்படும் என சிறப்பு நீதிபதி விஷால் கோங்கே தெரிவித்துள்ளார்.
இது குறித்து மூத்த வழக்கறிஞரும் காங்கிரஸ் தலைவருமான அபிஷேக் மனு சிங்வி, “அமலாக்கத்துறையின் வாதங்களை முழுமையாக எதிர்த்து அனைத்து கோணங்களிலும் வாதாடுவோம். இந்த வழக்கில் சோனியா, ராகுலுக்கு எதிராக சட்டப்பூர்வமாக எதுவும் இல்லாததால், அரசாங்கம் பழிவாங்கல் செயலில் ஈடுபடுகிறது என்று தெரிவித்துள்ளார்.