சிறுகதை

நேரம் தவறாதவன் – எம்.பாலகிருஷ்ணன்

முனியாண்டி விவசாய வேலைக்குச் சென்று வந்தான். ஆனால் தற்போது போதிய மழை இல்லாததால் விவசாயம் நடைபெறவில்லை.

மேலும் விவசாய நிலங்கள் மனை நிலங்களாக மாறிவிட்டதால் வேலை பார்த்து வந்த தொழிலாளர்கள் வாழ்வாதாரத்திற்கு வேறொரு வேலைக்குச் சென்றனர். அதுவும் கூலி வேலைக்கு .

அந்த வேலைக்குச் செல்ல கிராமத்திலிருந்து சிலர் நகரத்திற்கு கட்டிட வேலைக்கும் ரோடு போடும் வேலைக்கும் கிளம்பினர்.

அந்தப் பணிக்குச் செல்ல பேருந்தை நம்பித் தான் அவர்கள் இருந்தார்கள். அதுவும் அதிகாலை நான்கு மணிக்கு எழுந்தால்தான் ஐந்து மணி பஸ்ஸை பிடிக்க முடியும் சிறிது தாமதமானால் பஸ் கிடைக்காது.

முனியாண்டி நகரத்தில் கூலி வேலைக்குச் செல்ல அவனும் அதிகாலையிலே எழுந்து வேலைக்குப் போக முடிவு செய்து சில நாட்கள் ஒழுங்காகச் சென்று வந்தான்.

நாளடைவில் அவன் அதிகாலையில் எழத் தவறி விட்டான். தாமதமாக சென்றதால் பஸ் கிடைக்கவில்லை. இதனால் அன்றைய நாளில் வேலைக்குப் போகாமல் இருந்து விடுவான். இதனால் அவனுக்கும் அவன் மனைவிக்கும் அவ்வப்போது வீட்டில் சண்டை சச்சரவு ஏற்பட்டது.

அவனுக்கு ஐந்து வயதில் ஒரு பெண் குழந்தையும் நான்கு வயதில் ஆண் குழந்தையும் உண்டு.

நகரத்தில் கூலி வேலைக்குச் செல்ல அந்தக் கிராமத்தில் பேருந்துகள் மணிக்கணக்கில் தான் வரும். அதிகாலையில் ஒரு பஸ் வரும் அதை விட்டால் மூன்று மணிநேரம் கழித்து தான் அடுத்த பஸ் வரும். கூலி வேலைக்குச் செல்ல அந்த ஊர்மக்கள் அதிகாலை நேரத்தில் வரும் பஸ்ஸில் செல்ல அந்த பஸ் ஸ்டாப்பில் நின்றிடுவர்.

அவர்களோடு முனியாண்டியும் கொஞ்ச நாள் சென்று வந்தவன். அதிகாலையில் எழமுடியாமல் சோம்பேறியானான். இப்போது இந்தப் பிரச்சினை தான் அவன் வீட்டில் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டது.

ஏய்யா எல்லா ஆண்பிள்ளைகளும் காலையிலேயே எந்திரிச்சி வேலைக்கு பஸ்ஸை பிடிக்கப் போறாங்க. நீ மட்டும் ஏய்யா இப்படி பொறுப்பில்லாமல் இருக்க. அப்பறம் எதுக்கு உனக்கு குடும்பம் பிள்ளைகள்

அதற்கு முனியாண்டி ‘‘என்னால நாலு மணிக்கு சீக்கிரமா எந்திரிக்க முடியல. அதனால கொஞ்சநாள் பொறு நான்வேற வேலை கேட்டிருக்கேன். அது வந்த பிறகு வேலைக்குப் போயிடுவேன்’’ என்றான்.

அது வரைக்கும் வீட்டில் என்னத்த சாப்பிடுறது. விவசாய வேலை கிடைச்சிச்சு பிரச்சினையில்லாம இருந்துச்சி. இப்ப மழையில்லாமப் போச்சி. வேறவேலைக்குத் தானே போக வேணும். இப்படி சும்மா வீட்லபடுத்திருந்தா சம்பளம் வந்துடுமா?என்று மனைவி சொல்லவும் முனியாண்டி

நான் சும்மா இருக்கணும்னு ஆசையா என்று பதில் கூறினான்.

இதைப் பேசும் போது முனியாண்டியின் ஐந்து வயது பெண் குழந்தை தந்தையை உற்று பார்த்துக் கொண்டிருந்தது.

முனியாண்டியின் மனைவி குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பத் தயாரானாள். முனியாண்டியும் மனைவியிடம் வாக்குவாதம் செய்துவிட்டு வெளியே சென்றான்.

முனியாண்டி மனைவி கணவனின் பொறுப்பில்லாத பேச்சை நினைத்து மிகவும் வருத்தமடைந்தாள்.

இப்படி தூங்கி லேட்டா எந்திரிச்சா எந்த வேலைக்கு போக முடியும். குடும்பத்தை காப்பாத்த ஊரு ஜனமே சீக்கிரமே எந்திரிச்சி வேலைக்கு போகுது. நம்ம வீட்டுக்காரர் இப்படி இருக்காரே என்று புலம்பிய படியே இருந்தாள்

மறுநாள் காலை வழக்கம் போல் முனியாண்டி தாமதமாக எழுந்தவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

பக்கத்து வீட்டு பாட்டி முனியாண்டி வீட்டுக்கு வேகமாகவந்து கதவைத் தட்டினாள்.

டேய் முனியாண்டி இன்னும் தூங்கிட்டா இருக்கே என்று சப்தமிட்டுக் கொண்டு வந்தாள்.

முனியாண்டிக்கு ஒன்றும் புரியாமல் விழித்தான். என்ன பாட்டி என்றுக் கேட்டான்.

அட அசட்டுப் பையனே நீ தூங்கி லேட்டா எந்திரிச்சி வேலைக்குப் போகாததுனால உன்னோட பொண்டாட்டி பிள்ளைகள் கூட்டிட்டு ஐஞ்சி மணி பஸ்ஸுல ஏறி வேலைக்கு போயிடிச்சி. போகும்போது ஒரு விசியத்தைச் சொன்னாள்

என் புருசன் நல்லா தூங்கட்டும்; நானும் என் பிள்ளைகளும் வேலைக்கு போறோம்; இனிமே பிள்ளைகள் படிக்க பள்ளிக்கூடத்துக்கு போகாதுன்னு சொல்லிட்டு போயிட்டா என்று பக்கத்து வீட்டுபாட்டி சொல்லி முடிப்பதற்குள் ஓவென அழ ஆரம்பித்தான்.

அய்யோ பாட்டி எல்லாமே என்னால்தானே இப்படி ஆனது. நானும் மத்த ஆண்பிள்ளைகள் மாதிரி பஸ்ஸை பிடிச்சி வேலைக்கு போய் இருந்தால் இப்படி ஆகி இருக்குமா இன்னிக்கு என்பிள்ளக படிக்கபோகாமல் வேலைக்கு போகுதே. எல்லாமே என்னுடைய தூக்கத்தினால தானே.இதுக்கு நான்தான் பொறுப்பு.

எனக்கு இந்த தூக்கம் தேவையா என்று புலம்பிய படிவிருட்டென்று வேகமாக எழுந்து பஸ் ஸ்டாபுக்கு ஓடினான் முனியாண்டி.

அடுத்த பஸ்ஸுக்கு காத்திருந்து பஸ் வந்தவுடன் ஏறிவேலை செய்யும் இடத்துக்குச் சென்று மனைவி பிள்ளைகளிடம் மன்னிப்புக் கேட்டு உடனே வேலை செய்யத் தொடங்கினான்.

மறுநாள் அதிகாலையில் முதல் ஆளாய் பஸ் ஸ்டாப்பில் ஓடி நின்று முதல் பஸ்ஸைப் பிடித்துக் கொண்டு முனியாண்டி வேலைக்குப் போனான்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *