செய்திகள்

நேபாளத்தின் புதிய பிரதமராக கே.பி.சர்மா ஒலி பதவியேற்றார்

Makkal Kural Official

காத்மண்டு, ஜூலை 15–

நேபாள நாட்டின் புதிய பிரதமராக கே.பி.சர்மா ஒலி 4வது முறையாக இன்று பதவியேற்றுக் கொண்டார்.

நேபாளத்தில் கடந்த 2022ம் ஆண்டு முதல் நேபாள கம்யூனிஸ்ட்–மாவோயிஸ்ட் கட்சி தலைவர் புஷ்பகமல் தாஹல் என்ற பிரசந்தா தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. இந்த கூட்டணியில் முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட்–லெனினிஸ்ட் கட்சியும் இடம்பெற்றிருந்தது. ஆனால் இந்த இரு தலைவர்களுக்கு இடையே பலமுறை கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது. தற்போது பட்ஜெட் தொடர்பான கருத்து வேறுபாடு காரணமாக நேபாள கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவை திரும்ப பெற்றது.

இதனால் பெரும்பான்மையை இழந்த பிரதமர் பிரசந்தா, கடந்த 12ம் தேதி நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினார். இதில் பெரும்பான்மை பெற முடியாமல் அவரது அரசு கவிழ்ந்தது.

இதனால் நேபாளி காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து புதிய அரசை அமைக்க கே.பி.சர்மா ஒலி நடவடிக்கை எடுத்தார். நாடாளுமன்றத்தின் மீதமுள்ள பதவிக்காலத்தில் 18 ஆண்டுகள் கே.பி.சர்மா ஒலியும், பிற பகுதியை நேபாளி காங்கிரஸ் தலைவர் ஷேக் பகதூர் துபேயும் பிரதமராக பதவியேற்பது என அவர்களுக்கு இடையே ஒப்பந்தம் போடப்பட்டது.

அதன்படி புதிய அரசை அமைக்க ஜனாதிபதியிடம் கே.பி.சர்மா ஒலி உரிமை கோரினார். அத்துடன் தன்னை ஆதரிக்கும் எம்.பி.க்களின் பட்டியலையும் அளித்தார். இதை ஜனாதிபதி ராம் சந்திர பவுடல் ஏற்றுக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து நேபாளத்தின் புதிய பிரதமராக கே.பி.சர்மா ஒலியை ஜனாதிபதி ராம் சந்திர பவுடல் நேற்று நியமித்தார்.

இதனையடுத்து இன்று காலையில் ஜனாதிபதி மாளிகையின் பிரதான கட்டிடமான ஷிடல் நிவாஸில் நடைபெற்ற விழாவில் நாட்டின் புதிய பிரதமராக கே.பி.சர்மா ஒலி 4வது முறையாக பதவியேற்றார். அவருக்கு ஜனாதிபதி பவுடால் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் சிறிய அமைச்சரவையும் பதவியேற்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *