திரைப்படத் துறை என்பது ஒரு விசித்திரமான உலகம் . இருப்பதை பறப்பதாகவும் பறப்பதை இருப்பதாகவும் காட்டும் விந்தை நிறைந்த ஒரு சந்தை.
அந்தச் சந்தையில் சிக்கியவர்கள் வெளியில் வரவும் முடியாது . அந்த துறையில் இருந்து சாதிக்க வேண்டும் என்ற வெறி ஒவ்வொரு நாளும் வளர்ந்து கொண்டே இருக்கும்.
அப்படித்தான் உதவி இயக்குனர் குரு . ஒரு நலிந்த கலைஞன். எப்படியும் சினிமாவில் சாதித்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலைந்து கொண்டிருந்தான்.
ஆனால் அவனுடைய கனவுகளையும் திறமையையும் அங்கீகரிப்பதற்கு இங்கு ஒரு ஆள் கூட இல்லை
தெருத்தெருவாகச் சுற்றி அலைந்து ஒரு கட்டத்தில் இந்தத் துறையே வேண்டாம் என்று வெறுக்கும் அளவிற்கு சினிமாவின் மீது அவனுக்கு கோபம் வந்தது.
ஜெயித்தவர்கள் எல்லாம் அவமானம், பட்டினி, பசி எல்லாம் தாண்டிதான் ஜெயித்திருக்கிறார்கள் .இதெல்லாம் நீ பொருட்படுத்தக் கூடாது என்று அறிவுரையை அவன் காதில் ஊற்றி ஊற்றி அது நிரம்பி வெளியே வழிந்து கொண்டு இருந்தது .
அவன் படாத அவமானங்கள் இல்லை . அசிங்கங்கள் இல்லை. பசி, பட்டினி அத்தனையும் துறந்து தான் வந்திருக்கிறான் . ஆனால் ஜெயித்தவர்கள் எல்லாம் பட்டினி, பசி அனுபவிதித்திருக்கிறார்கள் என்பது அவன் பட்ட கஷ்டங்களில் இருந்து விடை கிடைக்காமல் இருந்தது.
எப்படியும் ஊருக்கு சென்று விட வேண்டும் என்று முடிவில் இருந்த குருவை சினிமாவில் நிறைய பழக்கம் உள்ள ஒரு பெரிய மனிதர் உதவி இயக்குனராக ஒரு இயக்குனர் இடம் சேர்த்து விட்டார்.
தம்பி நல்ல பையன் உங்களுக்கு உதவியா இருப்பான்னு நினைக்கிறேன். இவர உங்க கூட சேர்த்துக்கோங்க என்று அந்தப் பெரிய மனிதர் அந்த இயக்குனரிடம் ஒப்படைத்தார் .
நீங்க சொல்லிட்டீங்க இல்ல; தம்பி நம்ம கூடவே இருக்கட்டும் என்று அந்த பெரியவருக்கு உத்தரவாதத்தை அள்ளிக் கொடுத்துவிட்டு குருவைச் சேர்த்துக் கொண்டார் அந்த இயக்குனர்
இதுநாள் வரை ஒரு இயக்குனரிடம் உதவி இயக்குனராக சேர முடியாத குருவிற்கு அது பெரிய ஆறுதலாக இருந்தது. அவன் கைகள் இறக்கைகள் ஆகி வானத்தில் பறந்தன. கால்கள் பூமியில் இல்லாமல் அவன் மிதப்பதாகவே நினைத்தான்.
அந்த ஆசை அவனுக்குள் வேரூன்றி நீரூற்றியது .முதல் நாள் மனதில் நிறைந்த சந்தோஷத்துடன் அந்த இயக்குனரின் அலுவலகத்திற்குள் நுழைந்தான், குரு.
சிகரெட் நெடி ,பிராண்டி வாசனை என்று கொஞ்சம் தூக்கலாகவே இருந்து தந்த இயக்குனரின் அறை.
தம்பி இங்க வாங்க என்று குருவை அழைத்தார் அந்த இயக்குனர். ரொம்ப பவ்வியத்தோடு இயக்குனரிடம் நின்றான் குரு.
கதை பேசுவீங்களா? என்று நக்கல் சிரிப்போடு கேட்டார் இயக்குனர்.
பேசுவேன் சார் என்று தைரியமாகச் சொன்னான் குரு.
அப்படி ஆள் தான் எனக்கு வேணும் என்று சொல்லிய இயக்குனர் மதியம் ஒரு மணி நெருங்கிய போது சரி எனக்கு ஒரு சின்ன வேலை இருக்கு போயிட்டு மூணு மணிக்கு மேல வாங்க என்று அனுப்பினார் அந்த இயக்குனர்.
சரி அவருக்கு ஏதோ வேலை இருக்கும் போல அதனால தான் நம்மள மூணு மணிக்கு வர சொல்றார். சரி போயிட்டு வருவோமே என்று நினைத்த குரு அந்த அலுவலகத்தை விட்டு வெளியே வந்தான்.
தன் கைக்காசை போட்டு மதிய உணவை முடித்துவிட்டு, அந்த இயக்குனர் சொன்ன மூணு மணிக்கு சரியாக அலுவலகத்திற்குள் நுழைந்தான்.
சின்னதாக தூக்கம் போட்டு எழுந்து அமர்ந்திருந்த அந்த இயக்குனர் கண்களை இறுகத் துடைத்துக் கொண்டு
வாங்க உட்காருங்க என்று கதை பேச ஆரம்பித்தார்.
அவர் சொல்லும் கதை குருவிற்கு பிடிக்கவில்லை என்றாலும் ஆமா சாமி போட்டால் தான் அங்கே பிழைக்க முடியும் என்று தெரிந்து ஆமா நல்லா இருக்கு ,சூப்பர் எக்சலண்ட் என்று பொய்களை அள்ளிவிட்டான்..
ஆனால் ஒரு கட்டத்தில் அவனுக்கு அது தவறு என்று தோன்றியது பரவாயில்லை. முதல் நாள் உடனே பேசக்கூடாது என்று முடிவெடுத்த குரு மறுநாளும் அதே கதை விவாதத்தில் இயக்குனருடன் அமர்ந்தான்.
இயக்குனர், குரு என்ற இருவர் மட்டுமே இருந்த அலுவலகத்தில் மறுநாளும் மதியம் அதே ஒரு மணி ஆகும் போது குருவை வெளியே அனுப்பிவிட்டு,
இன்று நான்கு மணிக்கு வாருங்கள் என்று சொன்னான் அந்த இயக்குனர்.
சரி இவருக்கு வேலை இருக்கும் போல. நாம நான்கு மணிக்கு வரலாம் என்று நினைத்த குரு. அந்த நாளும் தன் கையில் இருந்த காசை போட்டு சாப்பிட்டு விட்டு மறுபடியும் அந்த இயக்குனர் அலுவலகத்திற்கு 4 மணிக்கு சென்றான்
மறுபடியும் கதை பேச்சு, விவாதம் என்று போனது.
அடுத்த நாள் தன்னுடைய காசை செலவு செய்து, அதை இயக்குனர் அலுவலகத்திற்கு சென்றான்.
அதே கதை, பேச்சு என்று இருந்த இயக்குனர் அந்த நாளும் சரியாக மதியம் ஒரு மணி ஆகவும் வெளியே அனுப்பி வைத்துவிட்டு 4:00 மணிக்கு வாங்க குரு என்று சொல்லிவிட்டார்
இப்போது தான் குருவின் மூளையில் ஏதோ ஒரு பொறி தட்டியது.
என்ன இது ? தினந்தோறும் சரியா ஒரு மணிக்கு சாப்பிடுற நேரத்துக்கு வெளியே அனுப்பி விடுறார். அப்புறம் சாப்பிட்டு முடிச்சதுக்கு அப்புறம் உள்ள கூப்பிடுறாரு. இதுல ஏதோ இடிக்குதே என்று நினைத்தான் குரு
அப்போதுதான் அவன் மனதில் பட்டது.
இந்த இயக்குனர் நமக்கு மதியச் சாப்பாடு வாங்கி கொடுப்பதற்கு கூட யோசிக்கிறார். இவர் எப்படி படம் எடுப்பார்? இவருடன் தொடர்பு வைப்பது சரியல்ல. நம் பிழைப்பை கெடுத்துக் கொள்ளும் வழி இது என்று நினைத்த குரு
மறுநாள் அந்த இயக்குனர் அலுவலகத்திற்கு செல்லாமல் இருந்தான்.
குருவின் நடவடிக்கை அவன் எதுவும் பேசாமல் இருந்தது அந்த இயக்குனருக்கு பிடித்துப் போனதால் குருவிற்கு ஃபோன் செய்தார்.
என்ன தம்பி ஆபீஸ் வரலையா? என்று அந்த இயக்குனர் கேட்க
இல்ல சார் நான் வரல. உண்மையிலேயே படம் எடுக்கிறவங்க கிட்ட நான் உதவி இயக்குனரா சேரப் போறேன் என்று குரு சொன்ன போது,
அந்த இயக்குனருக்கு பளார் என்று கன்னத்தில் அறைந்தது போல் இருந்தது.