செய்திகள்

நுகர்வோருக்கு 24 மணி நேர தடையில்லா மின்சாரம் மின் பழுதை உடனுக்குடன் சரி செய்ய வேண்டும்

அதிகாரிகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவு

சென்னை, ஜூன் 27–-

நுகர்வோருக்கு 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்றும், மின் பழுதினை உடனுக்குடன் சரி செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு, அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாநில மின் பகிர்ந்தளிப்பு மையத்தை நிதி, மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று ஆய்வு செய்தார்.

அப்போது, தமிழ்நாட்டில் அனல், புனல், காற்றாலை, சூரிய மின்சக்தி மற்றும் எரிவாயு மின் உற்பத்தி நிலையங்களின் மூலமாக உற்பத்தி செய்யப்படும் மொத்த மின்சாரத்தின் அளவு பற்றி தங்கம் தென்னரசு கேட்டறிந்தார்.

மேலும், மாநில மின் பகிர்ந்தளிப்பு மையத்தின் முக்கிய பணிகளான மின் சுமை மற்றும் மின் உற்பத்தியை சமநிலை செய்து மின் வினியோகம் செய்தல், மாநில மின் கட்டமைப்பின் பாதுகாப்பான திட்டமிடல் மற்றும் பொருளாதார செயல்பாடுகள், அதிர்வெண்ணை 49.90 எச்.இசட் முதல் 50.05 எச்.இசட் வரம்புக்குள் பராமரித்தல், விலகல் வரம்பினை 200 மெகாவாட் வரம்புக்குள் பராமரிப்பது உள்ளிட்ட செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இதனைத்தொடர்ந்து, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மின்சாரத்தினை தடையின்றி வழங்குவதை கண்காணிப்பதற்கென பிரத்யேகமாக இயங்கி வரும் கட்டுப்பாட்டு மையத்தினையும் ஆய்வு மேற்கொண்டு, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளின் மின் தேவை குறித்து தங்கம் தென்னரசு கேட்டறிந்தார்.

மேலும், மாநிலத்தின் தற்போதைய மின் நுகர்வினை கருத்தில் கொண்டு எவ்வித தடங்கலுமின்றி அனைத்து மின் நுகர்வோர்களுக்கும் 24 மணி நேரமும் தடையில்லா சீரான மின்சாரம் வழங்கவும், பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்களுக்கு துரிதமாக செயல்பட்டு மின் பழுதுகள் ஏற்பட்டால், அவற்றை உடனுக்குடன் சரி செய்து சீரான மின்சாரத்தினை பாதுகாப்பான முறையில் அனைத்து மின் நுகர்வோர்களுக்கும் வழங்கவும் அலுவலர்களுக்கு, தங்கம் தென்னரசு அறிவுறுத்தினார்.

அமைச்சர் ஆய்வு செய்தபோது, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழக தலைவர் ராஜேஷ் லக்கானி, மின் தொடரமைப்பு கழக மேலாண்மை இயக்குனர் இரா.மணிவண்ணன் மற்றும் உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *