செய்திகள் நாடும் நடப்பும்

நேற்று, இன்று, நாளை ; ஒளிவிளக்கு, கலங்கரை விளக்கம்: எம்ஜிஆர்… எம்ஜிஆர்… எம்ஜிஆர்…


ஸ்டீபன் ரஃபேல்


‘‘மக்கள் திலகம் எம்ஜிஆரின் 107வது பிறந்த தின விழாவை நாம் மகிழ்ச்சியுடன் கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம்.

மாபெரும் வள்ளலாய், மக்களை தன் நடிப்பால் கட்டி வைத்த கலைத்திலகமாய், செயற்கரிய பல செயல்களை செய்து அண்ணாவின் தம்பியாய், தமிழகத்தின் அரசியல் வானில் இடறல் ஏற்பட்ட போது மக்களுக்கு குளிர் நிலவாய் ஒளி வீசி திகழ்ந்தவர் தான் நம் மக்கள் திலகம் எம்ஜிஆர்.

தலைப்பைப் படித்தவுடன் ‘என்ன தலைப்பு’ என்று இன்றைய இளைய தலைமுறைகள் சிந்திக்கலாம். அவர்கள் சிந்திக்கும்போது அதற்கான சரித்திரத்தை நாம் கூறும்போது புரட்சித்தலைவரின் புகழை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்லலாம் என்பது உறுதி.

புரட்சித்தலைவர் திரையுலக பயணத்தை முடித்து அரசியலில் முதல்வராய் ஏற்றம் பெற்ற பொழுது என் போன்றவர்களுக்கு வயது ஆறு தான். அந்த சிறு வயதில் பார்க்கப்பட்ட திரைப்படங்களின் மூலம் மனதில் அன்பின் அரசனாய் குடி புகுந்தார் நம் மக்கள் திலகம்.

காலப்போக்கில் மெல்ல மெல்ல வளரும் பொழுது அப்பொழுது வெளியான திரைப்படங்களுக்கு இணையாக புரட்சித்தலைவரின் திரைப்படங்கள் வசூலை வாரிக் குவித்தது. அவர் நிகழ்கால கதாநாயகனாகவே திகழ்ந்தார். அதனால் பல திரையரங்குகளில் அவர் திரைபடங்களில் பிரகாசித்தார் ஒளி விளக்காய்.

அன்பின் அவதாரம்

இன்னொரு பக்கம் எந்தப் பத்திரிகையைத் திருப்பினாலும் அன்பின் அவதாரமாய் தொப்பி, கண்ணாடி உடன் காட்சியளித்த போது எம்ஜிஆர் என்று கேட்டு வளர்ந்த தலைமுறை நாங்கள் இவர்தான் அவர் என்ற சந்தேகம் அந்த வயதில் ஏற்பட்டதும் உண்டு.

அப்படி ஒரு காலகட்டத்தில் வளர்ந்த எங்களை போன்றவர்கள் எவ்வளவு காலமானாலும் அவருக்கு இணை அவர்தான் என்று புல்லரித்தும் போனோம்.

அன்று, நான் நேரில் கண்ட சாட்சியாய் எம்ஜிஆரின் நடிப்பையும், சண்டைக் காட்சிகளையும், நறுக்குத்தெரித்த சிறு சிறு அறிவார்ந்த சமுதாய சிந்தனை உள்ள வசனங்களும், பாடல் காட்சிகளும், பாடல் வரிகளும் என்று கால நேரம் போவது தெரியாமல், சலிக்காமல் பேசி பேசி மகிழ்ந்தவர்கள் எம்ஜிஆர் ரசிகர்கள்.

அப்போது நாங்கள் பார்த்த எம்ஜிஆர் ஒரு மாபெரும் கதாநாயகன். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதலமைச்சர். காலப்போக்கில் நாங்கள் சற்றே 12, 15, 18 வயதை தொட்ட போது அவர் இந்த பூ உலகை விட்டு மறைந்தார்.

இவர்தான் நாங்கள் பார்த்த எம்ஜிஆர். ஆனால் மறக்க முடியாத சக்கரவர்த்தியாய் வாழ்ந்ததால் அவர் மறைந்து 20, 25 ஆண்டுகளான பிறகும் தொலைத்தொடர்பு வசதிகள் மூலம் யூடியூப், வாட்ஸ்அப் என வாய்ப்புகள் ஏற்பட்டபோது மீண்டும் அவர் தன் சாம்ராஜ்யத்தை தன் அன்பு ரசிகர்கள் மூலமாக இடம் பெற்று விட்டார் அந்த அன்பின் நாயகன்.

ஆம், இன்று அவருடைய வரலாற்று சம்பவங்களை கேட்கும் பொழுது, அவருடைய திரைப்படத்தில் அல்லாத பல புகைப்படங்களைப் பார்க்கும் போதும் மக்கள் திலகம் எப்படி இத்தனை பேர் உள்ளத்தில் நீக்கமற நிறைந்திருக்கிறார் என்பது புரிய வருகிறது.

அடடா! அவரை சுற்றி எத்தனை நிகழ்ச்சியான சம்பவங்கள்.

அவரை எம்.ஆர். ராதா, எம்ஜிஆரை சுட்டபோது “என்னென்ன இப்படிப் பண்ணிட்டீங்க” என்று கேட்டவர். இந்த அற்புத நிகழ்வை நினைவுப்படுத்தி புல்லரித்து மகிழ்ந்தவர் ம.பொ.சி அவர்கள்.

‘தொழுநோய்’ தேசபக்தர் :

கட்டிப் பிடித்தார்

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் தூங்கிக் கொண்டிருந்த கலைவாணரை பார்க்க சென்றவர். தூங்கிக் கொண்டிருந்த அவரை எழுப்பாமல் தலையணைக்கடியில் பராமரிப்பு செலவிற்கு பணம் வைத்து சென்றதும், வறுமையில் வாடும் கலைஞர்களுக்கு பரிசளிப்பு விழா. அன்று 1979 ஜனவரி 15ஆம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் மதுரை சுந்தர பாரதி என்ற கவிஞர், தொழுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு பரிசளிக்க. முடிவு செய்யப்பட்டு இருந்தது. அவர் எம்ஜிஆரிடம் பரிசு வாங்க வரும்பொழுது உடன் வந்த கவிஞரின் செயலாளர் நரசிம்மன், “இவர் தேசபக்தர் சுப்பிரமணிய சிவாவின் பிரதம சீடர்” என்று அறிமுகப்படுத்த உடன் கட்டித் தழுவி பரிசளித்தார் எம்ஜிஆர். அரங்கில் இருந்தவர்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டுப் போனார்கள்.

பாட்டி கொடுத்த சோடா

வயதான பாட்டி ஆசையுடன் வாங்கி வந்த சோடாவை வாங்கியவர். அந்த பாட்டியை அப்படியே பாசத்துடன் கட்டி அணைத்து பாகுபாடு பார்க்காதவர். இன்று வரை அந்த புகைப்படம் வரலாற்று புகழ் பெற்றது.

‘உரிமைக்குரல்’ திரைப்படத்தில் நடித்துக் கொண்டு இருந்தபோது அவருக்கும் கண்ணதாசனுக்கும் இடையே ஒரு பனிப்போர் நடந்து கொண்டு இருந்த நேரத்தில் டைரக்டர் ஸ்ரீதர் அவர்கள் கண்ணதாசனிடம் “விழியே கதை எழுது…” என்ற பாடலை எழுத வைத்து, எம்ஜிஆர் அவர்களிடம் காட்டிய போது அதை படித்து பார்த்த எம்ஜிஆர் அவர்கள் “இது கண்ணதாசன் எழுதியதா?” என்று கேட்ட தனித்திறமை.

மெய்ப்பாடுகள் : 9 அல்ல 8

அளவுக்கு மீறிய தமிழ் ஞானம். அதற்கு ஒரு உதாரணம், கம்பன் கழக விழாவில் பரிசு பெற்ற மாணவர் ஒருவர் “தமிழ் இலக்கியத்தின் தொல்காப்பியத்தில் மெய்ப்பாடுகளில் நகை, அழுகை, இழிவரல், மருக்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்ற எட்டு மெய்ப்பட்டுடன் ‘சமநிலையும்’ சேர்த்து ஒன்பது மெய்பாடுகள்” என்று கூறினார்.

பின்பு பேசிய எம்ஜிஆர் “இலக்கியத்தின் மரபின்படி ‘சமநிலை’ என்பது வடமொழியிலிருந்து பின்னாளில் சேர்க்கப்பட்டதே தவிர, தமிழ் இலக்கியத்தை பொறுத்தவரைக்கும் எட்டு தான்” என்றார். இந்த உரையை கேட்ட பின் நீதியரசர் இஸ்மாயில் உட்பட தமிழறிஞர் அனைவரும் வியந்து போற்றினார்கள். இப்படி ஒரு நுணுக்கம்.

புரட்சித்தலைவர் சுடப்பட்டு குணமாகி மீண்டும் நடிக்க வந்த போது அவரின் குரல் வளம் பாதிக்கப்பட்டு விட்டது கண்டு பின்னணி குரல் தரலாம் என்று கேட்ட பொழுது பிடிவாதமாக மறுத்து “இந்தக் குரலில் பேசி நடிக்கிறேன். ரசிகர்கள் ஏற்றுக் கொண்டால் தொடர்ந்து நடிக்கிறேன்” என்று அதில் பெரிய வெற்றியும் பெற்றார். அப்படி அவர் படத்தில் வெற்றி பெற்றதால் தான் அரசியலில் தனி கட்சி ஆரம்பித்தபோது குரல் வித்தியாசம் மக்களுக்கு தெரியாமல் தன் திரைப்பட கதாநாயகனே நம்மை ஆளப்போகிறார் என்ற எண்ணம் ஏற்பட்டது.

எங்கள் திரைப்பட கதாநாயகன், எங்களை ஆளுகிற முதலமைச்சர் என்ற ஒரு படியில் நின்று பார்த்த எங்களை போன்றவர்களுக்கு நாங்கள் பார்த்த மகிழ்ந்த எம்ஜிஆர் இத்தனை அதிசயமிக்கவரா? ஆச்சரியமிக்கவரா? என்ற மகிழ்ச்சி எல்லா விதங்களிலும் முன்னோடியாக மக்கள் திலகம் இருந்திருக்கிறார் என்பதற்கு இன்னும் ஒரு உதாரணம்,

கையேந்தியாவது

திட்டம் தொடர்வேன்

‘சத்துணவு திட்டத்திற்கு அரசு நிதி ஒதுக்க இயலாது’ என்று எதிர்க்கட்சிகள் வாதமாக வைத்த போது மக்கள் திலகம், “முதலமைச்சராக, நான் இந்த திட்டத்தை நடத்துவேன். ஒருவேளை நிதி நெருக்கடி ஏற்பட்டால் நானும் என் மனைவியும் கையேந்தியாவது இந்த திட்டத்தை நடத்தி வைப்பேன்” என்று கூறினார்.

அந்தத் தங்கத் தலைவனின் மாசில்லா எண்ணத்தில் உதித்த திட்டம் இன்றுவரை தொடர்கிறது என்றால்… அந்தப் புகழ் அவருக்கு மட்டுமே.

காலமும் எம்ஜிஆர் ஏதோ அரிதாரம் பூசி நடித்தவரை அழைக்கவில்லை. ஒரு சமுதாயக் காவலனை, சாதனை சக்தியை கொண்டாடி இருக்கிறோம். கொண்டாடுகிறோம் என்பதில் ஐயமில்லை.

வாரி வாரிக் கொடுத்த மக்கள் திலகம் தன் மனைவியிடம் “நாம் ஒவ்வொரு நாள் ஒரு ரசிகர் வீட்டில் தங்கினால் நமக்கு ஆயுள் பத்தாது” என்று தன் ரசிகர்களுக்காக பெருமைப்படுவார். மகுடம் சூட்டுவது போல ஒரு முறை தன் சொத்து குறித்து பொதுக்கூட்டத்தில் பேசியிருக்கிறார் அப்படிப் பேசும்போது “ரசிகர்களாகிய நீங்கள் கொடுத்த கொடுத்ததை உங்களுக்கே வழங்குவேன்” என்ற அதையும் செய்து சொல்லியும் காட்டினார்.

உயில் எழுதினார்

தன் உயிலில் குறிப்பிட்டபடி குறிப்பிட்ட உறவினர்களுக்கு கொடுத்தவர் மீதி அனைத்தையும் காது கேளாத, வாய் பேசாத குழந்தைகளுக்கு எழுதி வைத்தவர். இன்னும் எத்தனையோ சம்பவங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. இருப்பினும் இவை எல்லாம் அவர் மறைந்தும் கால் நூற்றாண்டு ஆன பிறகு தெரிய வரும்போது இயற்கையை அவர் மேல் ஏன் இத்தனை அன்பு வைத்துள்ளது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். அதனால் தான் இன்று கூட அவரைப் பற்றி யாராவது பேச ஆரம்பித்தால் நமக்கு மகிழ்ச்சி தொற்றிக் கொள்கிறது. ஆனந்தத்தில் நம் உள்ளம் தாண்டவம் ஆடுகிறது.

‘மனித வாழ்வு’ இறைவனால் தரப்பட்ட மிகப்பெரிய பரிசு. அப்படிப்பட்ட வாழ்வில் எம்ஜிஆர் என்ற திருப்பெயரை சேர்த்துக் கொண்டவர்கள் தங்கள் வாழ்வின் பரிசை இன்னும் மெருகேற்றிக் கொண்டார்கள் என்பது ஐயமில்லை. ‘தொடர்ந்து புரட்சித் தலைவர் புகழ் பாடுவோம். அவர் வழி நடப்போம்’ என்று உறுதிமொழி எடுப்போம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *