சிறுகதை

நூதனம் – ராஜா செல்லமுத்து

ஆண்கள் விடுதி மாணவர்கள் ஒவ்வொரு ஆறு மாதமும் ஒருவரை தேர்ந்தெடுப்பார்கள். அவர்களுக்குள் நடக்கும் இந்த ஒப்பந்த வாழ்க்கை – ரொம்ப பிடித்திருந்தது. அது ஒரு பரஸ்பரமான வாழ்க்கை அன்பு திளைக்கும் அற்புதமான வாழ்க்கை விடுதி வாழ்க்கை என்பது அலாதி இன்பத்தை அள்ளித் தரும். அப்படித்தான் அந்த விடுதி மாணவர்கள் ஒவ்வொரு ஆறு மாதமும் ஒருவரை தேர்ந்தெடுத்து, ஆறு மாதத்திற்கு ஒருமுறை ஒருவர் பணம் இடுவார்.

அந்தப் பணத்தை வைத்துக் கொண்டு அந்த மாணவர்கள் தங்களுக்கு தேவையான விஷயங்களை செய்து கொள்வார்கள். இது முதலீடு இல்லாத தொழில் என்பதால் மாணவர்களும் அதை பெரிதாக பொருட்படுத்துவதில்லை.

ரோஷன் இந்த மாதம் நீதான். இன்னொரு ஆறு மாதம் கழித்து வேறொருத்தன். இன்னிக்கி நம்முடைய செலவுக்கு பணம் கொடுத்த நாகராஜன் நாம கை நீட்டி வரவேற்போம். அவன் கொடுத்த இந்தப் பணத்தால தான் இன்னைக்கு நாம இந்த விருந்து சாப்பிடுகிறோம்.

ஆறு மாதத்துக்குப் பின்னாடி நாம இணைந்திருக்கிறோம். அடுத்து ஆறு மாதத்திற்கு ரோஷன் நீங்கதான் நண்பர்களுடன் துணை நிக்கிறீங்க.

இதுக்கு முன்ன அத்தனை நண்பர்களும் ஒவ்வொரு ஆறு மாதம் மூன்று மாதத்துக்கு ஒரு தடவை நல்ல வாழ்க்கைக்கு உதவி இருக்கீங்க. அதனால மனக் கஷ்டமும் இல்லாம இந்த வேலையை நீங்க பார்த்தீங்கன்னா நாம ஜாலியா இருக்கலாம். அதுவும் பணம் போட்டு பணம் எடுக்கிற தொழில் இல்ல இது.

கடவுள் நமக்கு கொடுத்தத நாம அப்படியே கடைபிடிக்கிறோம். அது இயற்கையே நமக்கு அள்ளித் தருவது. அதனால நாம இந்த விஷயத்துல ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக் கொடுத்து தான் வாழனும். அதனால இந்த பணத்தில் எல்லாரும் ஜாலியா இருக்கலாம் வாங்க என்று ஒரு பிரதான ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று வகைவகையான கறி, மீன் வகைகளை சாப்பிட்டனர்.

அவர்களோடு சேர்ந்து ரோஷனும் சாப்பிட்டான். அடுத்த ஆறு மாதத்திற்கு அவன் தான் இவர்கள் சாப்பிடும் அத்தனைக்கும் அச்சாரம் என்பது அவனுக்கு தெரிந்தது.

நல்ல சாப்பிடு ரோஷன் அடுத்து நீதான் என்று நண்பர்கள் சொல்ல எல்லோரும் சிரித்தார்கள். ஆனால் ஒவ்வொரு மாணவர்களும் ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு ஒரு முறை ஒரு வருடத்திற்கு ஒரு முறை இதே பணியை செய்து தான் பணம் கொடுத்தவர்கள் என்பது அவர்களுக்குத் தெரியும்.

அதனால் அவர்கள் சிரித்ததை யாரும் கேலி என்று கிண்டல் என்று ஒருவருக்கொருவர் நினைத்ததில்லை.

எல்லோரும் மொத்தமாக உண்டு களித்தார்கள்.

அப்போது அந்த ஹோட்டலுக்கு வந்த நபர் என்னப்பா இந்த மாசம் நல்லா சாப்பிடுறீங்க. அடுத்த மாசம் யாரு? என்று கேட்டபோது ரோசனைக் காண்பித்தார்கள் நண்பர்கள்.

ஓ இந்த பையனா? இந்த பையனுக்கு முடி நல்லா கரு கருன்னு இருக்கு.

3 மாதத்தில் நல்ல வளந்திரும் போல. வளந்ததுமே சொல்லி அனுப்புங்க. அழகா மொட்டை, எடுத்து முடிய வெளிநாட்டுக்கு அனுப்பிடலாம். இவருடைய முடி நல்ல விலைக்குப் போகும்னு நினைக்கிறேன்.

பரவாயில்லப்பா எந்த முதலீடும் செய்யாம சம்பாதிக்கக்கூடிய முடிய வச்சிருக்கீங்க. இது ரொம்ப புத்திசாலித்தனமான விஷயம் என்று அந்த முடி வாங்குபவர் சொல்ல ….

ரோஷன் தன் முடியை தடவிக் கொண்டான்.

அது வளர்வதற்கு இன்னும் ஆறு மாதம் ஆகும் என்று

அவன் மனது சொன்னது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *