சிறுகதை

நேர்மை நெறி | ராஜா செல்லமுத்து

அரக்கப் பரக்க ஓடிக்கொண்டிருந்தாள் பானு.

“ஏய், ஏன் இப்படி தெனமும் ஓடிக்கிட்டே இருக்கே? கொஞ்சம் சீக்கிரமா கெளம்பக் கூடாதா? என்று அம்மா கடிந்தும் அவள் எதுவுமே பேசாமல் கிளம்பிக் கொண்டே இருந்தாள்.

உனக்கு தான் தெரியுமே…. காலையில சீக்கிரமா கிளம்பணும்னு. பெறகு ஏன் இந்த அவசரம்”? என்று எத்தனையோ முறை சொல்லியும் பானு அசைவதாகவே இல்லை” நாளைக்கு இருந்து கொஞ்சம் சீக்கிரம் கெளம்பு” என்று அம்மா சொல்லியும் அவள் அமைதியாகவிருந்தாள்.

“ம்ஹூகும்….. அவள் எதற்கும் செவிசாய்க்கவே இல்லை

“பானு….. பானு…. அம்மா கத்திக் கத்திப் பார்த்தாள்.

சொல்லுமா அதான் கேக்குதே. ஏன் இப்பிடி காது கிழிய காத்திட்டு இருக்க என்று கொஞ்சம் கடிந்தே பேசினாள் பானு.

கால்ல சக்கரத்த கட்டுனது மாதிரியே ஒரு எடத்துல இருக்காம, அங்கிட்டும் இங்கிட்டும் ஓடிக்கிட்டு இருப்பா” என்ற போது மதிய உணவையும் எடுத்துக் கொண்டு வேகுவேகுவெனக் கிளம்பினாள் பானு.

“ம்ம் ” தெனமும் இப்பிடியேதான் இருக்கா. போற அவசரத்தில எதையோ விட்டுட்டு போகப்போறா பாரு” என்று புலம்பியபடியே வீட்டு வேலைகளில் மூழ்கினாள் பானுவின் அம்மா.

ஓடும் வாகனங்களின் வேகத்திற்கு ஏற்ப விறுவிறுவென நடந்து கொண்டிருந்தாள்.

“ம்… இங்க பஸ் ஏறினோம்னா ஊரச் சுத்திட்டு வந்து திரும்பவும் இங்க தான் வந்து நிக்கணும். அதுக்கு பேசாம ஒரு ஆட்டோ பிடிச்சிட்டு போயி எதிர் ரோட்டுல நின்னோம்னா வர்ற பஸ்ல ஏறிப் போயிரலாம்” என்ற பானு ஓடிக்கொண்டிருக்கும் ஆட்டோக்களில் ஒன்றைக் கைபோட்டு நிறுத்தினாள். விரையும் வேகத்தைக் கொஞ்சம் கட்டுப்படுத்தி பானுவின் முன்னால் நின்றார் ஒரு ஆட்டோக்காரர். அவரின் வயது அறுபதைக் கடந்திருக்கும் . ஆனால் அப்படி ஒன்றும் அவருக்கு வயது தெரியவில்லை.

“எங்க போகணும்மா?”

“எதிர் ரோட்டுக்கு”

“ம்”

“போகலாம்”

“எவ்வளவு?”

“என்னம்மா கேக்க போறேன். குடுக்கிறத குடும்மா என்றவர் ஆட்டோவை விட்டு இறங்காமலே பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.

டுர் டுர் என்ற சத்தத்தோடு உறுமிக்கொண்டே நின்று கொண்டிருந்தது ஆட்டோ.

“சரி” என்ற பானு ஆட்டோவில் ஏற, ஆக்சிலேட்டரை முடுக்கி வேகத்தைக் கூட்டினார் ஆட்டோகாரர் . சந்தடிகள் நிறைந்த வாகனங்களுக்கு இடையே கொஞ்சம் வேகமாகச் சென்றது ஆட்டோ.

“இங்கயாம்மா”

“இன்னும் கொஞ்சம் தள்ளி” என்ற பானு”

“இங்க இங்க இங்கன போதும் ” என்று கை காட்டிய போது “40 ரூபா கொடும்மா போதும்” என்று ஆட்டோக்காரர் சொன்னபோது 50 ரூபாயை எடுத்துக் கொடுத்து விட்டு கீழே இறங்கிய போது பானு செல்ல வேண்டிய பேருந்து வந்து சேர்ந்தது. அவசரமாக ஆட்டோவை விட்டு இறங்கியவள் வேகமாய் ஓடிப்போய் ஓடும் பேருந்தில் ஏறினாள்.

அவள் ஏறிய வேகத்தில், அந்தப் பேருந்து மெல்ல வேகமெடுத்தது .பேருந்தில் ஏறியவள் டிக்கெட்டை எடுத்துக்கொண்டு ஓர் ஓரத்தில் நின்று கொண்டிருந்தாள். அப்போது ஒரு ஆட்டோ பானு ஏறிய பேருந்தை துரத்திக் கொண்டே வந்தது.

படி வரை நின்று கொண்டிருந்த பயணிகளுக்கு ஏன், ? இப்படி இந்த ஆட்டோகாரன் கூடவே வந்துட்டு இருக்கான்! என்று நினைத்துக் கொண்டிருந்தவர்களிடம்

தம்பி, தம்பி என்று கூப்பிட்டுக் கொண்டே வந்த ஆட்டோக்காரர் நெரிசல் நிறைந்த ஒரு சாலையில் பேருந்து கொஞ்சம் வேகம் குறைய

“தம்பி… இந்த பத்து ரூபாயை அங்கு கருப்பு கலர் துப்பட்டா போட்ட நிக்குதே அந்த பொண்ணு அவங்கக்கிட்ட குடுங்க, என்று அந்த ஆட்டோ பெரியவர் நீட்ட வெடுக்கென அதை வாங்கியவன் கருப்புக்கலர் துப்பட்டா பெண்ணைத் தேடினான்.

ஜன்னல் வழியாகப் பார்த்த ஆட்டோ பெரியவர்,

“யம்மா 50 ரூபா குடுத்திட்டு பத்து ரூபாய் வாங்காம போயிட்டம்மா? வாங்கிக்க” என்றபடியே அவர் சொல்ல, ஓடும் பேருந்தில் அதைப் பார்த்தவர்களுக்கு புல்லரித்தது.

அடபாவிகளா இப்பிடியும் நேர்மையான ஆளுகளா? இருக்கிற போதே முழியப் புடுங்குற ஆளுங்களுக்கு மத்தியில மறந்து போன காசத் தேடி வந்து குடுத்திவிட்டு போறாரு பாருங்க. அவரு தாங்க நல்ல மனுஷன்.

இப்படிப்பட்ட ஒரு சில மனுசங்களால தான் இந்த பூமியில கொஞ்சமாவது மழை பெய்யுது” என்று சிலர் பேசியபோது, பேருந்தில் இருந்தவர்கள் எல்லாருக்கும் என்னவோ போலானது.

அந்த ஆட்டோ பெரியவர் சந்தடிகள் நிறைந்த சாலையில் நெஞ்சை நிமிர்த்தி நேர்மையாகப் போய்க் கொண்டிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *