சிறுகதை

நூதன மோசடி – ராஜா செல்லமுத்து

உக்கிரபாண்டி ஒரு நல்ல ரசனைக்காரன். விதவிதமான பொருட்களை சேர்த்து வைப்பதில் அவனுக்கு அலாதி விருப்பம்.

அவன் மனைவி வைதேகிக்கும் இதே பொருத்தம் தான் . அதனால் தான் கணவன் மனைவி இருவரும் எங்கு சென்றாலும் ஏதாவது வித்தியாசமான பொருளை வாங்கி வந்து வீட்டில் குவித்து வைத்து விடுவார்கள் .

அதைப் பார்ப்பவர்கள் எல்லாம் இவர்களின் கலா ரசனையை கொண்டாடுவார்கள்.

ஒரு நிறுவனத்தில் கை நிறைய சம்பளம் வாங்கும் ஊழியர் தான் என்றாலும் சிக்கனம் அவர் கையில் சிக்கவே இல்லை.

வைதேகி படித்து முடித்து கை நிறைய சம்பளம் வாங்கும் வேலையில் தான் இருக்கிறாள். இரண்டு குழந்தைகள், வீடு, கார் தனிக் குடித்தனம் என்று யாருக்கும் தொந்தரவு செய்யாமலும் அதே சமயம் நடுத்தர வர்க்கத்திற்கு மேலே உள்ள வாழ்க்கையை தான் நடத்திக் கொண்டிருந்தார்கள்.

அதனால் அவர்கள் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பொருளையும் விலை கொடுத்து வாங்கியதில் வியப்பில்லை என்று பேசிக்கொள்வார்கள்.

இவர்கள் இருவரும் தாராளமாக ஏதாவது ஒரு பொருளை வாங்கி குவிப்பார்கள் என்பது அவர்கள் நண்பர்கள் வட்டாரத்திற்கு பரிச்சயம் .

அதனால் நேரில் கடையில் போய் வாங்கும் பொருட்களை விட சில சமயம் ஆன்லைனில் கூட பொருட்கள் வாங்குவார்கள்.

கேட்டால் நேரடியாக வாங்கும் பொருட்களை விட ஆன்லைனில் வாங்கும் பொருட்களில் விலை குறைவாக இருக்கிறது என்று சொல்லுவார்கள்.

அந்த வகையில் திடீரென்று ஒருவன் உக்கிரபாண்டி வாசலில் வந்து நின்றான்.

அவன் யார் என்று தெரியாத வைதேகி

என்ன வேண்டும்? என்று கேட்டாள்.

நீங்க உக்கிரபாண்டி சாரோட மனைவி வைதேகி தானே? என்று வந்தவன் எதிர் கேள்வி கேட்டான்.

முதுகுக்கு பின்னால் பெரிய சுமை போல ஒரு பையை சுமந்து கொண்டிருந்தான். சுமந்து கொண்டிருந்த பையை இறக்கி லாபகமாக ஜிப்பை திறந்து அதிலிருந்து விற்பனைக்கான ஒரு சீட்டை எடுத்து

நீங்க ஆர்டர் பண்ணி இருக்கிற ஹாட் பாக்ஸ் ஒன்று வந்திருக்கு என்று சொன்னான் வந்த விற்பனை பிரதிநிதி.

வைதேகிக்கு விளங்கவில்லை

என்ன இது? நாங்க ஏதும் ஹாட் பாக்ஸ் ஆர்டர் பண்ணலையே.? என்று சொன்னவளை முடிக்க விடாமல் பேசினான் ஆர்டர் கொண்டு வந்த விற்பனைப் பிரதிநிதி.

இல்லங்க உக்கிரபாண்டி வைதேகி அப்படின்னு போட்டு இருக்கு; உங்க பேர்ல தான் ஆடர் வந்திருக்கு என்று கம்ப்யூட்டரில் டைப் செய்த பில்லை காண்பித்த போது வைதேகி குழம்பிப் போயிருந்தாலும் இது அவளுக்கு தலைகால் புரியவில்லை.

அலுவலகம் சென்ற கணவனிடமும் இது பற்றி போன் செய்து கேட்டாள்.

எங்க நீங்க ஏதாவது ஹாட் பாக்ஸ் ஆன்லைன்ல ஆர்டர் பண்ணீங்களா? என்றாள்

இல்லையே. அப்படியெல்லாம் நான் ஆர்டர் பண்ணல என்று சொன்னார் உக்கிரபாண்டி

ஏதோ தவறு நடந்திருக்கிறது என்று நினைத்த வைதேகி அந்த விற்பனை பிரதிநிதியிடம்

சாரிங்க ஏதோ தவறு நடந்திருக்கு; நாங்க ஆர்டர் பண்ணல எங்களுக்கு இது வேண்டாம் என்று சொன்னாள் வைதேகி.

நீங்க எல்லா சாப்பிங் மால்லையும் நிறைய பர்சேஸ் பண்ணி இருக்கீங்க .ஆனா ஏதோ ஒரு ஆர்டர் கொடுத்திருப்பீங்க மறந்துட்டீங்க மேடம்

என்று கொஞ்சம் கீழே இறங்கி வந்து பேசினான் அந்த விற்பனைப் பிரதிநிதி.

நீங்க நிறைய கடைகளில் பொருட்களை வாங்கி இருப்பீங்க. அங்கு இருக்க கடைக்கு உங்க நம்பர் கொடுத்து இருக்கலாம் ; ஏதோ தவறு நடந்து போச்சு சரி. ஒரு நம்பர் அனுப்புறேன் ஓடிபி நம்பர் வரும் சொல்லுங்க . நான் இந்த ஆர்டரை கேன்சல் பண்றேன் என்று சொன்னதும் அதை உண்மை என்று நம்பிய வைதேகி தன் செல்போனுக்கு வந்த ஓடிபி எண்ணை சொன்னாள்.

சரி ஓகே மேடம். நான் இந்த ஆர்டர் பொருளை உங்களுக்கு கொடுக்கல. நான் கிளம்புறேன் என்று சொன்னவன், அந்த ஓடிபி என்னை ஏதோ மும்முரமாக டைப் செய்து விட்டு அந்த இடத்தை விட்டு கிளம்பினான்.

என்ன ஆர்டர் பண்ணனும் ? எதுக்காக ஆர்டர் பண்ணேன்னு தெரியலையே என்று குழம்பி வீட்டுக்குள் நுழைந்தாள்.

திடீரென அவள் செல்போனுக்கு ஒரு எஸ்எம்எஸ் வந்தது.

அதைப் பார்த்தவளுக்கு தூக்கி வாரி போட்டது.

அய்யய்யோ என்று கத்தினாள்

என்ன ? என்று அருகில் இருக்கும் வீட்டுக்காரர்கள் வந்து கேட்டபோது

என் பேங்கில் இருந்து அஞ்சு லட்ச ரூபா போச்சே ?

என்று அழுதாள்.

எப்படி என்னன்னு தெரியல இப்பதான். ஒருத்தன் நான் பொருள் ஆர்டர் பண்ணதா பொய் சொல்லி ஓடிபி நம்பர் கேட்டான்; ஒருவேளை அவன் ஏதும் பண்ணி இருப்பானோ?

என்று வைதேகி சொல்லி முடிப்பதற்குள் அந்த விற்பனை பிரதிநிதி அந்த இடத்தை விட்டு பறந்து போயிருந்தான்.

கணவனுக்கும் தகவல் சொல்லப்பட்டது. அலறி அடித்துக் கொண்டு அலுவலகத்தில் இருந்து வீடு வந்தான் கணவன்.

மனைவியின் செல்போனை எடுத்து பார்த்த போது தற்போது விற்பனை பிரதிநிதி என்ற வேடத்தில் வந்த ஒரு திருடன் தான் தன் மனைவியின் என்னைக் கேட்டு ஓடிபி நம்பர் சொல்லச் சொல்லி நூதன முறையில் வங்கியில் இருக்கும் பணத்தை கொள்ளை அடித்திருக்கிறார் என்பது தெரிந்தது.

எந்த எண்ணில் இருந்து எப்படி பணத்தை அடித்தார்கள் என்று ஆராய்வதற்குள் மொத்த கதையும் முடித்து இருந்தார்கள் அந்த நூதன மோசடிக்காரர்கள்.

‘ பணம் போனதென்று ஒப்பாரி வைத்து அழுது கொண்டு இருந்தாள் வைதேகி.

பணத்தோடு போய்விட்டது ; வேறு ஏதும் நடக்கவில்லை . நல்லது என்று நினைத்தார் உக்கிரபாண்டி.

நூதன முறையில் பணத்தை அடித்த அந்த விற்பனையாளன் வைதேகியை ஏமாற்றிய ஊருக்குள் இரண்டு மாதங்கள் காலடித்து எடுத்து வைக்கவில்லை .

மூன்றாவது மாதத்தில் மீண்டும் தன்னுடைய ஆட்டத்தை ஆரம்பித்தான்.

அது ஒரு நடுத்தர வர்க்கத்து குடும்பங்கள் வாழும் வாளாகம். அதில் ஒரு வீட்டு ஹாலின் காலிங்பெல்லை அழுத்தி முதுகில் கனக்கும் பெரிய பையை சுமந்து கொண்டு அந்த வீட்டிலிருந்து வந்த பெண்ணிடம்

நீங்க சகுந்தலா தானே? என்றான்

ஆமா என்று பதில் சொன்னாள் சகுந்தலா .

நீங்க ஆன்லைன்ல கம்ப்யூட்டர் ஆர்டர் பண்ணி இருந்தீங்களா? என்று கேட்டான் விற்பனை பிரதிநிதி.

கம்ப்யூட்டரா நானா? என்றார் சகுந்தலா

இல்ல மேடம். ஆர்டர் பண்ணி இருக்குற லிஸ்ட் உங்க பேரு உங்க வீட்டுக்காரர் பேரு அட்ரஸ் எல்லாம் அந்த லிஸ்டிலே வருதே. இது நீங்க ஆர்டர் பண்ணது தானே என்று கேள்வி கேட்டான் சகுந்தலாவிடம் :

அவள் திருதிருவன விழித்தாள்.

சகுந்தலா பேசுவதை பார்த்துக் கொண்டிருந்த கணவன் வீட்டிற்குள் இருந்து வெளியே வந்தான்.

என்ன ஆர்டர்? என்று கேட்டபடியே வந்த சகுந்தலாவின் கணவனிடம்

சார் நீங்க ஒரு கம்ப்யூட்டர் ஆர்டர் பண்ணி இருந்திங்கலாமே. அதற்கான ஆர்டர் கொண்டு வந்து இருக்கேன்

என்று சொன்னான் விற்பனை பிரதிநிதி

ஒ_கம்ப்யூட்டரா இந்தா இப்ப வாரேன் என்று சொன்னவர் வீட்டுக்குள் போனார்.

அவர் வந்தால் என்ன ஆகுமோ என்று கொண்டிருந்தான் விற்பனைப் பிரதிநிதி.

இப்ப ஒரு நம்பர் அனுப்புறேன் ஓடிபி வரும் சொல்லுங்க என்று சகுந்தலாவுடன் கேட்டுக் கொண்டிருந்தான்

அந்த விற்பனைப் பிரதிநிதி.

அப்போது சைபர் கிரைம் போலீசுக்கு போன் செய்தார் பெண்ணின் கணவன்.

அவ்வளவுதான் சைபர் கிரைம் இணையதள வலப்பின்னலுக்குள் வசமாகச்சிக்கிக் கொண்டான் அந்த மோசடி விற்பனைப் பிரதிநிதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *