செய்திகள்

நேற்று 41,325 பேருக்கு பரிசோதனை; ஒரே நாளில் 3,617 பேர் டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் பாதிப்பு 1 லட்சத்து 38 ஆயிரமாக உயர்வு

நேற்று 41,325 பேருக்கு பரிசோதனை;

ஒரே நாளில் 3,617 பேர் டிஸ்சார்ஜ்

சென்னை, ஜூலை 13–

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 3 ஆயிரத்து 617 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள். சென்னையில் நேற்று 1,168 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-தமிழகத்தில் நேற்று 2,543 ஆண்கள், 1,700 பெண்கள் மற்றும் மூன் றாம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 4,244 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4,210 பேர் ஏற்கெனவே பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள். இவைதவிர வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 34 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் 1,168 பேர்

அதிகபட்சமாக சென்னையில் 1,168 பேருக்கும் காஞ்சிபுரத்தில் 385 பேருக்கும் மதுரையில் 319 பேருக்கும் செங்கல்பட்டில் 245 பேருக்கும் திருவள்ளூரில் 232 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 38 ஆயிரத்து 470 ஆக அதிகரித்துள்ளது. இதில் சென்னையில் மட்டும் 77 ஆயிரத்து 338 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அரசு மருத்துவமனைகளில் 43 பேர், தனியார் மருத்துவமனைகளில் 25 பேர் என 68 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். சென்னையில் 32 பேர் உயிரிழந்தனர். கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,966 ஆக உள்ளது.

கொரோனாவில் இருந்து 3 ஆயிரத்து 617 பேர் நேற்று குணம் அடைந்தனர். இதுவரையில் 89 ஆயிரத்து 532 பேர் குணம் அடைந்து உள்ளனர். 46 ஆயிரத்து 969 சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 12 வயதுக்கு உட்பட்ட 6 ஆயிரத்து 843 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 16 ஆயிரத்து 870 முதியவர்களும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதில் 12 வயதுக்கு உட்பட்ட 203 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 571 முதியவர்களும் நேற்று பாதிக்கப்பட்டுள்ளனர்.

41,325 பேருக்கு பரிசோதனை

தமிழகத்தில் நேற்று 41 ஆயிரத்து 325 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தமிழகத்தில் 105 ஆய்வகங்களில் இதுவரை 15 லட்சத்து 42 ஆயிரத்து 234 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 77,338 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *