சிறுகதை

நேர் எதிர் சிந்தனை…!- ராஜா செல்லமுத்து

எவ்வளவோ மருத்துவம் பார்த்தும் எழுந்து நடக்க முடியாத பாண்டியன் இனியுமா நடக்கப் போகிறார்? அவரின் ஓவிய விரல்கள் இனி ஓவியம் வரையப் போவதில்லை. அவரின் வலது கையில் வந்திறங்கிய வண்ண ஓவியங்கள் எல்லாம் இனி வரப்போவதில்லை. குதிரையாக நடக்கும் அவர் வேகம் இனி அவருக்கு கிடைக்கப் போவதில்லை .

வலது காலும் வலது கையும் செயலிழந்து விட்டன என்று அவரைச் சுற்றி இருந்தவர்கள் எல்லாம் எதிர்மறை சிந்தனைகளையே சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

அதற்கு தகுந்தது மாதிரியே மருத்துவர்கள் அப்படித்தான் சான்றிதழ் அளித்திருந்தார்கள்.

நாங்க எவ்வளவோ டிரீட்மென்ட் கொடுத்து பார்த்துட்டோம் பாண்டியனுக்கு இவ்வளவு தான் கைகால் வரும் போல. ஆனா மருத்துவ ரீதியா அவருக்கு எதுவும் நாங்க செய்ய முடியாது . அதனால நீங்க வீட்டுக்கு அழைச்சிட்டு போங்க .அப்பப்ப ஹாஸ்பிடல்ல வந்து காட்டுங்க. முடிஞ்ச அளவுக்கு நாங்களும் வைத்தியம் பாக்கிறோம் . அதுக்கப்புறம் கடவுள் விட்டபடி என்று கை விரித்தார்கள் மருத்துவர்கள்.

ஏறாத மருத்துவமனைகள் இல்லை. செய்யாத செலவுகள் இல்லை .அத்தனையும் பார்த்தாயிற்று. கடைசியில் பாண்டியனை வீட்டிற்கு கொண்டு வந்தார்கள்.

அவர் விரல்கள் வரைந்த ஓவியத்தை வியந்து பார்த்த மனிதர்கள் எல்லாம் அவரிடம் அமர்ந்துஆறுதல் சொல்லிப் போனார்கள் .

இனி ஒரு ஓவியன் பாண்டியன் போல் பிறப்பதில்லை. பிறக்கப் போவதுமில்லை என்று அவரின் ஒய்யாரமான ஓவிய அறிவை மெச்சிச் சென்றார்கள். ஆனால் அவரின் தம்பி பார்த்திபனுக்கு மட்டும் தன் அண்ணனை முன்னே போல சராசரி மனிதனாக கொண்டு வர முடியும் என்ற எண்ணம் இருந்தது .

மருந்து மாத்திரைகள் செய்யாத விஷயத்தை அவரின் எண்ணங்கள் செய்யும் என்று முடிவெடுத்தான்.

மருத்துவமனைகள் கைவிட்ட அன்றிலிருந்து வீட்டிலேயே முடங்கிக் கிடந்த பாண்டியனைப் பார்த்திபன் பார்த்தான். பாண்டியன் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.

அண்ணே நீ எதுக்கு பயப்படுற? உன்னால முன்ன விட நல்ல ஓவியங்கள வரைய முடியும். நான் இருக்கேன். டாக்டர் என்ன கடவுளா? கடவுள் இருக்கிறார். நான் ஒன்ன கொண்டு வரேன். நீ ஒன்னும் வருத்தப்படாத என்று அண்ணனுக்கு ஆறுதல் சொன்னான்.

அன்று முதல் தினசரி அண்ணனைப் பார்ப்பதும் பேசுவதும் அவருக்கு ஆறுதல் கூறுவதுமாக இருந்தான்.

நாட்கள் நகர்ந்தன. படுத்த படுக்கையாய் கிடந்த பாண்டியன் சில மாதங்களுக்குப் பிறகு எழுந்து அமர்ந்தார். முன்னைப் போலவே ஓவியம் வரைந்தார்.

இது மெடிக்கல் மிராக்கிள் என்று மருத்துவர்களும் அவரைச் சுற்றி இருந்த மனிதர்களும் சிலாகித்தார்கள் .

ஒரு மருத்துவர் பார்த்திபனிடம் கேட்டே விட்டார்

தம்பி எங்க மெடிக்கல் செய்ய முடியாத விஷயத்த உங்களால் எப்படி செய்ய முடிந்தது? பாண்டியன் இனிமே எந்திரிச்சு நடக்கவே மாட்டார். மறுபடியும் அவர் ஓவியங்களை வரைய முடியாது .இனி அவ்வளவுதான் படுத்த படுக்கையாக கெடந்து தன்னோட கடைசி காலத்தை முடிக்க வேண்டியதுதான் அப்படின்னு நாங்களே கைவிட்ட மனுஷனை எப்படி உங்களால பழைய பாண்டியனா கொண்டு வர முடிந்தது? முன்ன விட இப்ப அழகா ஓவியமும் வரையுறாரே? இது எப்படி சாத்தியம்? என்று விழிகள் பிதுங்க வினாக்களை கேட்டார்கள்.

மருத்துவம் படித்த பெரிய அறிவாளிகளைச் சற்று முற்றும் பார்த்த பார்த்திபன்

சார் வெரி சிம்பிள். எங்க அண்ணனுடைய எண்ணம், செயல், சிந்தனை எல்லாமே அவர் வரைஞ்ச ஓவியத்தில தான் இருக்கு . அத விட்டுட்டு நீங்க மருந்து மாத்திரை குளுக்கோஸ்ன்னு கொடுத்திங்க. அவருக்கு மைண்ட்ல ஏறல. அவரு ஊனும் உயிருமா நெனச்சுக்கிட்டு இருக்கிற பெயிண்டையும் பிரஸையும் அவர் முன்னால போட்டேன். ஆரம்பத்துல அவருடைய கை நடுங்குச்சு .தினம் தினம் அவரை உசுப்பேத்துனேன். அவருடைய மூளை பூராம் நிரம்பிக் கிடக்கிற ஓவியம், பிரஸ், அவர தினமும் தூண்டிக்கிட்டு இருந்துச்சு. ஒரு நாள அவரே எந்திருச்சு உட்கார்ந்தார். பிரஸ் எடுத்தார் வரைய ஆரம்பித்தார். தினமும் இந்தப் பயிற்சி செய்யச் செய்ய ஆட்டோமேட்டிக்கா அவருடைய மனநிலை நாம நோய்வாய்ப்பட்டு இருக்கிறோம். நமக்கு கை, கால் விலங்கல அப்படின்ற சிந்தனையை மறந்து, அவருடைய செல்களெல்லாம் புதுசா வேலை செய்ய ஆரம்பிச்சுச்சு. இதோ உங்க முன்னாடி இப்ப ஓவிய வரைஞ்சுக்கிட்டு இருக்கார்

என்று பார்த்திபன் சொன்னபோது மருத்துவம் படித்த மருத்துவர்கள் எல்லாம் பார்த்திபனின் செயலைப் பார்த்துக் கைதட்டினார்கள்

நோயாளிகளின் மனநிலையைப் படிக்காமல் வெறும் உடலுக்கு மருத்துவம் செய்து என்ன பிரயோஜனம்? என்று பார்த்திபனை கட்டிப்பிடித்து உச்சி முகர்ந்தார்கள்.

அன்றைய தினத்திலிருந்து மருத்துவர்கள் எல்லாம் ஒரு தீர்க்கமான முடிவு செய்தார்கள்.

எந்த ஒரு மனிதனுக்கும் நோய் என்பது உடம்பிற்கு தான் வருகிறது.. மனதிற்கு அல்ல. அவர்கள் எந்த துறையைச் சார்ந்து இருக்கிறார்களோ அதைக் காெண்டே அவர்களை ஊக்குவித்தால் அவர்கள் உடல்நிலை சரியாகும் .எவ்வளவு பெரிய நோயாக இருந்தாலும் குணப்படுத்தி விடலாம் என்ற முடிவுக்கு வந்தார்கள்.

அன்றிலிருந்து பார்த்திபன் பாதையில் மருத்துவர்களின் பயணம் தொடர்ந்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *