சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
நெல்லை, டிச. 21–
நெல்லை போலீஸ் சூப்பிரண்டுக்கு விதிக்கப்பட்ட கைது வாரண்டுக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை, சிவந்திப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பரமானந்தம் என்கிற பட்டியல் இனத்தை சேர்ந்தவரின் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு, வழி மறிக்கப்பட்டு, வேலியிடப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரில் அறிக்கை தாக்கல் செய்ய, திருநெல்வேலி போலீஸ் சூப்பிரண்டுக்கு கடந்த ஜூன் 10ஆம் தேதி தாழ்த்தப்பட்டோர் ஆணையம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இருமுறை அவகாசம் வழங்கிய பிறகும் ஆணையத்தின் நோட்டீஸ் மீது திருநெல்வேலி போலீஸ் சூப்பிரண்டு அறிக்கை தாக்கல் செய்யாததால், எஸ்.பி. சரவணனை கைது செய்து ஆஜர்படுத்தும்படுத்தும்படி, தென் மண்டல ஐ.ஜி-க்கு உத்தரவிட்டு, சரவணன் மீது ஜாமீனில் வெளிவரக்கூடிய வாரண்ட் பிறப்பித்தும் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
கைது வராண்டுக்கு தடை
இந்த உத்தரவுக்கு எதிராக போலீஸ் சூப்பிரண்டு சரவணன் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அவரது சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர், விசாரணை அறிக்கையை பரிசீலிக்காமலேயே கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
எஸ்.பி.க்கு பதிலாக கூடுதல் எஸ்பி ஆஜராக அனைத்து அதிகாரங்களையும் டிஜிபி வழங்கி இருந்ததாகவும் தெரிவித்த போலீஸ் சூப்பிரண்டு, முதலில் மிரட்டும் வகையில் பத்திரிகை செய்தியை வெளியிட்டுவிட்டு, பின்னர் தான் வாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, நெல்லை போலீஸ் சூப்பிரண்டுக்கு எதிரான கைது வாரண்ட் உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.