செய்திகள்

நேபாள நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் ஷேர் பகதூர் துபா வெற்றி

ஆளும் கட்சி கூட்டணி 56 இடங்களிலும் எதிர்கட்சிகள் 45 இடங்களில் முன்னிலை

காத்மண்டு, நவ. 23–

நேபாள நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் ஷேர் பகதூர் துபா ஆபார வெற்றி பெற்றுள்ள நிலையில், ஆளும் கூட்டணி 56 இடங்களில் முன்னலையில் உள்ளது.

275 உறுப்பினர்களைக் கொண்ட நேபாள நாடாளுமன்றத்துக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடைபெற்றது. 550 உறுப்பினர்களைக் கொண்ட 7 மாகாண சபைகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. நேபாள நாடாளுமன்றத் தேர்தலில் 60 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

இதையடுத்து உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. நாடாளுமன்றத்தின் 275 உறுப்பினர்களில் 165 பேர் நேரடி வாக்கு மூலமும், மீதமுள்ள 110 பேர் விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தின் மூலமும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அதேபோல், மொத்தமுள்ள 550 சட்டமன்ற உறுப்பினர்களில் 330 பேர் நேரடியாகவும், 220 பேர் விகிதாசார முறையிலும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இழு பறி ஏற்படுமா?

இதன்படி, விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முடிவுகள் அடுத்த மாதம் 8ஆம் தேதி வெளியிடப்படும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் ஷேர் பகதூர் துபா தலைமையிலான ஜனநாயக மற்றும் இடதுசாரிக் கூட்டணிக்கும், முன்னாள் பிரதமர் கே.பி. ஷர்மா ஒலியின் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (யுஎம்எல்) தலைமையிலான இடதுசாரி மற்றும் இந்து ஆதரவுக் கூட்டணிக்கும் இடையே போட்டி நிலவுகிறது.

இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளில் ஆளும் ஜனநாயக, இடதுசாரி கூட்டணி 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில் 46 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அதேவேளை, எதிர்க்கட்சியான முன்னாள் பிரதமர் கே.பி.ஷர்மா ஒலியின் நேபாள கம்யூனிஸ்ட் மற்றும் இடதுசாரி, இந்து ஆதரவு கூட்டணி கட்சிகள் 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில் 42 இடங்களில் முன்னலை பெற்றுள்ளது. தேர்தல் முடிவுகள் இழுபறியை ஏற்படுத்துமா அல்லது ஆளும் கட்சிக்கு ஆதரவாக முடியுமா என்று முழு முடிவுகள் வெளியான பிறகே தெரிய வரும்.

இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் 77 வயதான பிரதமர் ஷேர் பகதூர் துபா வெற்றி பெற்றார். சொந்த தொகுதியான தன்குடாவில் தொடர்ந்து 7வது முறையாக வெற்றி பெற்றுள்ளார். ஷேர் பகதூர் துபா 25,534 வாக்குகள் பெற்ற நிலையில், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சாகர் தக்கல் (வயது 31) 1302 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வியடைந்தார். ஷேர் பகதூர் துபா இதுவரையில் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *