திருநெல்வேலி, மார்ச் 18–
நெல்லையில் நிலத்தகராறு காரணமாக ஓய்வு பெற்ற சப்–இன்ஸ்பெக்டர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
நெல்லை டவுன் தடிவீரன் கோயில் தெருவை சேர்ந்த ஜாகிர் உசேன் பிஜிலி (வயது 57) காவல்துறையில் சப்–இன்ஸ்பெக்டராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சி காலத்தில் அவரின் தனிப்பிரிவு அதிகாரியாகவும் இருந்துள்ளார்.
இவர் தற்போது நெல்லை டவுனில் உள்ள முர்த்தின் ஜர்கான் தர்காவில் முத்தவல்லியாக இருந்து வருகிறார். தர்க்கா அருகே வக்ப் வாரியத்திற்கு சொந்தமான 36 சென்ட் நிலம் தொடர்பாக இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் பிரச்சனைகள் இருந்ததுள்ளது. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இதனிடையே ஜாகிர் உசேன் ரம்ஜானை ஒட்டி நோன்பு இருந்து வரும் நிலையில் இன்று அதிகாலையில் தடிவீரன் கோவில் தெருவில் உள்ள தர்காவுக்கு தொழுகைக்கு சென்றுள்ளார். தொழுகையை முடித்துவிட்டு 2 சக்கர வாகனத்தில் வீட்டுக்கு வரும் வழியில் தெற்கு மவுண்ட் ரோடு பகுதியில், மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் ஜாகிர் உசேன் பிஜிலியை வழிமறித்தது. அவரின் தலை, கழுத்து மற்றும் பல்வேறு பகுதிகளில் அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்று விட்டது. அவ்வழியாக வந்தவர்கள் இதனை பார்த்து டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர் கீதா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.
ஜாகிர் உசேன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலைச் சம்பவம் நெல்லையில் பரபரப்பு ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் கொலையாளிகளை தேடி வருகிறார்கள். மேலும் கொலையாளிகளை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் நெல்லை டவுன் காட்சி மண்டபம் அருகே உள்ள 36 சென்ட் இடம் தொடர்பான பிரச்சினையில் இந்த கொலை நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த இடம் தொடர்பாக ஜாகீர் உசேன் பிஜிலிக்கும், அதே பகுதியை சேர்ந்த இஸ்லாமிய பெண்ணை மணம் முடித்த பட்டியலின பிரமுகர் ஒருவருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே ஜாகீர் உசேன் பிஜிலியின் உறவினர்கள், இடப்பிரச்சனை காரணமாகவே இந்த கொலை நடந்துள்ளது. போலீசார் உடனடி நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த கொலையை தவிர்த்திருக்கலாம் என்று போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர்.அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, கொலையாளிகளை உடனடியாக கைது செய்வதாக உறுதி அளித்தனர்.
கொலை செய்யப்பட்ட ஜாகீர் உசேன் பிஜிலிக்கு மனைவி, 1 மகன் மற்றும் மகள் உள்ளனர். மகன் திருமணமாகி வெளிநாட்டில் வசித்து வருகிறார்.
இதனிடையே இந்த கொலை வழக்கு தொடர்பாக கார்த்திக், அக்பர் பாஷா ஆகிய 2 பேர் நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர்.