செய்திகள்

நேசம் மறந்த உறவுகள் – ராஜா செல்லமுத்து

நிர்மலாவின் மனதிற்குள் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது? அவள் எதற்காக இந்தப் பூங்காவில் அமர்ந்திருக்கிறாள். யாருடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருக்கிறாள். அவள் பேசும்போது அடிக்கடி தேம்பி அழுகிறாள். உடைந்து போய் அழுகிறாள். வார்த்தைகள் சரிவர வராமல் திணறுகிறாள். நிர்மலாவின் நிலை என்ன? அவள் ஏன் தனியாக அமர்ந்திருக்கிறாள்; என்றெல்லாம் அவளின் மூன்று வயது மகள் அபர்ணாவிற்குத் தெரிய வாய்ப்பில்லை தான் .

அந்தப் பெரிய பூங்காவில் அவரவர்களுக்கு எது தேவையோ அதைச் செய்து கொண்டு இருந்தார்கள். அவள் மட்டும் இரண்டு பேர்கள் அமரும் இருக்கையின் ஓரத்தில் அமர்ந்து அழுதபடியே பேசிக் கொண்டிருந்தாள்.

இது எதையும் அறியாத அவளது மகள் அபர்ணா அருகில் இருக்கும் பூச்செடியிலிருந்து பூவைப் பறிப்பதும் இலைகளைப் பிடுங்கித் தன் தாயின் தலையில் போடுவதுமாக இருந்தாள்.

தன்மகள் தன் தலையில் போடுவதைக் கூட பெரிதாக எடுத்துக் கொள்ளாத நிர்மலா செல்போனில் பேசுவதிலேயே குறியாக இருந்தாளேயாெழிய அவள் தலை முழுவதும் அபர்ணா இலையும் பூக்களை கிள்ளியும் போட்டதை அறியவில்லை.

அந்தப் பூங்காவில் நடப்பவர்கள் அவளுக்கு அருகில் அமர்ந்திருப்பவர்கள் என்றும் எல்லோரும் அந்தக் குழந்தையின் செயலை பார்த்து ஒரு பக்கம் நகைத்தார்கள். மறுபக்கம் வருத்தப்பட்டார்கள் .

இந்தப் பெண் ஏதோ ஒரு பிரச்சனையில் இருக்கிறாள். ஆனால் அந்த குழந்தைக்கு என்ன தெரியும்; தன் தாயின் நிலை என்னவென்று தெரியாமல் அந்தக் குழந்தை இலைகளையும் பூக்களையும் கிள்ளிப் போட்டு விளையாடிக் கொண்டிருக்கிறது என்று அக்கம் பக்கம் அமர்ந்திருந்தவர்கள் பேசிக் கொண்டார்கள்.

அவளின் பேச்சு நீண்டது. ஏதோ அவள் ஒரு துக்கத்தில் இருக்கிறாள் என்பதை மட்டும் தூரத்தில் இருந்தவர்கள் கணித்துக் கொண்டார்கள்.

அவளிடம் கேட்கலாமா? என்றால் அறிமுகம் இல்லாத நபரிடம் என்ன கேட்பது? எதற்காக அழுகிறீர்கள்? என்று கேட்டால் என்ன பதில் சொல்வாள் ?அதைக் கேட்பதற்கு நீங்கள் யார்? என்று கேட்டுவிட்டால் நாம் முகத்தைப் போய் எங்கு வைத்துக் கொள்வது ? என்றெல்லாம் பல ஆலோசனைகளுக்குப் பிறகு யாரும் அவளிடம் எதுவும் கேட்கவில்லை .

தலையில் மகள் போட்ட பூக்கள், இலை என்று அலங்கோலமாகக் கிடந்தது; நிர்மலாவின் தலை.சில நேரம் இதைத் தன் இடது கையை கொண்டு அதையெல்லாம் தட்டி விட்டாள் . அவள் தட்டி விடும்போது சரியாக வாரிய அவளின் தலை இப்போது கலைந்திருந்தது. வலது கையில் செல்போனை வைத்து பேசிக்கொண்டு இருந்தவள், இடது கையில் தன் மகள் செய்யும் சேட்டைகளைத் தாங்கிக் கொண்டு தன் தலையைத் தட்டி விட்டாள் .

இடது பக்கம் செல்போனை மாற்றி வலது கையால் தலையில் இருந்த பூக்களையும் இலைகளையும் தட்டி விட்டாள்.

அப்போது அவள் வாரி இருந்த மொத்த முடியும் அங்கங்கே சிலிப்பிக் கொண்டிருந்தது.

அந்தக் குழந்தை மறுபடியும் ஓடி ஓடி இலைகளையும் பூக்களையும் கிள்ளிக் கிள்ளி அந்தத் தாயின் தலையில் போட்டுக் கொண்டிருந்தது. குழந்தையின் சேட்டையை கொஞ்சம் கூட கண்டுக்காமல் அவள் பேசிக் கொண்டே இருந்தாள்.

ஒரு வயதான தம்பதிகள் இதைப் பார்த்துக் கொண்டே இருந்தார்கள்.

தன் மனைவியிடம் அந்தப் பெரியவர்

என்னம்மா அந்த பொண்ணு எதுக்கு அழுதுகிட்டு இருக்கு . அந்தக் குழந்தை எதுவும் தெரியாம பூவையும் இலையும் கிள்ளி போட்டுகிட்டு இருக்கே? நாம போய் என்னன்னு கேட்கலாமா? என்று அந்த பெரியவர் மனைவியிடம் சொன்னபோது

எதுக்குங்க தெரியாதவங்க கிட்ட போய் கேட்டுட்டு ஏதாவது தப்பா நினைச்சுட்டா? என்று அந்த பெரியவரின் மனைவி பெரியவரை தடுத்தாள்.

ஒரு வழியாக நிர்மலா பேசி முடித்து கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

அதற்குள் ஓடி ஆடிய அந்தக் குழந்தையை இறக்கைகள் போல தன் இரு கைகளை நீட்டினாள். தன் தாயின் அரவணைப்புக்குள் அடங்கினாள் அபர்ணா.

அந்தக் குழந்தையின் கன்னம் நெற்றி என்று தடவிய நிர்மலா முன்னை விட கொஞ்சம் அதிகமாக அழ ஆரம்பித்தாள்.

இதற்கு மேல் இந்தப் பெண்ணிடம் கேட்காமல் இருப்பது மனிதனாகப் பிறந்த நமக்கு அழகல்ல ? என்று நினைத்த அந்தப் பெரியவர் நிர்மலாவின் அருகில் வந்து

ஏம்மா நாங்களும் ரொம்ப நேரமா பார்த்துட்டு இருக்கோம். செல்போன்ல நீ பேசி அழுத. குழந்தை சேட்டைகள் பண்ணுச்சு. அத எதையும் கேட்கல. அப்படி என்னம்மா பிரச்சினை உனக்கு. எங்களுக்கு நீ சொல்லனும்னா சாெல்லு. நாங்க யாரோன்னு நினைச்சா நீ சொல்ல வேண்டாம்மா. எங்கள உன்னோட அப்பா அம்மாவ நெனச்சுக்க என்னன்னு சொல்லும்மா என்று அந்தப் பெரியவர் கேட்டபோது

திரும்பி அழ ஆரம்பித்தாள் நிர்மலா .அதற்குள் நிர்மலாவின் தோளைத் தொட்ட அந்தப் பெரியவரின் மனைவி நிர்மலாவின் தலையை ஆறுதலாகத் தடவிக் கொடுத்தாள்.

அழாதம்மா என்ன பிரச்சனை? சொல்லு என்ற போது

ஒன்னும் இல்லம்மா . இன்னைக்கு எங்களுக்கு கல்யாண நாள். எங்க வீட்டுக்காரர் என்னையும் என் குழந்தையும் கண்டுக்கிறதில்ல. கை நிறைய சம்பாதிக்கிற மனுஷன் அப்படிங்கறதுனால அவர் இஷ்டத்துக்கு போறாரு. இஷ்டத்துக்கு வராரு. நான் காலையில் இருந்து எவ்வளவா சொல்லிப் பாத்தேன். இன்னைக்கு ஆபீஸ் லீவ் போடுங்க. இன்னைக்கு கல்யாண நாள் வீட்ல இருக்கலாம்னு. ஆனா அவரு கேக்கல பாருங்க. இவ்வளவு நேரம் ஆச்சு. இன்னும் அவர் வந்து சேரல. அவர்கிட்ட தான் இப்ப பேசிகிட்டு இருந்தேன் . கல்யாணம் முடிஞ்சு தான் நாலு அஞ்சு வருஷம் ஆச்சு இல்ல . இப்ப என்ன கல்யாணம் நாள் அப்படின்னு எரிஞ்சு விழுந்தார். வருத்தம் இருந்தது. அதுதான் கொஞ்சம் மனசு சரியில்ல என்று நிர்மலா சொன்ன போது

அட விடும்மா உன் வீட்டுக்காரர் புத்தி அவ்வளவுதான்னு நினைச்சுக்க. ஆனா உன் கல்யாண நாளுக்கு கடவுளே ஆசீர்வாதம் பண்ண மாதிரி உன்னோட குழந்தை உன் தலையில பூவையும் எலையும் கிள்ளி போட்டு ஆசீர்வாதம் பண்ணிட்டா. இதக் கடவுள் பண்ண ஆசீர்வாதமா நினைச்சுக்க

என்று அந்தப் பெரியவரும் அவர் மனைவியும் சொன்ன போது

தன் மடியில் அமர்ந்திருந்த அபர்ணாவை இறுக அணைத்து முத்தம் கொடுத்தாள் நிர்மலா.

ஒன்னும் வருத்தப்படாதம்மா; எல்லாம் கொஞ்ச நாளைக்கு தான் சரியா போகும். வீட்டுக்கு போ என்ற போது

அந்தப் பெரியவரையும் அவர் மனைவியும் இரு கைகள் எடுத்து கும்பிட்டபடி கிளம்பினாள் நிர்மலா .

அந்தப் பெரியவருக்கும் அவர் மனைவிக்கும் டாட்டா காட்டிவிட்டு சென்றாள் அபர்ணா

அந்தப் பூங்காவை விட்டு நிர்மலா மறையும் வரை அந்தப் பெரியவரும் மனைவியும் பார்த்துக் கொண்டே இருந்தார்கள்.

அவர்கள் நினைவில் பெரியவரின் திருமண நாளன்று தன் குழந்தைகள் வரவில்லை. நாம மட்டும் தான் இருந்தாேம் என்ற ஆதங்கம் வருத்தமும் அவர்களுக்கும் இருந்தது.

இந்த உலகம் பணத்தால் மட்டுமே தீர்மானிக்கப்படுகிறது..

நிர்மலாவுக்கு கணவன் ; நமக்கு நம்ம மகன் மகள்கள், இவ்வளவு தான் உலகம் என்று பெரியவர் நினைத்தபோது

தன் மனைவியைப் பார்த்தார்.

அவர் மனைவியின் கண்களில் கண்ணீர் கசிந்திருந்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *