செய்திகள்

நெல்லுக்கான ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.1,940 ஆக நிர்ணயம்

புதுடெல்லி, ஜூன்.10-

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு ரூ.72 உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதேபோல பாஜ்ரா, பருப்பு வகைகள் உள்ளிட்டவற்றுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், 2021–2022 சாகுபடி ஆண்டில், நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு ரூ.72 உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அதன்படி, நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.1,868-லிருந்து ரூ.1,940 ஆக உயர்த்தப்படுகிறது.

அதுபோல், இந்த சாகுபடி ஆண்டில் கம்புக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.2 ஆயிரத்து 150லிருந்து ரூ.2 ஆயிரத்து 250 ஆக உயர்த்தப்படுகிறது.

இத்தகவலை நிருபர்களிடம் தெரிவித்த மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திரசிங் தோமர், ‘‘குறைந்தபட்ச ஆதரவு விலை நடைமுறையில் இருக்கிறது. அது இப்போது உயர்த்தப்பட்டுள்ளது. வருங்காலத்திலும் உயர்த்தப்படும்’’ என்று கூறினார்.

இந்த உயர்வால், தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நேரத்தில் எந்த பயிரை விதைப்பது என்று விவசாயிகள் முடிவெடுக்க உதவியாக இருக்கும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேபோல பாஜ்ரா, பருப்பு வகைகள் உள்ளிட்டவற்றுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையும் அறிவிக்கப்பட்டுள்ளது. எள்ளுக் கான எம்எஸ்பி குவிண்டாலுக்கு கூடுதலாக ரூ.452-ம் துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு உள்ளிட்டவற்றுக்கு குவிண்டாலுக்கு கூடுதலாக தலா ரூ.300ம் உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திரசிங் தோமர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *