சிறுகதை

நீ எங்கே..! என் அன்பே.. ! | கி.ரவிக்குமார்

மெ ல்லிய மழைத் தூறல் வாசலில் பஞ்சு பஞ்சாக விழுந்து கொண்டிருந்தது! மாலைக் கல்லூரி முடிந்துசற்றே களைப்புடன் வீட்டுக்குள் நுழைந்தாள் சாந்தினி.

களைப்பிலும் களையாகத் தெரிவது தான் அவள் சிறப்பே!

வராண்டாவில் ஈஸி சேரில் அமர்ந்திருக்கும் அப்பாவை பார்த்தாள்.

சற்று கோபத்துடனும்சற்று குழப்பத்துடனும் சேரில் மெல்ல ஆடிக் கொண்டிருந்தார் திருஞானம்.

என்ன அப்பா! உடம்பு சரியில்லையா!” என்று கேட்டாள்.

அவளைப் பார்க்காமலேயே “ம்…! ம்…! தேர்வு கட்டணம் கட்டிட்டியா!என்றார்.

‘சரிதான்! வழக்கம் போல ஏதோ நடந்திருக்கு!’ என்ற யூகத்துக்கு வந்தாள் வீட்டுக்குள் அம்மா இல்லாதது கண்டு,

‘’இன்னைக்கு அம்மா மேலே ரொம்ப அன்பு செலுத்திட்டீங்களோ!” என்றாள்.

அவள் குரலில் இருந்த கேலியை புரிந்தவராகதிரும்பிப் பார்த்தார்!

உனக்கும் உங்கம்மா மாதிரியே வாய்! இப்படியே உங்கம்மா மாதிரி பேசினால் போற இடத்தில் வாங்கிக் கட்டுவ!” என்றார் காட்டமாக!

கண்டிப்பா! வாங்கி வாங்கிக் கட்டுவேன். அதுவும் பட்டுச்சேலையா!” என்று சொல்லிச் சிரித்தபடிஉடைகளை களைந்து நைட்டிக்குள் நுழைந்தாள்,

இப்போ என்னப்பா ஆச்சு! கோவிச்சுக்கிட்டு வழக்கம் போல பக்கத்து தெருவில் இருக்கும் பாட்டி வீட்டுக்கு போயிட்டுராத்திரியோகாலைலயோ வரப்போங்க! இப்போப் பாருங்க! மழைக்கு இதமாசூடா சமோசாவும்காப்பியும் போட்டு தர்றேன்!”

என்று சொல்லி விட்டு சமையலறைக்குள் சென்றவளை அதிர்ச்சியோடு பார்த்தார் திருஞானம்.

அச்சச்சோ! இவளுக்கு சட்டி எதுபானை எதுனே தெரியாதே! என்ன பண்ணப் போறாளோ!‘ என மனம் திக்கென்று அடித்துக் கொண்டது!

ஸ்டவ் பற்ற வைக்கும் சத்தம் கேட்டது!

அம்மாடி! சாந்து…! அடுப்பில் ஆரஞ்சு கலர்ல தெரியும் பார். அது தான் நெருப்பு!” என்றார் இங்கிருந்தபடியே!.

ம்! வாய் அம்மாவுக்கு இல்லை! உங்களுக்கு தான்!”என்ற படி ஹாலுக்குள் வந்து செல்ஃபில் ஏதோ தேட ஆரம்பித்தாள்.

மாவுகாபி டிக்காசன் எல்லாமே எனக்கு தெரிஞ்சு சமையல் ரூமில் தான் இருக்கும்!‘ என்றார் பாவமாக!

தெரியும்!‘ என்று பழிப்பு காட்டி விட்டுதேடி எடுத்த மடிக்கணினியை உள்ளே கொண்டு போனாள்.

ஆஹா! கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையா இருக்கே! இன்னைக்கு யூ டியூப் சமையலா!‘ என்று நினைத்தவர் மனதில் மனைவியிடம் மானசீகமாக மன்னிப்பு கேட்டார்.

சற்று நேரத்தில்இன்னது என்று இல்லாமல்ஏதேதோ வாசனைகள் கலந்து கட்டி வந்தன. கடைசியில் கருமேகம் போல ஒரு புகையும் கருகல் வாடை வரும் போது தான்,

அடடா! ஓ..! இப்படி இல்லையா..!” என்று சாந்தினி சட்டியோடு பேசும் வசனம் கேட்டது!

வெளியே மழையும் வலுத்துக் கொண்டே போனது. இல்லை எனில்மனைவி ஜெயா தனக்குள் ஏதாவது சமாதானம் ஆகி திரும்பி வந்திருப்பாள்.

ஒரு தீஞ்ச வாடை அருகிலிருந்து வந்ததும்சட்டென திரும்பிப் பார்த்தார்.

ஒரு கையில் தட்டில் மாவு உருண்டையும்மறு கையில் கருப்பு தண்ணியுமாக மகள் நின்ற கோலம் அவரை அதிரவைத்தது.

என்னதும்மா!”

காப்பி! சமோசா!”

காப்பி போட்ட வாசனையே வரலையே!”

சமோசா வாசனையில் அமுங்கி போயிருக்கும்ப்பா!” என்ற மகளை வெளிறிப் போய் பார்த்தவர்,

மாவு உருண்டையை எடுத்து முகத்தருகே கொண்டு போகமூக்கு முந்திக் கொண்டுகுமட்டலை ரெகமெண்ட் பண்ணியது.

மெல்ல கடித்துப் பார்த்தவர் கண்களில் காரங்காரமாக கண்ணீர் வழியகாபியை ஒரு சிப் உறிஞ்சியவர்அப்படியேவைத்து விட்டுஎழுந்து உள் ரூமுக்கு ஓடினார்.

என்னப்பா! என்ன ஆச்சு! சமோசா எப்படி இருக்கு! ஏன் வைச்சுட்டீங்க!” என்று கேள்வி மேல் கேள்விகளைக் கேட்ட படியே வந்த மகளிடம்,

காப்பி கேள்விப்பட்டு இருக்கேன்! ஆனால், இப்படி ஒரு கொடுங்காப்பியை கேள்விப்பட்டது இல்லை! வர்றவன் செத்தான்!”

என்ற ஒரு வரியில் பதிலளித்து விட்டுவாசலில் இறங்கி மழையில் நனைந்த படி கிட்டத்தட்ட தெருவில் ஓடினார்!

பாட்டி வீட்டுக் கதவு தட்டப்படும் ஓசை கேட்டு வந்து திறந்தாள் ஜெயா,

தன் கணவர் தொப்பலாக நனைந்துகண்ணீருடன் நிற்பதை பார்த்துமனம் உருகிப் போனாள்.

தனக்காக வந்திருப்பதாக நினைத்து நெஞ்செல்லாம் மகிழ்ந்து அவசரம் அவசரமாக அவருடன் வீட்டுக்குக் கிளம்பினாள் ஜெயா.

மழை இன்னும் வலுக்க கணவன் – மனைவி இருவரும் வேகமாக நடக்க ஆரம்பித்தனர் அவர்கள் வீட்டை நோக்கி….!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *