செய்திகள்

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் விடிய விடிய கொட்டி தீர்த்த கன மழை

நெல்லை,நவ.3–

வடகிழக்கு பருவ மழை தொடங்கியதால் தமிழகம் முழுவதும் மழை பெய்ய தொடங்கியது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. மணிமுத்தாறில் 29 செ.மீ.மழை பதிவாகியுள்ளது.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மிதமான மழை பெய்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மழை குறைந்து வெயில் அடிக்க தொடங்கியது. எனினும் அதிகாலை வேளையில் கடும் பனிப்பொழிவும் உண்டானது. இந்த நிலையில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியதால் தமிழகம் முழுவதும் மழை பெய்ய தொடங்கியது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

நேற்று இரவில் தொடங்கிய மழை விடிய விடிய பெய்தது. நெல்லை மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மிக பலத்த மழை பெய்தது. குறிப்பாக மணி முத்தாறு, பாபநாசம், குற்றாலம் மலைப்பகுதியில் கன மழை கொட்டி தீர்த்தது. மணிமுத்தாறு அணைப் பகுதியில் வரலாறு காணாத மழை பெய்தது. இந்த பகுதியில் அதிகபட்சமாக 29 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது. இதனால் அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 877 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இதனால் மணிமுத்தாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்து. இன்று 89.40 அடியாக உள்ளது. பாபநாசம் மலைப்பகுதியிலும் வழக்கத்தை விட அதிக மழை பெய்தது. இங்கு 16 செ.மீ. மழை கொட்டியது. கனமழை காரணமாக அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 748 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் பாபநாசம் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 6 அடி உயர்ந்து இன்று 105.60 அடியாக உள்ளது.

குற்றாலம் மலைப்பகுதியிலும் கன மழை பெய்தது. குற்றால சீசனுக்கு பின்னர் சமீபத்தில் பெய்த மழையினால் அருவிகளில் மிதமான அளவு தண்ணீர் விழுந்தது. பின்பு மழை நின்றதால் அருவில் தண்ணீர் குறைந்தது. இந்த நிலையில் நேற்று இரவில் இருந்து இப்பகுதியில் கன மழை பெய்ய தொடங்கியது.

வெள்ளப்பெருக்கு

இதனால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பாதுகாப்பு வளைவையும் தாண்டி தண்ணீர் கொட்டியதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட வில்லை. நெல்லையில் பெய்த மழையினால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் ஓடியது. தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது.

விடிய விடிய மழை தூறிக்கொண்டே இருந்ததால் குளிர்ந்த கால நிலை நிலவியது. களக்காடு பகுதியில் கன மழை பெய்தது. இதனால் ஓடைகள், கால்வாய் பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. நெல்லை மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

தூத்துக்குடி மாவட்டத்திலும் நேற்று இரவு பெய்ய தொடங்கிய மழை விடிய விடிய பெய்தது. குறிப்பாக சாத்தான்குளம், குலசேகரப்பட்டினம், திருச்செந்தூர் பகுதியில் கனமழை கொட்டி தீர்த்தது. அதிகபட்சமாக சாத்தான்குளத்தில் ஒரே நாளில் 22 செ.மீ. மழை பதிவானது. குலசேகரப் பட்டினத்தில் 20 செ.மீ. மழையும், திருச்செந்தூரில் 11 செ.மீ. மழையும் பதிவானது.

தூத்துக்குடியில் மிதமான மழை பெய்தது. ஸ்ரீவைகுண்டம், மணியாச்சி பகுதியில் கனமழை பெய்தது. கனமழை காரணமாக சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் ஓடியது. தொடர்ந்து இன்று காலையும் மழை பெய்து கொண்டே இருந்ததால் தூத்துக்குடியில் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்தது. சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்தது. நாகை மாவட்டம் வேதாரண்யம், தலைஞாயிறு, கரியாபட்டினம், வாய்மேடு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்துள்ளது. வேதாரண்யத்தில் மழை அளவு 5 செ.மீ ஆக பதிவாகி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோயில், தக்கலை, குழித்துறை உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவு முதல் மழை பெய்தது.

மதுரை மாவட்டத்தில், ஒத்தக்கடை, மேலூர், அழகர்கோயில், அண்ணா நகர், பழங்காநத்தம், ஆரப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. தர்மபுரி மாவட்டம் அரூர், பென்னாகரம், பாலக்கோடு மற்றும் நகர்ப்பகுதிகளிலும் மழை பெய்தது.

கனமழையை தொடர்ந்து தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்க மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நாகை மாவட்டத்தில் கடல் சீற்றம் காரணமாக பழையாறு, பூம்புகார், தரங்கம்பாடி பகுதி விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால், கரையோரத்தில் 750 படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. நாட்டுப்படகு மீனவர்கள் மட்டும் கடலுக்கு சென்றுள்ளனர்.

இதனிடையே, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், நெல்லை, குமரி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒரே நாளில் மட்டும் நெல்லை மாவட்டம், மணிமுத்தாறில் 29 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. சாத்தான்குளத்தில் 22, பாபநாசத்தில் 16, திருச்செந்தூரில் 11, கேஎம் கோயில் பகுதியில் 10 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *