நாடும் நடப்பும்

நேர்பட வாழ உரிய பள்ளிக் கல்வி


ஆர். முத்துக்குமார்


பள்ளிக் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து தமிழக அரசு பல முன்மாதிரி முயற்சிகளை நடைமுறைப்படுத்தத் தயாராகி வருகிறது.

முதல் புள்ளியாக மாணவர்களும் ஆசிரியர்களும் நேரத்திற்கு வருகிறார்களா? என்பதை உறுதி செய்யும் வகையில் ‘டிஎன் ஸ்கூல்’ என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இச்செயலியின் உதவியால் ஆசிரியர், மாணவர்கள் வருகை உறுதியாகிவிடும்.

மாணவர்கள், ஆசிரியர்களுக்கான வருகைப்பதிவை இவ்வாண்டு முதல் செயலியில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 37,554 அரசுப் பள்ளிகளில் 52.75 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். ஏறத்தாழ 2.25 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.

ஆசிரியர் வருகைப் பதிவைக் கண்காணிக்க ‘டிஎன் ஸ்கூல்ஸ்’ என்ற செல்போன் செயலியை பள்ளிக் கல்வித் துறை 2019-ஆம் ஆண்டில் கல்வித் துறை அறிமுகம் செய்தது. இதன் வழியாக ஆசிரியர்கள், மாணவர்கள் வருகைப் பதிவு மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் ஆசிரியர் பணிப் பதிவேடு வருகைப்பதிவு, மாணவர் விவரம் உள்ளிட்ட விவரங்களை ஒருங்கிணைக்க டிஎன்எஸ்இடி (TNSED) என்ற மேம்படுத்தப்பட்ட செயலியை தமிழக அரசு கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. இதன் மூலம் வருகைப் பதிவு உள்ளிட்ட அலுவல் செயல்பாடுகளை ஆசிரியர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்தத் தகவல்களை துறை அதிகாரிகளால் நேரடியாக கண்கணிக்க முடியும். இந்நிலையில், “மாணவர்கள், ஆசிரியர்களுக்கான வருகைப் பதிவை நேற்று முதல் செயலியில் மட்டுமே பதிவு செய்தால் போதுமானது.

மேலும் விடுப்பு, முன்அனுமதி ஆகியவற்றையும் ஆசிரியர்கள் செயலி வழியாகவே மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும்” என்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை வாயிலாக பள்ளிக் கல்வி ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது.

ஒரு பக்கம் ஆசிரியர்கள், மாணவர்கள் பள்ளி நேரத்தில் செல்போன் உபயோகம் தடை செய்யப்பட்டிருப்பதை அறிவோம். இனி வரும் புது தலைமுறை செயலிகளை உபயோகிக்க செல்போனின் உதவி அவசியமாகிறது.

இந்நிலையில் பள்ளிக் கல்வித் திட்டத்தில் 2 ஆம் வகுப்பு வரை ‘கட்டாய செல்போன்’ பாடத்திட்டம் மற்றும் உபயோகிக்க வேண்டிய தருணங்கள் சொல்லித் தரப்பட்டாக வேண்டும்.

மேலும் செல்போனில் மற்றவருடன் உரையாடுவது எப்படி? எப்படிப் பேச வேண்டும்? எதையெல்லாம் மற்றவரிடம் சொல்லக் கூடாதவை போன்ற உணர்வுப்பூர்வ அம்சங்கள் பற்றியும் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டு சொல்லி தரப்பட்டால் வரும் தலைமுறை பொறுப்புடன் வளரும்.

வர இருக்கும் அடுத்த தலைமுறை 5 ஜி தொலைத் தொடர்பு இதுவரை இருந்த பலவற்றை கற்கால அம்சமாக மாற்றி விடும்; கூடவே பல புதிய வசதிகளையும் கொண்டு வரும். அதைப் பொறுப்புடன் அனுபவிக்க என்றே பக்குவம் பெற்ற மாணவர்களாக உயர வேண்டும்.

அந்த நந்நாளுக்காகக் காத்திருப்போம்.


Leave a Reply

Your email address will not be published.