சிறுகதை

நேர்மை – கரூர். அ. செல்வராஜ்

இரவு 8 மணி. கோடை வெப்பத்தைத் தணிக்கும் குளிர் மழை வேகமாகப் பெய்து கொண்டிருந்தது.

ஆட்டோ ஸ்டாண்டில் இருந்து அருகிலிருந்த மளிகைக் கடை வாசல் கூரையில் நின்று கொண்டிருந்தான் ஆட்டோ டிரைவர் மாணிக்கம். தனது ஆட்டோவை நோக்கி 16 வயது மதிக்கத்தக்க ஒரு இளம் பெண்ணும், 65 வயது மதிக்கத்தக்க ஒரு முதிர் வயதுத் தாயும் வருவதைப் பார்த்துவிட்ட மாணிக்கம் உடனே மளிகைக் கடையிலிருந்து வெளியேறி தனது ஆட்டோவிடம் வந்தான். அங்கு நின்றிருந்த இளம் பெண்ணிடம் ‘‘பாப்பா! ஆட்டோ வேணுமா?’’ என்று கேட்டான்.

ஆட்டோக்காரர் கேட்டதும் அந்த இளம் பெண் அவரிடம் ‘அண்ணே! அண்ணா நகருக்கு அர்ஜெண்டா போகணும் வர முடியுமா’’ என்று கேட்டாள்.

இளம் பெண் கேட்ட கேள்விக்குப் பதிலை உடனே சொல்லாமல் கொஞ்சம் யோசித்த பின்பு ‘‘அண்ணா நகருக்குப் போகணுமா? அங்கிருந்து திரும்பி வரும்போது சவாரி எதுவும் கிடைக்காதே’’ என்றான்.

ஆட்டோக்காரர் தயங்குவதைக் கண்ட முதிர் வயதுத் தாய் அவரிடம் ‘தம்பி! உன்னைப் பார்த்தா என் மகன் மாதிரி தெரியுது. அவசரமாப் போகணும் கொஞ்சம் மனசு இரங்குப்பா’ என்று கேட்டாள்.

முதிர் வயதுத் தாயின் பேச்சைத் தட்ட முடியாத ஆட்டோக்காரன் மாணிக்கம் அவர்களை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு அண்ணா நகருக்கு விரைவாகச் சென்றான். செல்லும் வழியில் முதிர் வயதுத் தாயிடம் ஆட்டோ டிரைவர் மாணிக்கம் பேசத் தொடங்கினான்.

‘‘பெரியம்மா! அண்ணா நகர்லே எங்கே உங்களை இறக்கி விடணும்?’’ என்று கேட்டான். அதற்கு அந்தத் தாய் ‘‘தம்பி! பத்மா ஆஸ்பத்திரியிலே இறக்கி விடணும். என் மருமகளை அந்த ஆஸ்பத்திரியிலேதான் சேர்த்து இருக்கேன்’’ என்று பதில் சொன்னாள்.

மழையின் வேகம் குறைந்திருந்ததால் ஆட்டோ டிரைவர் மாணிக்கம் வேகமாகச் சென்று அண்ணாநகர் ஆஸ்பத்திரியில் முதிர்ந்த வயதுத் தாயையும் அந்த இளம் பெண்ணையும் இறக்கி விட்டான். அதன் பின்பு மீண்டும் தன் இருப்பிடத்துக்கு விரைந்து வந்து கொண்டிருந்தான். மழையின் குளிரை விரட்டியடிப்பதற்காக ஒரு டீ குடிக்க நினைத்தான். வரும் வழியில் இருந்த ஒரு டீக்கடையில் ஆட்டோ நிறுத்தி டீயைக் குடித்து முடித்தான்.

ஆட்டோவை ஸ்டார்ட் செய்வதற்குச் சற்று முன்பு பயணிகள் உட்காரும் சீட்டில் ஒரு தோள் பையைப் பார்த்தான். அந்தப்பை சற்று முன்பு அண்ணா நகர் ஆஸ்பத்திரியில் இறக்கி விடப்பட்டவர்களுடையது என்பதைத் தெரிந்து கொண்டான். உடனே அண்ணா நகருக்குச் சென்று அவர்களிடம் அந்தப் பையை ஒப்படைத்தான்.

படபடப்பான மனநிலையில் பையைப் பெற்றுக் கொண்ட முதிர்ந்த வயதுத் தாய் மாணிக்கத்திடம் ‘‘தம்பி! நீ கொண்டு வந்த பையிலே தான் என் மருமகளின் ஆபரேஷன் செலவுக்கான முன் பணம் 75 ஆயிரம் வச்சிருந்தேன். அதைப் பத்திரமா கொண்டு வந்து தந்துட்டே. நீ மகராசனா இருப்பே. ரொம்ப நன்றி தம்பி. உன் நேர்மைக்கு சன்மானத் தொகையா இந்த 500 ரூபாயை மறுக்காமே வாங்கிக்கப்பா’’ என்றாள்.

அதற்கு மாணிக்கம் ‘‘அம்மா! நீங்க என்னைப் பெற்று எடுக்காத தாய். அந்தத் தாயிடம் ஒரு மகனாகிய நான் சன்மானம் வாங்க முடியுமா? வாங்கவே கூடாது. எனக்கு வேண்டாம்’’ சொல்லி மறுத்து விட்டு அந்தத் தாயிடம் பிரியா விடை பெற்று மீண்டும் தன் ஆட்டோ ஸ்டாண்டு நோக்கி விரைந்தான் ஆட்டோ டிரைவர் மாணிக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *