சிறுகதை

நேசி | ஆவடி ரமேஷ்குமார்

அரசுப் பேருந்தில் கண்டக்டர் வேலை கிடைக்காதா என்று பல வருடம் ஏங்கிய ரவிக்கு அவ்வேலை கிடைத்து ஆறு மாதமாகிவிட்டது.

இப்போது பயணிகளுக்கு கொடுக்க சில்லறை இல்லாமல் தினமும் தவிப்பதால் விரும்பி ஏற்ற வேலையை இனி விட்டுவிடலாமா என யோசிக்கத் தொடங்கினான்.

அன்று வழக்கம் போல் காலையில் வேலைக்கு வந்தான் ரவி.

அலுவலகத்தில் முன்பு போல் இப்போதெல்லாம் சில்லறை தருவதில்லை. பஸ்ஸில் ஏற இன்னும் அரைமணி நேரம் இருக்கிறது. அப்போது தன்னுடன் ஒன்றாக வேலைக்கு சேர்ந்த பிரகாஷ் உற்சாகமாக வேலைக்கு வருவதை பார்த்தான்.

” ஏன் ரவி இன்னிக்கு டல்லா இருக்கே?” ரவியை பார்த்த பிரகாஷ் கேட்டான்.

” எல்லாம் சில்லறைப் பிரச்சினை தான்” என்று ஆரம்பித்து தன்னுடைய கஷ்டத்தை விளக்கிச் சொன்னான்.

” ஆமாம் நீ எப்படி இதை சமாளிக்கிறே பிரகாஷ்?”

” நான் இந்த தொழிலை ரொம்ப நேசிக்கிறேன். அதனால முன்னேறபாடுகள் செஞ்சு உற்சாகம் குறையாம பாரத்துக்கிறேன்”

” நானும் தான் இந்த தொழிலை நேசிக்கிறேன். ஆனா இப்ப வெறுக்கிறேன். முன்னேற்பாடுகள்னு சொன்னியே என்ன அது?”

” எனக்கு கண்டக்டர் வேலை கிடைக்கும்கிற நம்பிக்கைல வேலை கிடைக்கிறதுக்கு மூனு வருஷம் முன்னாடியிருந்தே சில்லறை காசுகளை சேர்த்து வைக்க ஆரம்பிச்சேன்…

……வேலை கிடைச்ச பின்னாடி எங்க தெருவுல இருக்கிற பிள்ளையார் கோவில் பூசாரிகிட்ட சில்லறைக்காக சொல்லி வச்சிருந்தேன். அவரும் ஐநூறு,ஆயிரம்னு அப்பப்ப உண்டியல் காசை சில்லறைக்காக எடுத்துக் கொடுத்து உதவுவார்.அது மட்டுமா…சொந்த பந்தங்கள்கிட்ட, ‘ நான் ஒரு கண்டக்டர்’ ங்கிறதை சொல்லி

‘ சில்லறையை சேர்த்து வச்சு எனக்கு கொடுத்து உதவுங்க’ னு கோரிக்கை வச்சிருந்தேன். அவங்களும் அடிக்கடி கொடுத்து உதவுவாங்க.இன்னும் ..” மூச்சு வாங்கினான் பிரகாஷ்.

ஆர்வமாக கேட்டுக்கொண்டிருந்தான் ரவி.

” நான் அப்பப்ப பழனி, திருப்பதி, திருத்தனி, மதுரை மீனாட்சி, வேளாங்கன்னினு பெரியகோவில்களுக்கெல்லாம் போவேன். அங்க உள்ள பிச்சைக்காரர்களிடம் ஆயிரம், ரெண்டாயிரத்துக்கு சில்லறை வாங்கிட்டு வந்து ஸ்டாக் வச்சுக்குவேன்.சொன்னா நீ நம்ப மாட்டே.என்கிட்ட இப்ப பத்தாயிரம் ரூபாய்க்கு சில்லறைக்காசுகள் ஸ்டாக் இருக்கு தெரியுமா?”

பெருமையாக சொன்ன பிரகாஷை பார்தது ‘ ஆ’ வென்று வாயை பிளந்த ரவி,

“சரி சரி எனக்கு அதிலிருந்து ஆயிரம் ரூபாய்க்கு சில்லறையை எடுத்து வந்து நாளைக்கு கொடுக்க முடியுமா? ” என்று கேட்டான்.

” ஸாரி ரவி! ‘ ஐடியா’ கொடுத்திட்டேன். நீ உண்மையிலேயே உன் தொழிலை நேசிச்சா என்னை மாதிரி சில்லறையை சேர்த்துக்கோ. இனிமேல் நான் யார்கிட்டயும் என் தொழில் ரகசியத்தை சொல்லப்போறதில்லேனு இப்ப முடிவு பண்ணிட்டேன்.வரேன்!”

சொன்ன பிரகாஷ் ரவியை விட்டு விலகி வேகமாக தனது பஸ்ஸில் போய் ஏறிக்கொண்டான்.

ரவி தனது பஸ்ஸில் போய் ஏறி , ‘‘அம்மா… அண்ணே .. சில்லறை இல்லை .

சில்லறையா கொடுத்து டிக்கட் வாங்கிக்கங்க… டிக்கட் டிக்கட் … என்று சொல்லிக்கொண்டே பஸ்சுக்குள் நடைபோட்டான்.

அவனது நேசமான குரல் கேட்டதும் பயணிகள் சில்லறையைக் குவி்த்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *