சினிமா செய்திகள்

நெஞ்சில் நிறைகிறார் விஜய்சேதுபதி; விழிகளில் உறைகிறார் குரு. சோமசுந்தரம்!

இந்துவுக்கு தோள் கொடுக்கும் இஸ்லாம் கதாபாத்திரம்: சபாஷ், சீனு ராமசாமி!

பிரபலங்களை தன் முதுகில் ஏற்றிக்கொண்டு, தன் சொந்த பலத்தில் அவர்களை இன்னும் இன்னும் ஊருக்கும் உலகுக்கும் அடையாளம் காட்டக்கூடிய இயக்குனர்களில் விரல் விட்டு எண்ணக்கூடியவர்களில் ஒருவர் சீனு ராமசாமி. (இப்பட்டியலில் சமீபத்திய வரவு விக்ரம் 2 லோகேஷ் கனகராஜ்)

மாமனிதன் படத்தை பார்த்துவிட்டு வெளியே வெளியே வருகிறபோது, மனத்திரையில் நிழலாடியது என்னவோ இவர்களின்( பாலா- – வெற்றிமாறன் – – சீனு ராமசாமி) குருகுலத்து ஆசான் பாலுமகேந்திரா இல்லையே வாழ்த்துவதற்கு என்று சொல்ல முடியாத ஆதங்கம்!

பாலுமகேந்திரா இருந்திருந்தால் உச்சி முகந்து சிலாகித்து சிலாகித்துப் பேசி சீனு ராமசாமிக்கு மலர்க் கிரீடம் சூட்டி மகிழ்ந்து இருப்பார்.

பூவோடு சேர்ந்த நார் மாதிரி மாமனிதன் முகத்தை வெள்ளித்திரையில் பதிய வைத்திருக்கும் ஆர்கே சுரேஷையும் (தமிழக வினியோகஸ்தர்) அல்லவா கட்டிப்பிடித்து கவுரவித்து இருப்பார்?!

உணர்வுகள் எரிமலையாய் வெடித்துச் சிதறும் உணர்ச்சிச் சித்திரம்- மனிதநேய படப்பிடிப்பு!

வருகிற படங்களில் எல்லாம் தீவிரவாதிகளாக -சமூக விரோத சக்திகளாக எங்களைப் படம் பிடிக்கிறார்களே … என்று கடந்து வந்த பாதையில் தங்களின் உள்ளக் குமுறலை கொட்டித் தீர்த்து வந்திருக்கும் இஸ்லாமிய சகோதரர்களே – நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்?!

உங்கள் சமூகத்தின் மீது அழுத்தமாக பதியப்பட்டிருக்கும் அந்த ரணத்துக்கு மருந்து தடவி மயிலிறகால் வருடுவதை போல வருடிக்கொடுத்து இருக்கும் அந்த மாண்பைப் பாருங்களேன்… சீனு ராமசாமியின் ‘மாமனிதன்’–ல். இதைவிட இந்து இஸ்லாம் சகோதர பாசத்தை எப்படிக் காட்ட முடியும்?

‘‘உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே –

இடுக்கண் களைவதாம் நட்பு’’

– வள்ளுவரின் பொய்யாமொழிக்கு இலக்கணமாக-

இந்து ராதாகிருஷ்ணன் விஜய் சேதுபதி, இஸ்லாமிய சகோதரன் ‘பாய்’ குரு சோமசுந்தரம் கதாபாத்திரத்தை உருவாக்கி- ஓருடல் ஈருயிர் ஆக்கியிருப்பது சகோதரத்துவத்தை இதைவிட எப்படிச் சொல்வது என்று என் மனசாட்சியே உரக்கப் பேசுகிறது.

குடும்பத் தலைவன் தங்களை அனாதையாக்கி விட்டுப் போய் விட்டானே என்பதை நினைத்து நினைத்து இடி விழுந்தது போல இடிந்து உட்கார்ந்து விடாமல்…

தனி ஒரு மனுஷியாக குடும்ப பாரத்தை தோளில் சுமக்கும் காயத்திரி கதாபாத்திரம் மூலம் தன்னம்பிக்கை – -துணிச்சல்- – தெளிவு -இருந்தால்…

பழிபோடும் உலகை பெருமையாய் கொண்டாட வைக்க முடியும் என்பதை பறைசாற்றி இருக்கிறாரே… சீனு ராமசாமி, அந்த காயத்ரி கதாபாத்திரத்தை தாய்க்குலம் ரசிக்காமல் இருந்தால் எப்படி?

குழந்தை – குட்டி – பொண்டாட்டி – பாசம், நயவஞ்சகத்தால் தலைமறைவான விபரீதம், நண்பனின் உறவால் நல்லதே நடக்கும் என்ற மன சாந்தி- மூன்றிலும் தன்னை கரைத்துக் கொண்டு… ராதாகிருஷ்ணன் விஜய் சேதுபதி நெஞ்சில் நிற்கிறார்.

உணர்வுகளில் உச்சம் தொட்டு இருக்கும் இருவர்:

1. குரு சோமசுந்தரம்: மீண்டும் ஒரு முறை தேசிய விருது இவரது தோள்களில் விழலாம்.

2. குடும்ப பாரத்தை தோளில் சுமந்து மெழுகாய் உருகும் – உருக்கும் காயத்ரி! இவருக்கும் தேசிய விருது தோல்களில் விழலாம்!

எம். சுகுமார் – ஒளிப்பதிவு. கேரளாவும் காசியும் இன்னமும் கண்களில்!

இசை: முதல்முறையாக அப்பா இளையராஜாவும், மகன் யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து. பாடல்கள் பின்னணியில் ஒலித்தாலும் இசை பிழிந்தெடுக்கும் சோகம். பின்னணி இசை, ஒவ்வொரு பிரேமிலும் ராஜா டச் ஜோரா!

எ ஃபிலிம் பை என்று பெயரைப் போடுவதற்கு ஒரு அரு கதை (வலுவான கதையும் தான்) வேண்டும். அது இந்நாள்வரை சீனு ராமசாமிக்கு கைவந்த கலை!

* பெத்த அம்மாவை அனாதையா சாக வெச்சுட்டியே பாவி’… என்று முதுகில் குத்திய நயவஞ்சகனிடம், காசியில் சாமியார் வரிசையில் உட்கார்ந்தவனுக்கும் தன் கையால் அன்னம் பரிமாறிய ராதாகிருஷ்ணன் எழுப்பிடும் அந்த ஒரே கேள்வியில் சீனு ராமசாமியோடு விஜய்சேதுபதியும் உயர்ந்து நிற்கிறார்

* காசி கங்கை நதியில் காயத்ரி மூழ்கி எழுந்திருக்கும்போது “அம்மா கங்கா தேவி என் புருஷனை கண்ணில் காட்டுமா” என்று நெஞ்சுருகப் பிரார்த்திக்கும் நேரம்,- புற்றீசல் சாமியார்கள் கூட்டத்திற்கு நடுவில் ஒரு ஓரமாய் தரையில் துண்டு விரித்து தொழுகை நடத்தும் குரு சோமசுந்தரம்… பொசுக்கென்று விழியோரம் நீர்த் திவலைகள் (நான் லேசு மனசுக்காரன்)

சிறந்த கதை சொல்லி- – தேர்ந்த எழுத்தாளர் – -நிறைகுடம் படைப்பாளி

சீனு ராமசாமியின்

‘மாமனிதன்’: நெஞ்சில் நிறைகிறார்

விஜய் சேதுபதி!

விழிகளில் உறைகிறார்

குரு சோமசுந்தரம்!

வீ. ராம்ஜீ

Leave a Reply

Your email address will not be published.