சினிமா செய்திகள்

‘நீ அறிவாளி; நீ ஜெயிப்பே’’: மதிமாறனுக்கு வாகை சூடியது சந்திரசேகர் வாக்கு…!

நிழலில் எழுதிய வசனம் நிஜத்தில் பலித்தது

‘நீ அறிவாளி; நீ ஜெயிப்பப்பா…’’

நடந்து விட்ட கொடுமைகளுக்காக கைப்பேசியில் கண்ணீர் விட்டுக் கதறி அழும் ‘கனல்’ – ஜீ.வி. பிரகாஷுக்காக…

மறுமுனையில் சோகமே உருவாக நின்ற நிலையிலும் பெத்த பிள்ளைக்காக…

‘‘நீ அறிவாளி; நீ ஜெயிப்பப்பா…’’ என்று அனுசரணையாக 4 வார்த்தை ஆறுதலாக சொல்லி தேற்றி இருக்கும் அந்தக் காட்சியில் வாகை சந்திரசேகர் பேசும் விதம் நிழலில் தான், என்றாலும் நிஜத்தில் பலித்திருக்கிறது, அறிமுக இயக்குனர் மதிமாறன் விஷயத்திலும்.

வாகை சூ(ட்)டியிருக்கிறார் சந்திரசேகர்!

‘ஆக்க்ஷன் பிரின்ஸ்’ ஜீ.வி. பிரகாஷ் (ஆக்க்ஷன் கிங் என்று அர்ஜுன் இருக்கிறாரே…) விஷயத்திலும் நிஜத்தில் பலித்திருக்கிறது. இங்கே நிழல், நிஜமாகி இருக்கிறது, வாழ்த்துக்கள் மதிமாறன், ஜீ.வி. பிரகாஷ் இரட்டையர்களுக்கு!

அறிமுகமான முதல் படம் ‘செல்பி’யிலேயே குருவை (வெற்றி மாறன்) மிஞ்சிய சிஷ்யனாகி இருக்கிறார் என்று ஆளுயரத் தூக்கி, ஆலிங்கனம் செய்தால்… வெற்றி மாறன் இல்லை என்று மறுப்பாரா… இல்லை மறுதலிப்பாரா…?

சொந்த மாமா மகனாக இருக்கும் மதிமாறன் உதவியாளனாக சேர்ந்து, இன்று கன்னி முயற்சியிலேயே கலையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறான்(ர்) என்று சொன்னால்…

தனக்குப் பிடிக்காத என்ஜினியரிங் கல்லூரியில் அப்பாவின் ஆசை – கெடுபிடிக்காக தள்ளப்படுகிறான் கனல் (ஜீ.வி. பிரகாஷ்). கையில் காசில்லை. படிப்பில் நாட்டமில்லை. தம் அடிக்கிறான். தண்ணி அடிக்கிறான். சேர்வார் சேர்க்கையால் கெட்டுக் குட்டிச்சுவராகிறான்.
ஒரு நாள்… காலேஜிலேயே மானேஜ்மெண்ட் கோட்டாவுக்கு ஆள் பிடிச்சுக் குடுத்தா… லட்சம் லட்சமாக சம்பாதிக்கலாம்ங்ற உண்மை தெரிய வருது.
ஆருயிர் நண்பன்(டே) நசீர் காட்டிய ஆசை வார்த்தை. புரோக்கராக மாறுகிறான். அது அவன் கல்லூரி வாழ்க்கையையே புரட்டிப் போடுகிறது.
‘திரைமறைவு’ ‘தாதா’ கவுதம் மேனன் (மானேஜ்மெண்ட் கோட்டா நிரப்ப மாணவர்களைக் கொண்டு வந்து கொட்டும் கில்லாடிக்கு கில்லாடி) வழியில் கனல் குறுக்கிடுகிறான். (அ)தர்ம யுத்தம். இருவருக்கும் நடுவில் முடிவு என்ன? இது தான் ‘செல்ஃபி’ திரைக்கதை.

‘வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும், அதை வாங்கித் தந்தப் பெருமை எல்லாம் உன்னைச் சேரும்…’ என்று அந்த மருமகன் மதிமாறன், வெற்றிமாறனுக்கு துதி பாடிக் கொண்டிருப்பாரா இல்லையா… சொல்லுங்களேன் தாணு சார்!

* ஆருயிர் நண்பன்(டே) நசீர் (தயாரிப்பாளர் குணாநிதி) சாவுக்கு தானே காரணம் என்று நினைத்து நினைத்து வருந்தி… வருந்தி… நடைப்பிணமாக அவனது முகத்தை ஒரு தடவை கடைசியாகப் பார்க்கப் போன இடத்தில்…

‘நீ என்டா தம்பீ… அங்கேயே நிக்கறே… மொகத்தைப் பாரு வந்து…’ என்று நசீரின் தாய் (யார் இந்த அம்மா… அருமையான தேர்வு) கனலை அழைத்துப் போகும் காட்சி…

*‘அம்மா… நசீர் சாவுக்கு நான் தான் காரணம்… இந்தாம்மா… பணம் வெச்சுக்குங்கம்மா… இதுல….’’ என்று சொல்லி கைக்கு வந்த ரூ.10 லட்சத்தை கொடுக்கப் போன இடத்தில், நசீரின் தாய் ‘ஒங்கப்பாவே நேர்ல வந்து குடுத்து ஒத்தாசை பண்ணிட்டாருப்பா…!’’ என்று சொன்னதும், அப்பாவின் ‘புனிதத்தை’ நினைத்து வாய் விட்டுக் கதறுவதும்…

*‘‘அப்பா… மன்னிச்சிடுங்கப்பா… ஒங்களப் புரிஞ்சுக்காம…’ என்று குமுறிக்குமுறி நா தழுக்கதழுக்க அழுது பாவ மன்னிப்புக் கேட்பதும்…

ஜீ.வி. பிரகாஷ் – இதுவரைக்கும் திரை நடிப்பில் பார்த்தவற்றில் … பிரகாஷ், இது தான் ஜீ.வி. – கிரேட் விக்ட்டரி! கலை வாழ்க்கையில் நெஞ்சம் மறப்பதில்லை!

குரு (வெற்றிமாறன்) எப்படியோ அப்படியே தான் வாய்த்திருக்கிறான்(ர்) சிஷ்யனும்.

சொந்த மண்ணில் கண் எதிரில் பார்த்து காதுபடக் கேட்டு, வாய்வழி வந்த தகவல்களின் பின்னணியில் ஒரு திரைக்கதையை உருவாக்கியிருக்கிறாரே, அது தான் ‘உயிரோட்டம்’, ‘செல்பி’ படத்திற்கு.

ஒரு மாணவன் சொன்ன இரண்டு இரண்டே வாக்கியத் தகவலை (‘‘2ம் ஆண்டில் சொகுசு கார் வாங்கினேனா… அதை 3ம் ஆண்டு இறுதியில் வித்தேன். காலேஜ்ல படிக்கறப்போவே ஆள் பிடிக்கும் புரோக்கரா… இருந்ததாலே வந்த வினை சார்…!’’) 2 மணி நேரம் 18 நிமிடம் 33 வினாடிக்குப் படமாக வெள்ளித் திரையில் ஓட விட்டிருக்கிறார் என்றால்…

கண்ணில் ‘கலைப்புலி’யாகத் தெரிகிறாரே இல்லையா இந்த மதிமாறன், சொல்லுங்க தாணு சார்?!

பிரபல மக்கள் தொடர்பாளர் மவுனம் ரவியின் மகன் சூர்ய பிரகாஷ் (பிபிஏ பட்டதாரி). மருத்துவத்துக்கு ‘சீட்’ தேடும் மாணவனாக தலைகாட்டுகிறார். இவரது தந்தை நாயாகர் அந்தக் கம்பீரம், வசன உச்சரிப்பு, முகத்தில் கடுகடுப்பு – வட்டியில் வசூலித்த சம்பாதித்த பணம் அநியாயமாயப் போய்விடுமே(ா) என்ற பயத்தில் நசீரையும் அவனது தாயாரையும் எச்சரிக்கும் அந்தத் தோரணை…. நெஞ்சில் உறைகிறார் நாயகம்.

ரீ ரிக்கார்டிங். ஜீ.வி.பிரகாஷ் – அசத்தல். ஆக்க்ஷன் பிளாக்கில்… காலேஜ் சீட் புரோக்கர்கள் 4 பேர் தனித்தனியாக கூட்டுக்குப் பேரம் பேசி ஒருவர் இன்னொருவருக்கு வலை வீசும் காட்சிகளில்… க்ளைமாக்ஸ்சில் கவுதம் மேனன் கால் நரம்பு கிழிக்கப்பட்டு கத்தியால் குத்திக் கொல்லப்படும் காட்சி… பின்னணி இசை, இதுவரை ஜீ.வி.பிரகாஷிடம் இல்லாதது, நாமும் விமர்சனத்தில் குறிப்பிட்டுச் சொல்லாதது.

விஷ்ணு ரங்கசாமி (காமிரா), இளையராஜா (எடிட்டர்), ராம்போ விமல் (ஸ்டண்ட்) : ‘அக்கன்னா’ ஆயுத எழுத்து மாதிரி –மதிமாறன் வெற்றிக்கு வலுவான புள்ளிகள்.

மதிமாறனின் இல்லத்தரசி ஜெய்ஸ்ரீ பாடாலாசிரியர், எளிமை வரிகள். இதயம் நனைக்கும். அறிவு என்று இன்னொரு பாடலாசிரியரும் உண்டு.

வசனகர்த்தா யாரது? யதார்த்தம். ஒவ்வொரு கதாபாத்திரமும் பேசும் வசனம் யதார்த்தம். ‘மெனக்கெடல்’ இல்லையே…?

(தலைமுடியை கொச்சையாகப் பேசும் வசனத்துக்கும் கொஞ்சம் சுயதணிக்கை செய்து கொண்டிருக்கலாம், மாறன்.

டைட்டில் ‘செல்ஃபி’ க்கு எப்படி விளக்கம் என்று காத்திருந்தால்…

எ கன்பெஷன் ஆஃப் என்ஜினியர், ஒரு பொறியாளன் வாக்குமூலம் என்று தன்னையே செல்ஃபியில் கனல் ஜீ.வி. பிரகாஷ் புகைப்படம் எடுத்து ஒளிபரப்புவது… மதிமாறனின் மூளை முதிர்ச்சி, தெரிகிறது!

* ‘கொரோனா’ எதிரொலியாக திரையரங்குகளில் கூட்டம் 3ல் ஒரு பங்காகக் குறைந்து விட்டதே…

என்று ஆதங்கத்தில் சூடாகிப்போய் இருக்கும் திரையரங்கு அதிபர்களாகட்டும்…

* நல்லதோர் கதை நமக்குக் கிடைக்கமாட்டேன் என்கிறதே என்று ஆதங்கத்தில் சூடாகிப்போய் இருக்கும் தயாரிப்பாளர்களாகட்டும்…

* கொடுத்த காசுக்குக் குறைவில்லாமல் ஒரு படம் பார்த்தோம் என்ற திருப்தி வர மாட்டேன் என்கிற ஆதங்கத்தில் சூடாகிப்போய் இருக்கும் சாமான்ய ரசிகனாகட்டும்….

திரையரங்க அதிபர்கள், தயாரிப்பாளர்கள், சாமான்யனின் ஆதங்க சூட்டைத் தணிக்கும் ஜில்லுன்னு ஒரு குல்பி மதிமாறனின் ‘செல்ஃபி’!Leave a Reply

Your email address will not be published.