சிறுகதை

நெகிழ்ச்சி- ராஜா செல்லமுத்து

ஞாயிற்றுக்கிழமை என்பதால் அன்று அலுவலகம் விடுமுறை. காலையிலிருந்து மாலை வரை வீட்டிலேயே முடங்கிக் கிடந்த ஜெயசீலன் காலார நடந்து வரலாம் என்று அருகில் இருக்கும் பூங்காவிற்குச் சென்றான்.

அங்கே குழந்தைகள் பெரியவர்கள் என்று நடந்து கொண்டும் விளையாடிக் கொண்டும் இருந்தார்கள்.

ஜெயசீலன் கைகளை வீசி வீசி நடந்து கொண்டிருந்தான். அவன் நடக்கும் பாதையில் ஒரு பூனை ஈனக் குரலில் மியாவ்… மியாவ்…. என்று கத்திக் கொண்டிருந்தது.

எதற்கு இந்த பூனை கத்துகிறது? என்று நினைத்தவன், அந்தப் பூனையை கையை காட்டி வா என்று அழைக்க

அந்தப் பூனை என்ன நினைத்ததோ தெரியவில்லை. கிடுகிடுவென்று அவனிடம் ஓடி வந்தது. அதைப் பார்த்த அருகில் நடந்து கொண்டிருந்தவர்கள் கொஞ்சம் ஆச்சரியம் கலந்து பேசினார்கள்.

என்ன இது ? அறிமுகமே இல்லாத ஆளுகிட்ட இந்தப் பூனை இப்படி ஓடுது என்று கேட்க

அந்தப் பூனை ஜெயசீலன் காலைச் சுற்றியது. நடைப்பயிற்சியை கொஞ்சம் தளர்த்திய ஜெயசீலன் அந்தப் பூனையை லாவகமாக தடவிக் கொடுத்தான்.

அது தன் நன்றி உணர்ச்சியைக் காட்டுவதற்காக தன் மேவாயை மேலே தூக்கி மியாவ்…. மியாவ். என்று சத்தம் போட்டுக் கொண்டிருந்தது .

அங்கே நடைப்பயிற்சி செய்து கொண்டு இருந்தவர்களுக்கு அந்த நிகழ்வு கொஞ்சம் ஆச்சரியம் கலந்த நிகழ்வாக இருந்தது .

சிறிது நேரம் நடந்த ஜெயசீலன் ஒரு இடத்தில் அமர்ந்தான் .

என்ன நினைத்ததோ தெரியவில்லை அந்தப் பூனை மறுபடியும் ஜெயசீலன் அருகே வந்தது. வந்த பூனை குதித்து அவன் மடியில் ஏறி அமர்ந்தது.

அவன் லாவகமாக அதன் தலையை சொரிந்து கொடுத்தான். அந்தப் பூனை மியாவ்…. மியாவ்… என்று தன் நன்றியுணர்வை காட்டிக் கொண்டே இருந்தது.

அப்போது ஒரு தாயும் சின்னக் குழந்தையும் ஜெயசீலன் மடியிலிருந்த பூனையைப் பார்த்துக்கொண்டே சென்றார்கள்.

அந்தப் பிஞ்சுக் குழந்தை என்ன நினைத்ததோ தெரியவில்லை.

அங்கிள் அந்தப் பூனைக்கு பசிக்குது; அதான் கத்துது என்று சொன்னபோது

ஆமா, சாப்பிட ஏதாவது வைத்திருக்கிறீர்களா? என்று ஜெயசீலன் கேட்டான் .

இல்ல அதுக்கு பால் வாங்கப் போய் இருக்காங்க என்று அந்த குழந்தையின் தாய் சொன்னாள். சொல்லிவிட்டு அவர்கள் அந்த நடைபாதையில் நடந்து கொண்டிருந்தார்கள்.

சிறிது நேரத்திற்கெல்லாம் அந்தக் குழந்தையின் தகப்பன் ஒரு பிளாஸ்டிக் பையில் கட்டிய பால் , 2 பேப்பர் தம்ளர் சகிதம் வந்தார்.

அந்த பிளாஸ்டிக் பையில் இருந்த பாலை ஊற்றி ஆற்றிக் கொண்டிருந்த போது ஜெயசீலனுக்கு என்னவோ போல் ஆனது .

அந்தக் குழந்தை ஜெயசீலன் மடியில் இருக்கும் பூனையைப் பார்த்துக் கொண்டே இருந்தது.

இந்த பூனைக்கு தான் பால் வாங்கி வந்திருக்கிறார்கள் என்று நினைத்த ஜெயசீலன் அதைத் தூக்கி அவர்களிடத்தில் கொடுத்தான் .

அந்தப் பூனை அவர்களிடம் மியாவ்… மியாவ்…. என்று கத்தியது.

அதற்குள் அந்தத் தகப்பன் கொண்டு வாங்கி வந்த அந்தப் பாலை அந்தப் பேப்பர் தம்ளரில் சர்சர்ரென ஆற்றி அந்த பூனைக்கு கொடுத்தான்.

லேசாக சூடாக இருந்திருக்கும் போல பட்டென்று தன் வாயை எடுத்தது .அந்த தகப்பன் என்ன நினைத்தாரோ தெரியவில்லை மறுபடியும் அந்தப் பாலை எடுத்து மீண்டும் இரண்டு மூன்று முறை ஆற்றினார் . கொஞ்சம் சூடு தணியவும் அந்த பூனைக்கு மறுபடியும் அந்தப் பாலை வைத்தார்

லபக் … லபக் …. என்று தன் நாவால் தொட்டுத் தொட்டு சாப்பிட்டது.

இதைப்பார்த்த ஜெயசீலனுக்கு கண்ணீரே வந்துவிட்டது.

ஜாதி, மதம், இனம், மொழி என்று இந்த நாடு மக்கள் எல்லாம் பிளவு பட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இப்படி ஒரு மனிதரா? ஒரு குழந்தை தன் தந்தையிடம் அந்த பூனைக்குப் பசிக்கிறது போய் வாங்கி பால் வாங்கி வாருங்கள் என்று கட்டளையிட்டதும் அந்தத் தகப்பன் பால் வாங்கிக் கொண்டு ஒரு உயிரினத்திற்கு உணவு கொடுக்கிறானே? இதுவல்லவோ உயர்ந்த நிலை . இதுதான் மனிதப் பண்பு என்று யோசித்த ஜெயசீலன் அந்தப் பூங்காவை விட்டு வெளியேறினான்.

ஒரு சிறு குழந்தையைப் போல அந்தப் பூனையைப் பார்த்துக்கொண்டனர் தம்பதியர். பாலை ஆற்றி ஆற்றிக் கொடுத்தார்கள்.

அந்தப் பூனை சாப்பிட்டுக் கொண்டிருந்ததை இரண்டு மூன்று தடவை அதை திரும்பிப் பார்த்துக்கொண்டே சென்றான் ஜெயசீலன்.

கடைசியாக அந்த பூங்கா வாசலில் நின்று ஒரு முறை தீர்க்கமாக அந்தப் பூனையைப் பார்த்து விட்டு வெளியேறினான்.

அவன் மனது முழுதும் நெகிழ்ச்சியின் மகிழ்ச்சி நிறைந்து இருந்தது.

Leave a Reply

Your email address will not be published.