போஸ்டர் செய்தி

நெல் ஜெயராமன் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல்

சென்னை, டிச.6–

‘நெல்’ ஜெயராமன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவரது இழப்பு தமிழ்நாட்டிற்கும், வேளாண்மை துறைக்கும் பேரிழப்பாகும் என்று அவர் கூறியுள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:–

நமது பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாக்கும் அரும்பணியை ஆற்றிய ‘நெல்’ ஜெயராமன் இன்று (6–ந்தேதி) காலை உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், கட்டிமேடு கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன் ‘‘நமது நெல்லை காப்போம்” என்ற இயக்கத்தின் மூலம் பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாத்து தமிழ்நாடு விவசாயிகளிடையே பிரபலப்படுத்தி, விவசாயிகள் அதனை பயிரிட்டு பயன்பெறும் வகையில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டவர். இவர் மாப்பிள்ளை சம்பா, ராஜமன்னார், கவுனி, மிளகுசம்பா, குண்டு கார் போன்ற 174 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்து, விவசாயிகளிடையே பிரபலபடுத்தி உள்ளார்.

ஜெயராமன் இதுவரை சுமார் ஆயிரக்கணக்கான வேளாண் பெருமக்களை பாரம்பரிய நெல் விவசாயத்தில் ஈடுபடுத்தி, தமிழ்நாட்டில் பாரம்பரிய நெல் உற்பத்தியினை உயர்த்திய பெருமைக்குரியவர்.

ரூ.5 லட்சம் நிதி

பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாப்பதில் நெல் ஜெயராமன் ஆற்றிய சிறப்பான சேவையினை, தமிழ்நாடு அரசு அங்கீகரித்து பாராட்டும் விதமாக 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கிட 14.11.2018 அன்று நான் உத்தரவிட்டேன். எனது உத்தரவின் பேரில், உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ் மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் இரா. துரைக்கண்ணு ஆகியோர் 5 லட்சம் ரூபாய் நிதியினை வழங்கினார்கள்.

விவசாயிகளிடையே பாரம்பரிய நெல் ரகங்களை பிரபலப்படுத்தி, அதன் உற்பத்தியை ஊக்கப்படுத்திய ஜெயராமனின் மறைவு தமிழ் நாட்டிற்கும், வேளாண்மைத் துறைக்கும் ஒரு பேரிழப்பாகும்.

ஜெயராமனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், வேளாண் பெருங்குடி மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

அதிகாலையில் காலமானார்

சென்னை தேனாம்பேட்டை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நெல் ஜெயராமன் இன்று காலை 5.10 மணிக்கு காலமானார்.

திருத்துறைப்பூண்டியை அடுத்த கட்டிமேடு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன். இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வாரின் மாணவர்களில் ஒருவர் நெல் ஜெயராமன். இவர், 169 பாரம்பரிய நெல் வகைகளை மீட்ட பெருமைக்கு உரியவர். பாரம்பரிய நெல் விதைகளை அழிவிலிருத்து காத்த அவர், புற்று நோயால் பாதிக்கப்பட்டார்.

சாதாரண கூலித் தொழிலாளியாக இருந்த அவர் பின்னர் நெல் வகைகளைக் காப்பாற்ற களம் இறங்கினார். ஆண்டுதோறும் நெல் திருவிழா நடத்தி பாரம்பரிய நெல்வகைகளை பிரபலப்படுத்தியிருந்தார். இவர் கடந்த 2 ஆண்டுகளாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று காலை காலமானார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, நெல் ஜெயராமனை பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வந்தனர்.

அவருக்கு பல்வேறு நாடுகளில் உள்ள தமிழர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், விவசாயிகள், திரைப்பட கலைஞர்கள் என பல்வேறு தரப்பினரும் நிதியுதவி செய்தனர்.

நெல் ஜெயராமன் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *