சிறுகதை

நேர்மை – ராஜா செல்லமுத்து

Makkal Kural Official

அன்று விடுமுறை என்பதால் பாலசேகரன் வீட்டில் இல்லாமல் நகரை வலம் வந்தார். வீட்டில் இருப்பது என்பது அவருக்கு மிகவும் அலுப்பான ஒன்று. அலுவலகம், வீடு, விழா என்று இருந்தவருக்கு வீட்டுச் சிறையில் அடைந்து கிடப்பது விருப்பமில்லை. அதனால் தன் இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு நகரத்தை ஒரு ரவுண்டு அடித்தார்.

காலை உணவை முடித்த பாலசேகரன் மதிய உணவை ஏதாவது ஒரு உணவகத்தில் சாப்பிடலாம் என்று முடிவு செய்து நகரைச் சுற்றி வந்தார். தலைக்கவசம் பற்றி அரசாங்கத்தைக் கடுமையாகச் சாடியது ஒரு பிரிவினர். ஆங்காங்கே போக்குவரத்துத் துறை காவலர்கள் ஹெல்மெட் போடாத மனிதர்களைப் பிடித்து அபராதம் விதித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுடன் வாக்குவாதம் செய்வதுமாக இருந்தார்கள் வாகன ஓட்டிகள்.

” சார் ஒரு மனிதன், உயிர் வாழ்றதுக்கு அவனுக்கு உரிமை இருக்குது. அப்படித்தான் இதுவும் எந்த மனுஷனும் தான் இறக்கணும் அப்படிங்கறதுக்காக வண்டி ஓட்டுறது இல்ல. அது அவனவன் இஷ்டம். ஏன் தலைக்கவசம் போட்டு ஏதாவது விபரீதம் நடந்தா நீங்க பொறுப்பு ஏற்றுக்கொள்வீர்களா? என்று போக்குவரத்துக் காவலர்களுடன் ஒருவன் விவாதம் செய்து கொண்டிருந்தது பாலசேகரன் காதில் விழுந்தது.

” அவர் சொல்றது உண்மைதான் ஏன் இவங்க இதுல மட்டும் இவ்வளவு கெடுபிடியா இருக்காங்க மத்த விஷயத்துலயும் இவ்வளவு சரியா இருக்கலாம் இல்ல என்று தனக்குத்தானே ” பேசிக்கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார் அவர் தலைக் கவசம் அணிந்திருந்ததால் அவரை யாரும் தடுக்கவில்லை அவர் பயணம் செய்து கொண்டிருந்த நேரம் மதிய உணவு வேளை நெருங்கிக் கொண்டிருந்ததால்,

சரி சாப்பிட்டு போகலாம் என்று முடிவு செய்து ஒரு பிரதான ஓட்டல் முன் தன் இரு சக்கர வாகனத்தை நிறுத்தினார். அது மதிய உணவுக்கான நேரத்தை தொட்டுக் கொண்டுதான் இருந்தது. அதனால் அவ்வளவாக உணவகத்தில் கூட்டம் இல்லாமல் இருந்தது. அவர் எதிரில் ஒரே ஒருவர் மட்டும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். தனக்கான உணவை ஆர்டர் செய்தார் பாலசேகரன். எதிரில் இருந்தவர் சாப்பிட்டு முடித்து சென்றார். பாலசேகரனும் சாப்பிட்டுவிட்டு கை கழுவி அமர்ந்த போது, அவர் சாப்பிட்டதற்கான பில்லை சிப்பந்தி தராமல் இருந்தான்.

– எங்க என்னோட பில் ” என்று பாலசேகரன் கேட்க, ” பில்லா அதுதான் உங்களுக்கு எதிர்த்தாப்புல அமர்ந்து உட்கார்ந்திருந்தாரே? அவர் கூட சேர்த்துக் கொடுத்துட்டேன். நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா தானே வந்தீங்க? என்று கேட்க, “ஐயோ அவரு வேற. நான் வேற. இது தவறு. எனக்கான பில்ல கொடுங்க” என்று கேட்டார் பாலசேகரன்

“தவறு நடந்துருச்சு சார் மன்னிக்கணும் ” என்று சொன்ன அந்தச் சிப்பந்தி பாலசேகரன் சாப்பிட்டதற்கான பில்லை எடுத்து வந்தார்.

” என்ன மனிதர்கள் இவர்கள் யார்? யார் என்று இவர்களே தீர்மானித்து விடுவார்களா? இது தவறு. நாம் சாப்பிட்டதற்கு அவர் ஏன் பணம் தர வேண்டும்? அதுவும் அந்த மனிதர் தன்னுடைய பில்லை சரியாகக் கவனிக்காமல் கூட இவ்வளவு தொகை ஏன் வந்தது? என்று நினைக்கவில்லை. இது தவறு. சாப்பிட்ட அந்த மனிதர் இவர்கள் சரியாகத்தான் நமக்கு பில் போட்டு இருக்கிறார்களா என்பதை கவனித்துதானே அவர் தன்னுடைய பில் தொகையைத் தந்திருக்க வேண்டும்? அவருடைய பெரும் தவறு இது ” என்று நினைத்த பாலசேகரன் தான் சாப்பிட்டதற்கான பில்லை அந்தச் சிப்பந்தியிடம் கொடுத்து, அந்தச் சிப்பந்திக்கு தேவையான டிப்ஸ் கொடுத்தார். அவர் அந்த இடத்தை விட்டு எழுந்து போனபோது அந்த சிப்பந்தி பாலசேகரனை மறித்தான்.

“சார் வேறு ஒரு ஆளா இருந்தா ஆமா அவர் என் நண்பர் தான் அவரு முன்னாடி போய்ட்டார் போல அப்படின்னு சொல்லிட்டு பணம் கொடுக்காம போய் இருப்பாங்க. நீங்க அப்படி இல்ல. உங்க நேர்மை பெருசு சார். ஆனா என்ன ஒன்னு நான் ரெண்டு பேரையும் கேட்காம பில்லு போட்டது என்னுடைய தப்புதான் .அதிகமா பில் பணம் கொடுத்த அந்த மனுஷன் என்னைக்காவது இங்க ஒரு நாள் இங்க வருவார் சார். என்னுடைய தப்ப நானே சரி பண்ணிக்கிறேன் அந்த பில்ல நான் எடுத்து வச்சிருக்கேன். அவர் அதிகமா கொடுத்த பணத்தை கண்டிப்பா ஒரு நாள் அவர்கிட்ட கொடுப்பேன். அவர் யார் அப்படிங்கறது இங்க இருக்கிற சிசிடி கேமராவில் பதிவாயிருக்கு. அவர் முகம் எனக்கு மறக்கல. உங்களையும் என்னால மறக்க முடியாது. ரொம்ப நன்றி என்று பாலசேகரனை கையெடுத்து கும்பிட்டான் அந்தச் சிப்பந்தி.

“சரி இனிமேலாவது யாரு என்னன்னு விசாரிச்சு பில்லு போடுங்க. அதுதான் உங்களுக்கு நல்லது.சாப்பிட வரவங்களுக்கும் நல்லது ” என்று சொல்லிய பாலசேகரன் தன்னுடைய இரு சக்கர வாகரத்தை முடுக்கினார். வானம் லேசாக தூறல் போட ஆரம்பித்தது.

#சிறுகதை

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *