அனுசா வெளியூர் பேருந்தில் பயணித்து கடலூர் புறநகர் பேருந்து நிலையத்தில் வந்து இறங்கும் போது நல்ல மழை பிடித்துக் கொண்டது.
இன்னும் ஏறக்குறைய ஐம்பது கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்றுதான் சித்தப்பா வீட்டை அடைய வேண்டும். நண்பன் தீபக்கின் ஊருக்குள் செல்வது அதைவிட கடினம்.
அமாவாசை இரவில் அந்த ஊர் முழுவதும் இருட்டு போர்வை விரித்திருந்தது.
ஊர் மக்கள் ஏழு மணிக்கெல்லாம் அனைத்து வேலைகளையும் முடித்துக் கொண்டு உறங்கப்போய் விடுவார்கள்.
இரவு ஒன்பது பத்து மணிக்கெல்லாம் ஊர் அடங்கிப்போய்விடும். அதிலும் மழைக்காலங்களில் மக்கள் வெளியே நடமாடுவது என்பதே அபூர்வம்.
இருட்டில் தனது கைக்கடிகாரத்தை பார்த்தாள். மணி பத்தாகிக் கொண்டிருந்தது. தனது சிறிய கைக்குடையை பெரிதாக்கி தலைக்கு மேல் பிடித்துக் கொண்டு சாலையில் நடந்தாள். மனித நடமாட்டம் அறவே அற்றுப் கோயிருந்தது.
தீபக்கை மனம் நாடி எட்டிப் பார்த்தது. தீபக் குறிஞ்சிப்பாடி கிராமத்தையும் அனுசா விருத்தாசலம் அருகில் உள்ள அனுமந்தபுரம் என்ற கிராமத்தையும் சேர்ந்தவர்கள்.
இருவரும் பள்ளியில் துவங்கி கல்லூரி படிப்பு வரை ஒரே கல்விக்கூடங்களில் படித்தவர்கள். பள்ளியில் படிக்கும்போதே இருவரும் நல்ல நண்பர்கள். அவள் பயணிக்கும் பேருந்தில்தான் தீபக்கும் பயணிப்பது வழக்கம்.
அவள் வருகின்ற நேரம்வரை காத்திருந்து அந்த பேருந்தில் பயணிப்பான். அரசு கல்லூரியில் இருவரும் பி.ஏ. பொருளாதாரம் ஒரே வகுப்பில் படித்தார்கள்.
அனுசாவுக்கு படிப்பு முடித்ததும் பெங்களூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ரிசப்சனிஸ்டாக வேலை கிடைத்தது. அதனால் மூன்று வருடத்திற்கு முன்பு பெங்களூருக்கு சென்று விட்டாள்.
தீபக் பாண்டிச்சேரியில் உள்ள பெரிய ஓட்டல் ஒன்றில் வேலை கிடைத்திருப்பதாக கடிதம் எழுதியிருந்தான்.
இன்னும் சில வருடங்களில் தங்கை திருமணம் முடிந்ததும் நாம் திருமணம் செய்து கொள்ளலாம். உன்னைத்தவிர வேறு எந்தப் பெண்ணையும் மனம் விரும்பவில்லை என மனதிலிருப்பதை வெளிப்படையாக எழுதியிருந்தான்.
அனுசாவுக்கு தந்தை இல்லை. தாய் பிரபாவதி மட்டுமே. இரண்டு தம்பிகள். இருவரின் படிப்பு செலவுகளையும் குடும்ப ஜீவனத்தையும் அக்காவான அனுவின் வருவாய் மற்றும் தந்தைக்கு சொந்தமான ஒரு வீட்டில் வரும் வாடகையையும் வைத்தே குடும்பம் நடந்தது.
தாயிடம் காதலை தெரிவித்து சம்மதம் கிடைத்ததும் திருமணம் செய்து கொள்வதாக அனுசா பதிலிட்டிருந்தாள்.
இதனிடையே வந்த கொரோனா காலகட்டம் வாழ்க்கையை புரட்டிப் போட்டது. ஊரடங்கு உத்தரவுக்கு இணையான உத்தரவுகள் அனைத்து மாநிலங்களிலும் நாடு முழுவதும் கொண்டு வரப்பட்டது.
அவரவர் இருக்கும் இடத்திலேயே தங்கிக் கொள்ள வேண்டிய கட்டாய நிலை உருவானது.
அனுசா பெங்களூரில் வேலை செய்த மருத்துவமனை விடுதி அறையிலேயே தோழிகளுடன் தங்கிக் கொண்டாள்.
தீபக் வேலை செய்த பாண்டிச்சேரி ஓட்டலில் தங்கியிருந்த பல வெளி நாட்டுப் பயணிகளுக்கு கொரோனா தொற்று இருப்பதாகக் கூறி சிகிச்சைக்கு அனுப்பப்பட்டிருந்தார்கள். ஊழியர்கள் சிலரும் மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்கள். சிகிச்சை பெற்றிருந்தவர்கள் நலமாக இருந்தார்கள்.
தற்காலிகமாக சிறிது நாட்கள் அந்த ஓட்டல் மூடப்பட்டதால் தீபக் ஊருக்கு வந்து பெற்றோருடன் தங்கி சிகிச்சை பெறுவதாக அனுசாவுக்கு தெரிவித்திருந்தான்.
அப்போது திடீரென்று பத்திரிகை செய்தி ஒன்றில் தீபக் இறந்து விட்டதாகவும் கொரோனா தொற்று காரணமாக அவன் இறந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.
இதுகுறித்து எவ்வளவோ முயன்றும் தீபக் இறந்தது குறித்து முழுமையான தகவலை அவளால் அறிய முடியவில்லை.
இதனிடையே தங்கி பணிபுரிந்து கொண்டிருந்த அவளது மருத்துவமனையில் விடுப்பு என்பதே கிடைக்காத நிலையில் நான்கு ஆண்டுகள் அசுர வேகத்தில் காணாமலும் போயிருந்தது.
இந்த நான்கு ஆண்டுகளில் எத்தனையோ சம்பவங்கள், எத்தனையோ நோயாளிகளை, பலதரப்பட்ட மனிதர்களை பெங்களூரில் காண நேர்ந்த போதிலும் தீபக்கின் நினைவுகளை அவளால் அப்புறப்படுத்த முடியவில்லை.
அதன் காரணமாகவே இப்போது அவசர விடுப்பில் ஊருக்கு வந்து சேர்ந்திருந்தாள்.
தீபக்கின் ஊருக்கு அருகில் செல்லும் தனியார் பேருந்து ஒன்றில் ஏறி கிராமத்திற்கு அருகினில் இறங்கிக் கொண்டாள்.
கிராமத்திலேயே பிறந்து வளர்ந்திருந்த அவள் மிகவும் ஆள் நடமாட்டமில்லாத போக்குவரத்து என்ற பேச்சுக்கே இடமில்லாத சிக்கலான ஊர்களுக்கு வரும்போது அனுசா எப்போதுமே கால்நடையாக நடப்பதையே பழகிக் கொண்டிருந்தாள்.
இப்போதும் அதுபோல்தான் வேகமாக நடந்தாள்.
இப்போது அவள் இலக்கை வைத்து செல்வது சித்தப்பா வீட்டிற்கு அல்ல. தீபக் ஊருக்கு சற்று அருகில் தோப்புக்காடு என்ற கிராமப்பாதைக்குள் நடந்து கொண்டிருந்தாள்.
இடிமின்னலோடு மழை பெய்து கொண்டிருந்தது. தனது சிறிய நவீன குடையை மட்டுமே நம்பி ஒற்றையடிப் பாதையில் விரைந்து நடந்து சென்றாள்.
அதோ… அவள் நினைவில் வைத்து நம்பி வந்த அந்த வீட்டில் விளக்கொளி தெரிந்தது.
கதவில் கைவைத்து `அங்கிள்` என்றாள். இரண்டாவது முறை அவள் அழைத்தபோது அந்தப் பெரியவர் எட்டிப் பார்த்தார்.
அவர் கண்களில் சற்று வியப்பு, ஆயினும் உடனே அடையாளம் கண்டுகொண்டு, `உள்ளே வாம்மா` என்றார்.
வீட்டின் முகப்பில் `ஜோதிடர் சத்தியசீலன்` என்ற பலகை காணப்பட்டது. அதனை பார்த்தவண்ணம் அவர் பின்னால் சென்றாள்.
“என்னம்மா எந்த தகவலும் இல்லாம திடீர் விஜயம்? இறந்தவங்க யாரோடவாவது தொடர்பு கொள்ளணுமா?` என்றார்.
அவர் தன்னை உடனே புரிந்து கொண்டதில் அனுசாவுக்குள் மகிழ்ச்சி குடிபுகுந்தது.
“ஆமாம் அங்கிள் உங்களுக்கு ஏற்கெனவே தெரியுமே.. நானும் என்னோட படிச்ச ஊர்க்கார பையன் தீபக்கும் நேசிச்சதை… அப்புறம் அவன் திடீர்னு கொரோனா பீரியடில் இறந்து போனதை..“
“தீபக்தான் கொரோனாவுல இறந்துட்டானேம்மா“
“அதுல தான் எனக்கு நம்பிக்கை இல்ல அங்கிள். தீபக் எப்படி இறந்தான்கிறதை நான் தெரிஞ்சிக்க விரும்பறேன்..“
“அதுக்காகதான் இந்த கொட்டும் மழையில இரவு நேரத்துல என்னைக் காண ஓடி வந்தியா அனு… நீ கவலைப்படாதே அவனை நான் இப்ப வரவழைக்கிறேன்.. பின்னால் உள்ள கிணத்தடிகிட்ட இருக்கிற அந்த இருட்டறைக்குள்ள போறேன் நீயும் என் பின்னால வா“
அவர் அழைக்க, தீபக்கை சந்திக்கப்போகும் அலாதியான ஆனந்தத்தில் அவர் பின்னால் சென்றாள்.
அவர் சில அமானுசிய பொருட்கள் உள்ள தரையில் பாய் விரிப்பில் அமர்ந்துகொள்ள, அவளும் அவர் கூறிய இடத்தில் அருகில் அமர்ந்து கொண்டாள்.
அவரது வழக்கமான சில அமானுசிய செயல்கள், அமானுசிய அழைப்புகளுக்குப்பின் சில நிமிடங்களில் அந்த அறைக்குள் மட்டும் புதுவகையான ஒரு காற்று வீசியது.
மெல்லிய காற்றலைகளில் தீபக் குரல் மிதந்து வந்தது.
“நான் தீபக் வந்திருக்கேன்“
அவனுக்கு சுருக்கமாக பதில் தந்தார் மீடியம் எனப்படும் ஜோதிடர் சத்தியசீலன்.
“தம்பி நீ நேசிச்ச பெண் அனுசா உன் இறப்பைப் பற்றி தெரிஞ்சிக்க விரும்பறா.. அதற்காக இந்த அமானுசிய நேரத்தில் என்னை நாடி வந்திருக்கா.. உன் பதிலை அவளுக்கு தெரிவிப்பாயா தம்பி…? அதாவது உன் இறப்பு நேர்ந்தது எப்படி என்று?` மாந்திரீக ஜோதிடர் சத்தியசீலன் கேட்டதும் சில விநாடிகள் மௌனம்.
பிறகு மெல்லிய குரலொளி வந்தது. அங்கிருந்த ஒரு அமானுசிய மரப்பலகையின் மீது சாக்பீசில் எழுத்தும் வந்தது.
“என்னோட இறப்பு இயற்கையோ, நோயிலோ நடந்தது இல்ல… அனுசா போல என்னை இன்னொரு பெண்ணும் நேசிச்சா.. அவ என்னோட சில காலம் வேலை பார்த்த.. காவ்யா… அந்தப் பெண் வீட்டில் கடுமையான எதிர்ப்பு எழுந்ததால் தூக்கிட்டு இறந்துட்டா… நானும் மேல வாழ விரும்பாம ஊரடங்கிப் போயிருந்த கொரோனா காலகட்டத்துல வயல்ல இருந்த விஷத்தை சாப்பிட்டு இறந்துட்டேன்… என் அம்மா வீட்டார் யாரும் இதை வெளியே கூற விரும்பாம கொரோனா நோயில் நான் இறந்துட்டதா… ஊரில் சொல்லிட்டாங்க.. அது உண்மையில்ல.. என் இறப்பு நானே தேடிகிட்டதுதான்.. இதனால் நீங்களும் அனுவும் என்னை மன்னிக்கணும்… அனுசா வேறொரு வாழ்க்கையை தேடிக்கணும்கிறது என் விருப்பம்..“ அவன் அமானுசிய ஒலியில் பேசிய வார்த்தைகள் அங்கிலிருந்த கரும்பலகையில் சாக்பீசினாலும் எழுதப்பட்டிருக்க அனுசா வியர்த்திருந்தாள்.
அந்த அமானுசிய குரலும் காற்றும் விலகிப் போயிருந்தது.
ஆனால் அனு இப்போதும் வடியாத துக்கத்திலிருந்தாள்.
“உன் மனசை தேற்றிக்கம்மா… நீ என்னை இந்த நடு நிசியில் நம்பியும் நாடியும் வந்ததால்தான் இந்த உண்மைகளை உன்னால தெரிஞ்சிக்க முடிஞ்சது.. நடுநிசியில் மட்டும்தான் ஆவிகளை வரவழைக்க முடியும். அவங்களோட பேச முடியும்மா.. உனக்கும் இதுவெல்லாம் தெரியும்.. என்னைப்போல உள்ள எல்லா மீடியம் மனிதர்கள், துறவிகள், சாமியார்கள், அமானுசிய தகவல் சொல்றவங்க எல்லாருமே தவறு செய்பவர்கள்னு சமுதாயத்துல ஒரு பரவலான வதந்தி பரவிக்கிடக்கிறது… அதெல்லாம் முழுமையான உண்மை இல்லைம்மா.. நீயும் இனி உன்னை நேசிச்ச, தற்கொலை செய்துகிட்ட தீபக்கை மறந்துட்டு ஒரு புதிய வாழ்க்கையை தேடிக்கணும் “ அவர் பேசப் பேச கனத்த இதயத்தோடு அவரின் காலில் விழுந்து வணங்கிவிட்டு கண்ணீர்பொங்க இருட்டில் புறப்பட்டாள் அனுஷா.