செய்திகள்

நேசனல் ஹெரால்டு அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

டெல்லி, ஆக. 2–

டெல்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு அலுவலகம் உள்பட 12 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு நேஷனல் ஹெரால்டு எனும் பத்திரிகை ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்டது. ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் இதற்கு நிதி உதவி அளித்தனர். இந்த பத்திரிகையை அசோசியேட் ஜர்னல்ஸ் லிமிடெட் எனும் நிறுவனம் நடத்தி வந்தது. இந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு தற்போது ரூ. 800 கோடிக்கும் அதிகம் என கூறப்படுகிறது.

இந்நிலையில், சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் முக்கிய பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனம், அசோசியேட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவனத்தை கையகப்படுத்தியது. இந்த கையகப்படுத்தல் காரணமாக, அசோசியேட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் ரூ.800 கோடி சொத்துக்கள் யங் இந்தியா நிறுவனத்தின் சொத்துக்களாக மாறியதால், அதற்கு சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் வருமான வரி கட்ட வேண்டும் என்று வருமான வரித்துறை தெரிவித்தது.

சுப்பிரமணியசாமி வழக்கு

யங் இந்தியா நிறுவனம் லாப நோக்கமற்றது என்பதால், வரி கட்டத் தேவையில்லை என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த பரிமாற்றத்தில் நிதி மோசடி நடந்திருப்பதாகக் கூறி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.

முதலில் ராகுல் காந்தியிடம் 5 நாட்கள் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை அவரிடம் சுமார் 150 கேள்விகளை எழுப்பியது. இதையடுத்து கடந்த மாத இறுதியில் சோனியா காந்தியிடம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை அவரிடம் சுமார் 100 கேள்விகளை எழுப்பி பதில் பெற்றது.

இந்நிலையில், டெல்லியில் உள்ள நேஷ்னல் ஹெரால்டு அலுவலகம் மற்றும் அதனோடு தொடர்புடைய 11 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, நேஷனல் ஹெரால்டு சொத்துக்கள் முடக்கப்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.