செங்கல்பட்டு, நவ. 19–
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த நெம்மேலியில் தினசரி 150 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் ஆலையில் 16வது நிதிக்குழு உறுப்பினர்கள் ஆய்வு செய்தனர்.
அப்போது ஆலையில் இருந்து நாளொன்றுக்கு எவ்வளவு குடிநீர் உற்பத்தி செய்யப்படுகிறது, ஆலையின் செயல்பாடுகள், ஆலையின் விரிவாக்க பணிகள் எவ்வாறு நடைபெற்று வருகிறது என அதிகாரிகளிடம் நிதிக்குழுவினர் கேட்டறிந்தனர்.
இதனையடுத்து சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் செல்லும் அவர்கள், ராமேசுவரத்துக்கு கார் மூலம் செல்கின்றனர். அங்கு இரவு ராமநாதசுவாமி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கின்றனர்.
நாளை (புதன்கிழமை) காலை தங்கச்சிமடம் பஞ்சாயத்தில் அமைந்துள்ள பிரதமரின் கிராமப்புற வீடு கட்டும் திட்ட பணிகளை பார்வையிடுகின்றனர். பின்னர் ராமநாதபுரம் நகராட்சியை பார்வையிட்டுவிட்டு, பிற்பகலில் கீழடி அகழ்வாராய்ச்சியை ஆய்வு செய்கின்றனர். அதைத்தொடர்ந்து மதுரையில் இருந்து விமானம் மூலம் நிதிகுழுவினர் டெல்லி புறப்பட்டு செல்கின்றனர்.
முன்னதாக மத்திய அரசின் 16-வது நிதிக்குழு 4 நாள் பயணமாக தமிழ்நாட்டுக்கு நேற்று முன்தினம் வந்ததது. இதில் தலைவர் அரவிந்த் பனகாரியா தலைமையில் ஆணைய உறுப்பினர்கள் அஜய் நாராயண் ஜா, ஆனி ஜார்ஜ் மேத்யூ, மனோஜ் பாண்டா, சவுமியா காந்தி கோஷ், ஆணைய செயலர் ரித்விக் பாண்டே, இணை செயலர் ராகுல் ஜெயின் உள்ளிட்ட 12 பேர் அடங்கிய இந்த குழுவினர் சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலில் தங்கினர். அவர்களுக்கு முதலமைச்சர் சார்பில் இரவு விருந்து வழங்கப்பட்டது.
இதையடுத்து நேற்று தமிழக அரசுடன் நிதிக்குழு ஆலோசனை கூட்டம் நடத்தியது. அப்போது வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த மாநில அரசுகளுக்கு வரி வருவாயில் 50 சதவீத பங்கு வழங்க வேண்டும் என்று மத்திய நிதிக்குழுவிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.
இதனை தொடர்ந்து, தொழில் மற்றும் வர்த்தகத் துறையினர், ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்து அவர்களிடம் இருந்து கருத்துக்களை பெற்றது. அதன்பின், நிதிக்குழு தலைவர் அர்விந்த் பனகாரியா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
16 மாநிலங்களின்
கருத்துக்கள்…
“இந்த ஆண்டின் பிப்ரவரி மாதம் 16-வது நிதிக்குழு தனது பணிகளை தொடங்கி, 12-வது மாநிலமாக தமிழகம் வந்துள்ளது. மேலும் 16 மாநிலங்களின் கருத்துக்களை கேட்க இன்னும் 7 மாதங்கள் பயணிக்க உள்ளோம். தமிழக முதல்வர் மாநிலத்தின் வளர்ச்சிக்கான தனது கருத்துகளை தெரிவித்துள்ளார். தமிழக அரசு தனது அறிக்கையை சிறப்பாக தயாரித்துள்ளது. செங்குத்து வரிப் பகிர்வை பொறுத்தவரை தற்போது நடைமுறையில் மாநிலத்துக்கு 41 சதவீதம், மத்திய அரசுக்கு 59 சதவீதம் என இருப்பதை, மாநிலத்துக்கு 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்பது தமிழக அரசின் கோரிக்கையாக உள்ளது. மற்ற மாநிலங்களும் இதே கோரிக்கையை வைக்கின்றன.நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8 சதவீதம் பங்களிப்பை தமிழகம் வழங்குவதால், அதே அளவு நிதிப்பகிர்வை தமிழக அரசு எதிர்பார்க்கிறது. உள்ளாட்சிகளுக்கான நிதி ஒதுக்கீட்டை 10 சதவீதமாக அதிகரிக்க கோரியுள்ளது. இவற்றை கருத்தில் கொண்டு நிதிக்குழு முடிவெடுக்கும்.
தனிநபர் வருவாய் வேறுபாட்டை பெயரளவுக்கு கருதக்கூடாது. அது அதிகமாக விலைவாசி உயர்வுடன் தொடர்புடையதாக உள்ளது என தமிழகம் தெரிவித்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு வரிப் பகிர்வுக்காக தனிநபர் வருமான வரம்பை 45-லிருந்து 35 சதவீதமாக குறைக்க பரிந்துரைத்துள்ளது. மற்ற 16 மாநிலங்களுக்கு சென்று வந்த பின் தமிழக அரசின் கோரிக்கைகள் குறித்து ஆலோசித்து முடிவு செய்வோம் ’’
இவ்வாறு அவர் கூறினார்.