வைரவன் வீட்டுக்கு போனா வேர்க்கும். ஃபேன் போட மாட்டார். டீ காபி கொடுக்க மாட்டார். ஏன் பச்சைத் தண்ணி கூட கொடுக்க மாட்டார். அதைவிட முக்கியம் உட்காரதுக்கு எந்த சேரும் கிடையாது ஒன்னும் கிடையாது. நிக்க வச்சு தான் பேசுவார். ரொம்ப அலட்சியமா வருவார் எகத்தாளமாகப் பேசுவார். விவரங்களை கேட்க மாட்டார். இப்படிப்பட்ட வைரவன் வந்து எப்படி சமூகத்தில் பெரிய ஆள் என்று பேர் எடுத்து இருக்கிறார் ” என்று வருத்தப்பட்டுச் சொன்னார் ரகு.
“எந்த ஒரு மனுஷனையும் வெளியில பார்க்கும்போது சிறப்பா இருப்பாங்க. ஆனா உள்ள போய் பார்த்தா தான் அசிங்கமா இருப்பாங்க. அப்படிப்பட்ட ஆளுதான் இந்த வைரவன் “
என்று பேசிக் கொண்டார்கள் மக்கள்
” நீங்க ஏதோ அவர போய் நேரடியா பார்த்தது மாதிரி சொல்றீங்களே? அவர் சமூகத்தில் உசந்த இடத்துல இருக்கிறார் .அவரை இப்படி அவதூறு பேசுறது தப்பு “
என்று வைரவனுக்கு ஆதரவாகப் பேசினார் முரளி.
” ஏங்க நான் யாரோ பேசுறத கேட்டு சொல்றேன்னு நினைக்காதிங்க. நான் நேரடியா அனுபவிச்சு தான் சொல்றேன். அவர் மாதிரி மட்டமான ஆள நான் பாத்ததே இல்ல. நானே போயி வேர்க்க விறுவிறுக்க உட்கார்ந்திட்டு தான் வந்து இருக்கேன். இனிமே இந்த ஆள பாக்கவே கூடாது. அப்படின்னு தான் நான் முடிவெடுத்து இருக்கேன்”
என்று ரகு சொல்ல வைரவன் மீதான நம்பிக்கையை முரளி விடவே இல்லை.
“நான் அவரு மேல ரொம்ப மரியாதை வச்சு இருக்கேன். நீங்க சொல்றதெல்லாம் தப்பு . அவரு ரொம்ப மரியாதையா தான் பேசுறாரு. நீங்க சொல்றது மாதிரி எதுவும் நடக்கலையே? என்ன நல்லா தானே பாத்துக்குறாரு. நீங்க சொல்றது என்னமோ வியப்பா இருக்கே ? ” என்று முரளி சொல்ல ரகு அதற்கு மறுப்பு தெரிவித்துக் கொண்டே இருந்தார்.
” நீங்க போய் பாருங்க. அப்பத்தான் தெரியும் “
” சரி நான் இன்னைக்கு வைரவன் வீட்டுக்கு போறேன். என்னன்னு பார்க்கிறேன் ” என்று முரளி வைரவன் வீட்டிற்கு கிளம்பினார். அன்று வைரவன் வீட்டில் தான் இருந்தார். அவருடைய உதவியாளரைச் சந்தித்து விஷயத்தைச் சொன்னார்.
” சரி கொஞ்ச நேரம் இருங்க” என்று சொன்னவர் அங்கே இருந்த இருக்கையில் அமர்ந்தார். அன்று இருக்கை ஏனோ இருந்தது. மேலே பார்த்தார். எந்த காற்றாடியும் அங்கு இல்லை. ஏசியும் அங்கு இல்லை. வேர்த்துக் கொட்டியது. கையில் இருந்த கைகுட்டையை எடுத்து முகம், கழுத்து, பின்பக்கம் என்று அத்தனை துடைத்துக் கொண்டார். வேர்த்து கொட்டிக் கொண்டே இருந்தது.
” என்ன இது ரகு சொன்னது உண்மைதான் போல? ஏன் ஒரு ஃபேன் கூட போட கூடாதா? இவங்களுக்கு இருக்க சொத்து சுகத்துக்கு ஒரு ஃபேன் போட்டா குறைஞ்சு போவாங்களா என்ன? இது தப்பு. இது தப்பு “
என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டார் முரளி. குடிப்பதற்கு தண்ணீர் கூட கொடுக்கவில்லை. சுமார் ஒரு மணி நேரம் வைரவனுக்காக காத்துக் கொண்டிருந்தார் முரளி .அவர் வந்த பாடில்லை. இதோ வருகிறார். வேலையாக இருக்கிறார். காத்திருங்கள். இதோ வருகிறார். காத்திருங்கள் “
என்று சொல்லிக் கொண்டே இருந்தார் அவரின் உதவியாளர்
ஆனால் வைரவன் வந்தபாடில்லை. ஒரு கட்டத்தில் நொந்து போன முரளி உதவியாளரிடம் சொல்லிவிட்டு வெளியே வந்தார்
“கோச்சுக்காதீங்க ஐயா கொஞ்சம் வேலை இருந்தாங்க. இப்ப வந்துருவாங்க .உங்களை சந்திப்பாங்க, “
என்று சொல்லிய உடன் வைரவன் வெளியே வந்தார்.
” என்ன முரளி எப்படி இருக்கீங்க? நீங்க காத்துகிட்டு இருக்கிறதா சொன்னாங்க. எனக்கு கொஞ்சம் வேலை இருந்தது .அதான் முடிச்சுட்டு வந்துட்டேன் .என்ன பண்ணனும் .என்ன செய்யணும்?
என்று நிற்க வைத்து பேசிக்கொண்டே பேசினார். இதையெல்லாம் கவனித்த முரளி
“ஐயா நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கணும் .அது தப்பா இருந்தா மன்னிச்சிடுங்க “
என்று சொன்ன முரளியை பார்த்த வைரவன் “சொல்லுங்க ” என்று சொல்ல
” உங்கள பாக்க எப்படியும் ஒரு பத்து நிமிசமாவது காக்க வேண்டியது இருக்கும். வர்றவங்களுக்கு ஏதாவது ஃபேன் போட்டு விடக் கூடாதா? குறைந்தபட்சம் தண்ணியாவது கொடுக்கக் கூடாதா ?ஏன் இப்படி செய்றீங்க?”
என்று முரளி கேட்க ,அதைக் கேட்டு கடகடவென சிரித்த வைரவன்
” உண்மைதான் முரளி. நான் ஃபேன் போட்டு, தண்ணி கொடுத்தா வந்தவன் இங்கயே உட்கார்ந்துக்கிடுவான். எடத்த விட்டுப் போக மாட்டான். இதெல்லாம் ஒரு விதமான நுணுக்கம் முரளி. வந்தவனை துரத்தணும். இந்த மாதிரி செஞ்சா அவன் எந்திரிச்சு ஓடிப் போயிருவான். இனி நம்மள பாக்கணும்னு அவன் மனசுல வச்சுக்க மாட்டான் “
என்று வைரவன் சொல்ல
“உங்கள போயி தவறு, உன்ன போயி இந்தச் சமூகத்தில பெரிய ஆள்ன்னு சொல்றாங்களே ?நீ எல்லாம் பெரிய மனுஷன்ங்கிற போர்வையில வாழ்ந்துகிட்டு இருக்கிங்க. இனிமே உன்ன நான் சந்திக்க வரமாட்டேன்”
என்று அங்கேயே முடிவு எடுத்துக்கொண்டு கிளம்பினார் முரளி
“சரி முரளி, போயிட்டு வாங்க என்று இரு கைகள் எடுத்துக் கும்பிட்டார். இனிமே நம்ம பார்க்க முரளி வரமாட்டான் “என்று உதவியாளரை அழைத்த வைரவன்
” நான் வெளியே கிளம்புறேன். யாராவது வந்தா ஒக்காரச் சொல்லு”
“சரிங்க ஐயா”
சிறிது நேரத்திற்கெல்லாம் வைரவனைத் தேடி ஒருவர் வந்தார்.
” ஐயா வெளியே போயிருக்கிறார். இப்ப வந்திடுவார். உட்காருங்க’ என்று வந்தவரிடம் சொல்ல,
வந்தவர் உட்கார்ந்தார். மேலே பார்த்தார் ஃ பேன் இல்லை. தண்ணீர் கொடுக்க ஆள் இல்லை. சலிப்புத் தட்ட ஆரம்பித்தது. நெளிய ஆரம்பித்தார் வந்தவர்.