சிறுகதை

நேர்த்திக்கடன் – ராஜா செல்லமுத்து

பாலமுரளிக்கு ஐப்பசி கார்த்திகை வந்தால் போதும் முருகனுக்காே அய்யப்பனுக்கோ மாலை போட்டு பற்கள் நடுங்கும் கடும் குளிரில் பச்ச தண்ணீரில் குளித்துவிட்டு அரோகரா என்றோ சாமியே சரணம் ஐயப்பா என்றோ துதி பாடினால் மட்டும்தான் அந்த வருடம் அவனுக்கு நிம்மதியாக கழியும்.

இல்லையென்றால் பித்து பிடித்தது போல் ஆகி விடுவான் பாலமுரளி. வழக்கம் போல இந்த வருடமும் கார்த்திகையில் முருகனுக்கு மாலை போட்டு இருந்தான்.

அதிகாலையில் விரதம் இருந்து கடும் குளிரில் எழுந்து குளித்துவிட்டு கந்த சஷ்டி கவசம், பகை கடிதல் படித்து முடித்தால் தான் அந்த நாள் அவனுக்கு நிம்மதியாக நகரும். இல்லையென்றால் எதையோ தொலைத்ததாய் உணர்வான்.

பாலமுரளி அவன் பணிபுரியும் அலுவலகத்தில் அந்த ஒரு மாதத்திற்கு மட்டும் அவன் மற்றவர்களை சாமி என்பதும் மற்றவர்கள் இவனை சாமி என்பதும் அழைப்பதுண்டு. அந்த ஒரு மாதம் தவிர மற்ற மாதங்கள் எல்லாம் அவன் ஆசாமியாகவே வலம் வருவான் .

சாமி ஆனதிலிருந்து சுத்தம் சோறு போடும் என்றும் கூறும் அளவிற்கு அவன் வார்த்தைகள் கூட ஆபாச மொழியாது . அவ்வளவும் நேர்த்தியாகவும் நிதானமாகவும் பலான வார்த்தைகளை தவிர்த்து தான் பேசுவான்.

சாப்பாட்டில் மட்டுமல்ல பேசும் பேச்சில் கூட சைவம் மட்டுமே வந்துவிழும் . அந்த அளவிற்கு பாலமுரளி பரிசுத்தமாக இருப்பான். கால்களில் செருப்பு அணிவது கூட தவறு என்று செருப்பு இல்லாமல் நடந்து போவான்.

கருணை உள்ளம் கொண்டு பிறருக்கு உதவி செய்வது ஏழை முதல் பணக்காரர் வரை அத்தனை பேரையும் சாமி என்று அழைப்பது என்று அந்த ஒரு மாத காலத்திற்குள் அவன் சாமியாக இருப்பது மனைவிக்கு பெரிய சந்தோஷம்.

கடவுளேஇந்த மனுஷன் வருஷம் பூரா இப்படியே சாமியா இருக்கக் கூடாதா? அப்படி இருந்தா குடும்பத்தில் எவ்வளவு நிம்மதி இருக்கும் என்று பெருமூச்சு விடுவாள் பாலமுரளியின் மனைவி உஷா.

சாமி ,சாப்பாடு எடுத்து வைங்க. சாமி ,டீ குடுங்க சாமி, குளிக்க தண்ணி வச்சுக்கலாம் .சாமி, நான் வெளியே போயிட்டு வரேன். சாமி குழந்தைகளை பார்த்துக்குங்க. என்று வார்த்தைக்கு வார்த்தை சாமி போட்டு பேசும் பாலமுரளியை பார்த்தால் உஷாவிற்கு ஒரு பக்கம் சந்தோஷமும் மறுபக்க வருத்தமாகவும் இருக்கும். கடவுளுக்கு மாலை போடுறேன்னு சொல்றாங்க.

ஏன் ஒரு வருஷம் இரண்டு வருஷம் போட்டா ஆகாதா 11 மாசம் இருக்கிறத எல்லாம் பண்ணிபுட்டு ஒரே ஒரு மாசம் சாமி, சாமி என்று சுத்தி எல்லாரையும் முட்டாளாக்கிட்டு கடைசியில் மீதமிருக்கிற 11 மாசமும் திரும்பவும் ஆசாமியாகுறாங்க.

இந்த நேர்த்திக்கடன ஒரு வருஷமா நீட்டிக்க கூடாதா ? என்று உஷா வேண்டினாள்.

ஆனால் இதை யார் சொல்வது? இந்தச் சட்டத்தை யார் எழுதுவது என்று தெரியவில்லை. ஆனால் அந்த ஒரு மாத காலம் மட்டும் உஷாவிற்கு மனது ரொம்ப திருப்தியாக இருக்கும். பிக்கல் பிடுங்கல் இல்லை .சாராய நெடி இல்லை. சிகரெட் வாடை இல்லை. இல்லற வாழ்க்கை இல்லை. கட்டில் தொந்தரவு இல்லை. ஒரு நாளைக்கு இரு போகம் என்று தொல்லை செய்யும் கணவனின் இச்சைகள் இல்லை என்று ரொம்பவே சந்தோஷமாக இருப்பாள் உஷா.

கார்த்திகை மார்கழி முடிந்து கோவிலுக்குப் போய்விட்டு வந்து மாலையை கழட்டி விட்டாள் சாமி மறுபடியும் ஆசாமியாவான். தரையில் இருப்பவன் மறுபடியும் மலையேறுவான். மலையில் இருந்து கீழே இறங்க மாட்டான். அந்த ஒரு மாதம் சேர்த்து வைத்த அத்தனை ஆபாசங்களையும் அடுத்தடுத்த மாதங்களில் அவிழ்த்து விடுவான்.

கடவுளே இந்த நேர்த்திக் கடத்திக் மாதம் இவ்வளவு தானா? இது நீட்டிக்க கூடாதா? இதை யாரிடம் சொல்வது ?எந்த சாமியிடம் முறையிட்டால் இந்த நேர்த்திக்கடன் நிறைவேறும் இவர்கள் ஒரு மாதத்திற்கு மட்டும் ஒழுக்கமாக இருந்துவிட்டு மற்ற மாதங்களில் எல்லாம் அசிங்கமாக நடந்து . இவர்களுக்கு தண்டனை என்ன? என்று புலம்புவாள்.

உஷா போலவே அந்த தெருவில் இருக்கும் சில பெண்கள் புலம்புவார்கள்.

ஏண்டி உஷா நீ சொல்றது சரிதான் நாம இதுக்காக ஒரு மாநாடு போட்டு இந்த குடிகார பசங்க எல்லாம் ஒரு மாசத்துக்கு மட்டும் ஒழுக்கமா இருக்காங்க. அடுத்தடுத்த மாசங்கள் தப்பு செய்கிறார்கள்? இவர்களை திருத்துவதற்கு வேற என்ன வழி என்று கேட்போமா? என்று கூடிப் பேசினார்கள்.

ஆனால், அந்த நேர்த்திக்கடன் மாதத்தை யார் நீட்டிப்பது ? அந்த ஒரு மாத சந்தோஷத்தை மறு மாதங்கள் செலவழித்து விடும் ; அந்த நிம்மதியான அந்த ஒரு மாதம் அடுத்த வருஷத்திற்கு தள்ளிப் போகும் என்றே நினைப்பார்கள்.

அந்த நேர்த்திக்கடன் மாதத்தை எதிர்பார்த்து காத்திருப்பார்கள் உஷா போன்ற லட்சோப லட்சம் பெண்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *