செய்திகள்

நெல்லை, கோவை மாநகராட்சிகளின் 2 தி.மு.க. மேயர்கள் திடீர் ராஜினாமா

Makkal Kural Official

நெல்லை, ஜூலை 4– –

கோவை, நெல்லை மாநகராட்சிகளின் 2 தி.மு.க. மேயர்கள் நேற்று திடீரென தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதுதொடர்பான கடிதத்தை கமிஷனர் களிடம் அவர்கள் கொடுத்தனர்.

தமிழகத்தில் மொத்தம் 21 மாநகராட்சிகள் உள்ளன. இதில் 11 பெண்கள் மேயர் பொறுப்பில் இருந்தனர். இதில் சென்னை, தாம்பரம், ஆவடி, காஞ்சீபுரம், நெல்லை, கோவை உள்பட 20 மாநகராட்சிகள் தி.மு.க வசம் உள்ளன. கும்பகோணம் மாநகராட்சி கூட்டணி கட்சியான காங்கிரஸ் வசம் இருக்கிறது. இந்தநிலையில் கோவை மேயர் கல்பனா, நெல்லை மேயர் சரவணன் ஆகியோர் நேற்று திடீரென்று ராஜினாமா செய்தனர்.

அதுபற்றிய விவரம் வருமாறு:-–

கோவை மாநகராட்சி

கோவை மாநகராட்சியில் மொத்தம் 100 வார்டுகள் உள்ளன. கடந்த உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி, மாநகராட்சியில் மொத்தம் உள்ள 100 வார்டுகளில் 96 வார்டுகளை கைப்பற்றியது. அண்ணா தி.மு.க. 3 இடங்களிலும், எஸ்.டி.பி.ஐ. கட்சி ஒரு இடத்தை பிடித்தது.

தி.மு.க. சார்பில் மாநகராட்சி மேயராக 19-வது வார்டில் வெற்றி பெற்ற கல்பனா தேர்வு செய்யப்பட்டார். அவர் 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் பொறுப்பேற்றுக்கொண்டார்.

கல்பனா தான் கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயர். இவரது கணவர் ஆனந்தகுமார் தி.மு.க. வில் பொறுப்புக்குழு உறுப்பினராக உள்ளார்.

கல்பனா மேயராக பொறுப்பேற்றது முதல் அவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்தன. மாநகராட்சியில் உள்ள 5 மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வந்தனர். மேலும் தங்களது வார்டுகளில் வளர்ச்சி பணிகளை ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவதாக கவுன்சிலர்கள் அதிருப்தி தெரி வித்தனர். இது மாநகராட்சி கூட்டத்தி லும் அவ்வப்போது எதிரொலித்தது.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மேயர் கல்பனாவின் சொந்த வார்டில் தி.மு.க. வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை விட பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை அதிக ஓட்டுகள் பெற்றார். இதுகுறித்த புகார் கட்சியின் மேலிடம் வரை சென்றது.

இந்தநிலையில் நேற்று மாலை மேயர் கல்பனா, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம், ராஜினாமா கடிதத்தை வழங்கினார். தனது உதவியாளர் மூலம் ராஜினாமா கடிதத்தை அளித்ததாக தெரிகிறது.

இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறும்போது, மேயர் கல்பனா தனது உடல் நிலை மற்றும் சொந்த காரணங்களால் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக உதவியாளர் மூலம் கடிதம் கொடுத்துள்ளார். அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டது. தொடர்ந்து சட்டப்படி மற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

நெல்லை மாநகராட்சி

நெல்லை மாநகராட்சிக்கு கடந்த 2022-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மொத்தம் உள்ள 55 வார்டுகளில் 51 இடங்களை தி.மு.க. கூட்டணி கைப்பற்றியது. இதில் தி.மு.க. மட்டும் 44 இடங்களில் வெற்றி பெற்றது.

இதையடுத்து மேயருக்கான தேர்தலில் 16-வது வார்டில் வெற்றி பெற்றிருந்த தி.மு.க.வை சேர்ந்த பி.எம்.சரவணன் மேயராக தேர்ந்து எடுக்கப்பட்டார். தொடக்கம் முதலே மேயருக்கும், கவுன்சிலர்களுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. இதனால் மாதந்தோறும் நடைபெறும் மாநகராட்சி கூட்டத்தில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.

இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன் மேயர் பி.எம்.சரவணனை, தி.மு.க. தலைமை சென்னைக்கு அழைத்து விசாரணை நடத்தியது. மேலும் அமைச்சர் கே.என்.நேரு, நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் மேயர் மற்றும் கவுன்சிலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இதனிடையே கடந்த மாதம் 28-ம் தேதி மாநகராட்சி கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இதில் பெரும்பாலான கவுன்சிலர்கள் கலந்து கொள்ளவில்லை. இதையடுத்து கூட்டம் ரத்து செய்யப்பட்டது. நெல்லை மாநகராட்சியில் தொடர்ந்து கூட்டம் நடத்த முடியாததால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டது.

இந்தநிலையில் பி.எம்.சரவணன் தனது மேயர் பதவியை திடீரென ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா கடிதம் மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் வசம் கிடைத்தது. இதையடுத்து மேயரின் ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.

கட்சி தலைமை வலியுறுத்தல்

இதுகுறித்து நெல்லை மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் கூறுகையில், ‘மேயர் சரவணன் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார். அவர் தனது குடும்ப சூழ்நிலை காரணமாக ராஜினாமா செய்துள்ளதாக கடிதத்தில் தெரிவித்து உள்ளார். மேயர் ராஜினாமா குறித்து அனைத்து கவுன்சிலர்களுக்கும் தகவல் வழங்கப்படும். வருகிற 8-ம் தேதி மாநகராட்சி கூட்டம் நடைபெறும். மேயர் பதவி காலியானதால் துணை மேயராக இருக்கும் கே.ஆர்.ராஜூ மேயர் பொறுப்பு வகிப்பார். அவர் தலைமையில் 8-ம் தேதி கூட்டம் நடைபெறும்’ என்றார்.

2 மேயர்கள் மீதும் வந்த புகார்களின் அடிப்படையில் கட்சி தலைமை வற்புறுத்தியதால், அவர்கள் இருவரும் ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *