சிறுகதை

நீல நிற வாழைப்பழம்! – சிகாகோ சின்னஞ்சிறுகோபு

எழுபத்தைந்து வயதைத் தாண்டிவிட்ட நீலமேகத்திற்கு அன்று காலையில் கண் விழித்தபோதே குழப்பமாக இருந்தது.

நீலமேகம் கட்டிலில் இருந்தபடியே ஜன்னல் வழியாக பார்த்தபோது கண்ணுக்கு நீலவானம்தான் தெரிந்தது! ‘காலையில் செவ்வானம்தானே தெரிய வேண்டும், இதென்ன நீலவானமாக தெரியுதே’ என்று நினைத்தவருக்கு அப்போதுதான் தனது கட்டில் தெற்குப் பக்க ஜன்னல் ஓரமாக போடப்பட்டிருப்பது நினைவுக்கு வந்தது!

ஐயா நீலமேகம் அந்த காலத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். ஓரளவு பெரிய பதவியில் நல்ல சம்பளத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர் என்பதால் வறுமையெல்லாம் இல்லையென்றுதான் சொல்ல வேண்டும்! அவரது மகன்கள் இருவரும் வளர்ந்து பெரியவர்களாகி அவர்கள் குடும்பம், குழந்தைகள், வேலையென்று வெளி மாநிலங்களுக்கு சென்றுவிட்ட பிறகு அவர் மட்டும் சென்னையிலேயே அவர் மனைவி நீலாம்பிகையுடன் காலம் தள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி விட்டார். ‘இனி இந்த ஜென்மத்தில் இந்த ராட்சஸியிடமிருந்து தனக்கு விடுதலையில்லை’ யென்று வருத்தப் படுவதை தவிர அவருக்கு வேறு வழியும் இல்லை!

அப்போது பக்கத்து வீட்டு டிவியிலிருந்து ‘நீல வண்ண கண்ணா வாடா… நீ ஒரு முத்தம் தாடா…” என்ற பாடல் அவர் காதில் அரைகுறையாக விழுந்தது! அவர் வயதானவர் என்பதால் அது ‘மங்கையர் திலகம்’ சினிமா படப் பாடல் என்பதும் அது சிவாஜி கணேசன், பத்மினி நடித்த படம் என்பதும் நினைவுக்கு வந்தது. அதோடு பள்ளிக் கூடத்தில் படிக்கும்போது தனது அப்பாவுக்குத் தெரியாமல் ‘நீலவானம்’ என்ற சினிமாவுக்குப் போய், அடி வாங்கியதும் நினைவுக்கு வந்தது.

பள்ளிக் கூட நினைவு வந்ததும் அவர் அப்போது தனது விஞ்ஞானப் புத்தகத்தில் படித்த நீல திமிங்கலம் பற்றியும் அதுதான் உலகிலேயே மிகப் பெரிய விலங்கு என்பதும் பெயர் நீல திமிங்கலம் என்றாலும் அதன் உடல் சாம்பல் நீல நிறத்தில் இருக்கும் என்பதும் படித்தது நினைவுக்கு வந்தது. அதோடு அப்போது அவர் பத்தாவது படித்தபோது, அவரது வகுப்பில் படித்த குறு குறு கண்களுடன் கொஞ்சம் குண்டான நீலா என்ற மாணவியின் ஞாபகம் வந்தது. அதைத் தொடர்ந்து அவர் கல்லூரியில் படித்தபோது பார்த்த நீலப் படங்களெல்லாம் நினைவுக்கு வந்து மனதிற்கு ஒரு கிளு கிளுப்பூட்டியது!

அப்போது அவரது கிளு கிளுப்பான நினைவுகளை கலைப்பது போல தனது மனைவி நீலாம்பிகை, வேலைக்காரி நீலாவதியிடம் ஏதோ சத்தம் போட்டுக் கொண்டிருப்பது காதில் பலமாக கேட்டது. ‘இவளுக்கு எப்போதும் யாரிடமாவது சண்டைப் போடாவிட்டால் தூக்கமே வராதே!’ என்று நினைத்தபடி எழுந்தார்.

எதிரே நீலநிற சுவரில் மாட்டியிருந்த மாதக் காலண்டரில் நல்ல நீல நிறத்தில் அச்சிடப் பட்டிருந்த தேதிகளைப் பார்த்தபோது, அவருக்கு தனது நண்பர் நீலகண்டனுக்கு எழுபத்து ஆறாவது பிறந்தநாள் வருவது நினைவுக்கு வந்தது. அவனுக்கு ஒரு நீளமான கடிதம் எழுத வேண்டும் என்று நினைத்தவருக்கு மேஜை டிராயரில் நீல நிற இன்லேண்ட் லெட்டர் இருப்பது நினைவுக்கு வந்தது.

‘சரி, காலை கடன்களையெல்லாம் முடித்துவிட்டு, காபி சாப்பிட்டு வந்து நீலகண்டனுக்கு கடிதம் எழுதுவோம்’ என்று நினைத்தபடி கொல்லைப் பக்கம் சென்றார்.

ஞாபகமாக நீல நிற டூத் பிரஷ்ஷையெடுத்து, சிவப்பு நிற பிரஷ் அவரோட மனைவியோடுது, பேஸ்டை எடுத்து பிதுக்கினார். அதுவும் நீல நிறத்தில் வந்தது. ‘அட, விஞ்ஞானம்தான் எப்படியெல்லாம் வளர்ந்திருக்கு’ என்று வியந்தபடி வந்தார். அப்போது கொல்லையில் பூத்திருந்த நீல நிற காக்கட்டான் பூவைப் பார்த்த அவருக்கு, ‘கல்யாணம் ஆன புதிதில் நீலாம்பிகையும் இப்படிதான் அழகாக இருந்தாள்’ என்று நினைத்துக் கொண்டார்!

கொல்லையிலிருந்து வீட்டுக்குள் வந்த நீலமேகத்திற்கு, நீலாம்பிகை பால்பாக்கெட் போடும் நீலகிருஷ்ணனிடம் சத்தம் போட்டுக் கொண்டிருப்பது காதில் கேட்டது. நேற்று நீல நிற பால் பாக்கெட்டுக்கு பதிலாக பச்சை நிற பால் பாக்கெட்டை போட்டுட்டு போயிட்டானாம்!

கொழுப்பு அதிகம்தான், நீலநிற பால் பாக்கெட்டைவிட அந்த பச்சை நிற பால் பாக்கெட்டிற்கு! அதோடு விலையும் கொஞ்சம் அதிகம்!

நீலாம்பிகையின் கொழுப்பைக் குறைக்க வேண்டுமானால் முதலில் பால் பாக்கெட்டின் கொழுப்பைக் குறைக்க வேண்டும்’ என்று நினைத்துக் கொண்டார் நீலமேகம்.

‘சரி, இப்பதான் பால் வந்திருக்கு, காபிக்கு இன்னும் கால்மணி நேரத்திற்கு மேலாகும். அதற்குள் நண்பர் நீலகண்டனுக்கு கடிதம் எழுத ஆரம்பிப்போம்’ என்று நினைத்தபடி தனது நீல நிற இங்க் பேனாவையெடுத்து, நீல நிற இன்லேண்ட் லெட்டரில் பிள்ளையார் சுழிப் போட்டார். பேனா நீல நிறத்திலும் எழுதவில்லை. ஒரு நிறத்திலும் எழுதவில்லை! பேனாவில் இங்க் இல்லை! ‘ஆரம்பமே சரியில்லை’ என்று நினைத்தபடி இங்க் பாட்டிலை எடுத்தார்.

நீலமேகம் இங்க் பாட்டில் மூடியைத் திறக்க முயன்றபோது. அந்த நீலநிற மூடி திறக்க முடியாதபடி இறுக்கமாக இருந்தது. திறக்க முடியவில்லை. அந்த நீலநிற மூடியும் நீலாம்பிகை போல பிடிவாதமாக இருந்தது! ‘எந்த மடையன் இப்படி ‘டைட்டா’ மூடிவைத்திருக்கிறான்’ என்று நினைத்தவருக்கு, ‘தான் தான்தான் அந்த நீல நிற இங்க் பாட்டிலை மூடி வைத்தோம்’ என்பது அவருக்கு அடுத்த வினாடியே நினைவுக்கு வந்தது! உடனே லேசாக சிரித்துக் கொண்டார்!

அப்போதுதான் அந்த விபரீதம் நிகழ்ந்தது. நீலமேகம் திறக்க முயன்ற அந்த இங்க் பாட்டில் கை வழுக்கி, தொப்பென்று கீழே விழுந்து, படீரென்ற சத்தத்துடன் சுக்கு நூறாகி, நீல நிற இங்க் அந்த வெள்ளை நிற மொசைக் தரையெங்கும் சிதறியது!

அப்புறமென்ன, நீலாம்பிகை நம்ம நீலமேகத்திடம் பாய்ந்தாள். “அறிவு இருக்கா உங்களுக்கு? அவனவன் லெட் பேனா, ஸெல் பேனாவையெல்லாம் கடந்து, இ.மெயில், வாட்ஸ்-அப் பிலெல்லாம் கடிதம் எழுதிக்கிட்டு இருக்கான்! நீங்களோ இன்னும் இங்க் பேனாவை கட்டிக்கிட்டு அழுவுறிங்க! இதையெல்லாம் சுத்தம் செய்வதற்கு நீலாவதிக்கு இப்ப நேரமில்லை. அதோ சுவர் ஓரம் நீலநிற துணி கிடக்குது பாருங்க. அதையெடுத்து, துடைத்து சுத்தம் செய்து, அந்த நீலநிற பிளாஸ்டிக் வாளியிலே போடுங்க! வெறுங்கையாலேயே சுத்தம் செய்து, கையை கிழிச்சுக்கிட்டு செலவு வைக்காதிங்க! அலமாரியிலே நீலநிற கையுறை இருக்கு, அதையெடுத்து போட்டுக்குங்க!” என்றாள்.

‘இதென்னது, இன்னைக்கு காலை நேரமே சரியில்லை’ என்று வருத்தத்துடன் நின்ற நீலமேகத்தின் அருகே சத்தம் கேட்டு ஓடோடி வந்த வேலைக்காரி நீலாவதி, “ஐயயோ….இங்கு பாட்டிலை போட்டு உடைச்சிட்டிங்களா, நீங்க போங்க! நான் துடைச்சு சுத்தம் செய்யுறேன்” என்று உரசியபடி நின்றாள். நீலமேகத்திற்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது!

அருகே வந்து நின்ற நீலாவதியை நிமிர்ந்துப் பார்த்தார் நீலமேகம். நீலாவதி அந்த நீலநிறப் புடவையில், நீலநிற ஜாக்கெட்டில் அழகாக இருப்பதாக பட்டது.

அதற்குள் நீலமேகத்தின் மனைவி நீலாம்பிகை, “எதுக்கு இப்ப இங்கே வந்து அவருக்கிட்டே உரசிக்கிட்டு நிக்குறே! சரி, நீயே சுத்தம் செய்! நீங்க வாக்கிங் போயிட்டு வாங்க; வந்துதான் காபி!” என்றாள். எங்கே முப்பத்தைந்தும் எழுபத்தைந்தும் பற்றிக் கொள்ளுமோ என்ற பயம் நீலாம்பிகைக்கு!

‘கடிதமாவது நண்பனாவது, முதலில் நீலாங்கரை வரை வாங்கிங் போய்விட்டு வருவோம்’ என்று நினைத்து ஒரு நீல நிற டீசர்ட்டை எடுத்துப் போட்டுக்கிட்டு கிளம்பினார் நீலமேகம்.

நீலமேகத்தை திரும்பிப் பார்த்த நீலாம்பிகை, “வரும்போது ஒரு துணி சோப்பும் வாழைப்பழமும் வாங்கிட்டு வாங்க! இன்று நான் உண்ணாநோன்பு. இப்பவே பசி உயிர் போகுது!” என்றாள்.

வாங்கிங் கிளம்பிய நீலமேகத்தை மறுபடியும் தடுத்து நிறுத்தி, ” நீங்க ரெண்டு சாமான்கள் வாங்கிட்டு வரச் சொன்னாலே, ஒரு சாமானை ஏதாவது மாற்றி வேறு ஏதாவது வாங்கிட்டு வருவிங்க! இருங்க எழுதி தருகிறேன்!” என்று ஒரு சிறுதாளில் எழுதிக் கொடுத்தாள் நீலாம்பிகை.

அந்த பில்லை பார்க்காமலேயே, ‘ஒரு துணி சோப், கொஞ்சம் வாழைப்பழம்! இதுக்கு ஒரு பில்லா! இவ என்னைப் பற்றி என்னதான் நினைச்சுக்கிட்டு இருக்கா!’ என்று நினைத்தபடி அந்த பில்லை டீசர்ட் பையில் அலட்சியமாக வைத்துக் கொண்டு புறப்பட்டார்!

“என்ன கையை வீசிட்டுப் போறிங்க? பை வேண்டாமா? இப்பவெல்லாம் பைக்கு அநியாயமாக காசு வாங்குகிறான்னு தெரியாதா? பூஜையறையிலே நீலநிறத் துணிப்பை இருக்கும் எடுத்துக்கிட்டு போங்க!” என்று மறுபடியும் கர்ஜித்தாள் நீலாம்பிகை.

பூஜையறைக்கு சென்றார் நீலமேகம்.அங்கே பூஜையறையில் ஒரு நீலநிற விடி பல்பு எரிந்துக் கொண்டிருந்தது. ஒரு கண்ணாடிப் போட்ட படத்தில் சாமி நீலமேகப் பெருமாள் படுத்திருந்தார். அங்கேயிருந்த நீல நிறப் பையை எடுத்தபோது அந்த நீலமேகப் பெருமாள் சாமியை பார்த்தார் நீலமேகம். உடனே அவருக்கு தான் பிறந்த நீலாம்பூர் ஞாபகம் வந்தது. அங்கே போகும்போது அப்படியே நீலகிரிக்கும் போய் வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.

குளித்தலை, தஞ்சாவூர், திருக்கண்ணபுரம் ஊரில் உள்ள பெருமாள்களுக்கெல்லாம் நீலமேகப் பெருமாள் என்றுதான் பெயர்! அங்கேயெல்லாம் கூட ஒரு தடவை போயிட்டு வரலாம். ஆனால் இந்த நீலாம்பிகையுடன் பயணம் போவதைவிட போகாமலேயே இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டார். அதற்காகயென்ன நீலாவதியுடனா போக முடியும்?

நீலமேகம் கையில் நீலநிற பையுடன் பூஜையறையிலிருந்து வெளியே வந்தார். நீலாம்பிகை டிவி பார்த்துக் கொண்டிருந்தாள். டிவியில் யாரோ நீலாம்பரி ராகத்தில் நாதஸ்வரம் வாசித்துக் கொண்டிருந்தார்.

டிவியிலிருந்து திரும்பிப் பார்த்த நீலாம்பிகை, “என்ன மாஸ்க் போடாமல் போறிங்க? கொரோனாவை வீட்டுக்கு கொண்டு வரப்போறிங்களா? அதோ உங்களோட நீல நிற மாஸ்க் ஆணியிலே மாட்டியிருக்குப் பாருங்க!” என்றாள்.

வீட்டிலிருந்து வெளியே வந்த நீலமேகத்திதிற்கு அப்போதுதான் சுதந்திரம் கிடைத்தது போல இருந்தது!

நீலமலைத் திருடன் படத்தின் கதாநாயகி யார்? அஞ்சலிதேவியா, ஈ.வி.சரோஜாவா என்று ஏதேதோ சிந்தித்துக் கொண்டு அந்தக் கால நினைவுகளுடன் நடு ரோட்டில் சென்றுக் கொண்டிருந்தார் நீலமேகம்.

அப்போது ‘கிரீச்’ சென்ற சத்தத்துடன் அவர் அருகே வந்து நின்றது ஒரு நீல நிற கார்!

அதிலிருந்து எட்டிப்பார்த்த டிரைவர், “யோவ்… என்னய்யா பெரிசு! ஏதையோ யோசிக்கிட்டு நடு ரோட்டிலே போறே? ஒரேயடியா போயிடாதே!” என்று கத்திவிட்டு சென்றார். அந்த டிரைவர் போட்டிருந்த சட்டையின் நிறம் உங்களுக்குத் தெரிந்ததுதான்.!

நீலமேகம் ஒருவழியாக நிதானத்திற்கு வந்து, நீலம் சஞ்சிவரெட்டி சாலையிலிருந்த அந்த டிபார்ட்மென்ட் ஸ்டோருக்கு சென்றார்.

அப்போதுதான் தனது மனைவி நீலாம்பிகை சாமான்கள் எழுதிக் கொடுத்த அந்த லிஸ்ட் காகிதத்தை அலட்சியமாக எடுத்துப் பார்த்தார் நீலமேகம். ‘இரண்டே சாமான்கள், துணி சோப், வாழைப்பழம்! அதற்கு ஒரு லிஸ்ட்! என்னை சரியான மாங்கா மடையனாக நெனக்கிறளா அவள்?’ என்று முணுமுணுத்தபடி அந்த சின்னஞ்சிறு நீலநிறத் தாளைப் பார்த்தார்!

அதில் ‘ஒட்டகம் மார்க் வாஷிங் சோப் 250 கிராம்’ என்று நீளமாக ஒரு வரியிருந்தது. இடம் அவ்வளவுதான் இருந்ததால் அடுத்த வரியாக ‘ நீலம் வாழைப்பழம்’ என்று இருந்தது.

அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. ‘மாம்பழத்தில் நீலம் என்று ஒரு வகை நீல மாம்பழம் என்று உண்டு! வாழைப்பழத்தில் கூடவா நீல வாழைப்பழம் உண்டு? இந்தக் காலத்தில் காய்கறி, பழங்களில் எவ்வளவோ புதுப்புது ரகங்கள் எங்கெங்கிருந்தோ வருகிறது. நீல நிற வாழைப்பழமும் வந்திருக்கும் போலிருக்கு!’ என்று சற்று குழம்பியவராக சோப்புகள் இருக்கும் இடத்திற்கு சென்றார். நிதானமாக ஒட்டகம் மார்க் வாஷிங் சோப்பாக பார்த்து, ஒரு வெள்ளை நிற சோப்பை எடுத்துக்கொண்டார்! அது 250 கிராம் எடையுள்ள சோப்பாயென்று கண்ணாடியை துடைத்துப் போட்டுப் பார்த்து உறுதி செய்துகொண்டார் நம்ம நீலமேகம்!

அடுத்து வாழைப்பழம் இருக்கும் இடத்திற்கு சென்றார். அங்கே பூவன், மொந்தன், ரஸ்தாளி, கற்பூரவள்ளி உள்ளிட்ட பெரும்பாலான வாழைப்பழ ரகங்கள் மஞ்சள் நிறத்தில் இருந்தன. அதில் விதிவிலக்காக செவ்வாழைப் பழத்தின் தோல் கருஞ்சிவப்பு நிறத்திலும் பச்சை நிற வாழைப்பழத்தின் தோல் பச்சை நிறத்திலும் இருந்தது. நீல நிறத்தில் எந்த வாழைப்பழமும் இல்லை!

காரணம் இல்லாமல் தனது மனைவி நீலாம்பிகை, நீலம் வாழைப்பழம் என்று குறிப்பிட்டிருக்க மாட்டாளே என்று குழம்பினார். அந்த பில்லை எடுத்து மறுபடியும் பார்த்தார். அதில்

‘ஒட்டகம் மார்க் வாஷிங் சோப் 250 கிராம்’ என்று முதல் வரியும், அடுத்து இரண்டாவது வரியாக ‘நீலம் வாழைப்பழம்’ என்று தெளிவாக இருந்தது.

நீலமேகம் அந்த டிபார்ட்மென்ட் ஸ்டோரின் நீல நிற யூனிஃபாம் அணிந்திருந்த அந்த அழகான சிவப்பான பணிப்பெண் அருகே சென்றார்.”உன் பேரு என்னம்மா?” என்றார்!

“ஏன், கேட்கிறிங்க? என் பெயர் நீலவேணி!” என்றாள் அந்த பெண்.

“அப்படியா, பார்க்க நீ நயன்தாரா மாதிரி அழகாக இருக்கே! இங்கே உங்க கடையிலே நீல நிறத்தில் ஏதாவது வாழைப்பழம் இருக்கிறதா? என் மனைவி அதுதான் வேண்டும் என்று குறிப்பிட்டு கேட்டிருக்கிறாள்!” என்றார் நீலமேகம்.

நயன்தாரா மாதிரியிருக்கே என்று ஒரு பெரியவர் தன்னை சொன்னதில் அந்த நீலவேணிக்கு ஒரே மகிழ்ச்சி. அந்தப் பெண் சுற்றும் முற்றும் பார்த்தாள்! அது காலை நேரம் என்பதால் கடையில் யாரும் கஸ்டமர் இல்லை என்பதை புரிந்துக் கொண்டு, தனது ஸ்மார்ட் போனையெடுத்து கூகுள் ஆப்பை ஆன் செய்து, நீலமேகத்திடம் காட்டியபடி விளக்கமாக சொல்ல ஆரம்பித்தாள்.

“இதோ பாருங்க தாத்தா, சில மாதங்களுக்கு முன்பு ஜாவா நாட்டில் நீல நிறத்தில் வாழைப்பழம் இருப்பதாகவும் அதன் தோல் மட்டுமல்ல, பழம் முழுவதுமே நீல நிறத்தில் இருக்கும். இது வென்னிலா ஐஸ் கிரீம்போல சுவையுடன் மிருதுவாக இருக்கும். இந்த வாழைப்பழங்கள் மிகவும் அரிதானவை என்று ஃபேஸ் புக், வாட்ஸ்-அப் போன்ற வலைதளங்களில் ஒரு தகவல் பரவிக் கொண்டிருந்தது. அதை உண்மையென்று நினைத்து உங்க மனைவி கேட்டிருக்காங்க! அது பொய்யான தகவல்! உலகில் எங்கும் நீல நிறத்தில் வாழைப்பழம் கிடையாது!” என்று சொல்லிவிட்டு, நீலமேகத்தைப் பார்த்து ஒரு புன்னகை புரிந்தாள். ஆனாலும் நீலமேகத்திற்கு அந்த பெண் தன்னை தாத்தா என்று அழைத்ததில் கொஞ்சம் வருத்தம்தான்!

‘நீல நிறத்தில் வாழைப்பழமே கிடையாதாம் என்று நீலாம்பிகையிடம் சொல்ல வேண்டும்!’ என்ற முடிவுடன் ஒட்டகம் மார்க் வெள்ளை நிற சோப்புடன் வீட்டுக்குச் சென்றார்.

நீலமேகம் தனது வீட்டு நீலநிற கேட்டை திறந்துக் கொண்டு, வீட்டுக்குள் நுழைந்தபோதும், நீலாம்பிகை டிவி பார்த்துக் கொண்டிருந்தாள். அதிலே ஏதோ பள்ளிக்கூட கல்வி நிகழ்ச்சி நடந்துக் கொண்டிருந்தது. அதில் ஒருவர் ‘இலங்கையின் தேசிய மலர் நீல அல்லி!’ என்று சொல்லிக் கொண்டிருந்தார்!

‘இவ ஏன் இதையெல்லாம் பார்க்கிறா? மறுபடியும் நீல கவுன் போட்டுக்கிட்டு பள்ளிக் கூடமா போகப் போகிறாள்?’ என்று நினைத்தபடி அந்த வெள்ளை நிற, ஒட்டகம் மார்க் சோப்பை பையிலிருந்து எடுத்து நீலாம்பிகையிடம் நீட்டினார்!

“ஏன், வெள்ளை நிற துணி சோப்பை வாங்கி வந்திருக்கிங்க? நான்தான் ஒட்டகம் மார்க் வாஷிங் சோப் 250 கிராம் நீலம்’ என்று பச்சப் புள்ளைக்கும் புரிகிற மாதிரி தெளிவாக எழுதியிருந்தேனே!” என்று சீறி விழுந்தாள் நீலாம்பிகை.

“அது சோப்போட நீலமா? நீ, நீல நிற வாழைப்பழம்தான் கேட்டிருக்கிறாய் என்று நான் விசாரித்து விட்டு, அப்படி ஒரு வாழைப்பழமே இல்லையென்று சொல்வதற்காக ஒரு பழமும்வாங்காமல வந்திருக்கிறேன்!” என்றார் நீலமேகம்.

“ஐயோ… என்னது நீலநிறத்தில் வாழைப்பழமா?” யென்று நீலாம்பிகை அதிர்ச்சியில் அந்த நீலநிற சோபாவிலேயே சாய்ந்து விழுந்தார்!

நீலமேகம் பதறியடித்தபடி பாத் ரூமுக்குள் சென்று, ஒரு நீலநிற பிளாஸ்டிக் பக்கெட்டிலிருந்த இருந்த தண்ணீரையெடுத்து வந்து, நீலாம்பிகை முகத்தில் தெளித்தார்! அந்த தண்ணீரும் நீல நிறத்தில் இருந்தது! ஏனென்றால் அது துவைத்த வெள்ளைத் துணிகளை நனைப்பதற்காக நீலம் கரைக்கப்பட்டிருந்த தண்ணீர்!

இதுக்கு மேலும் நான் நீலம் நீலமாக எழுதிக் கொண்டுப் போனால், இந்த கதை இன்னும் நீளமாக போய்விடும் என்பதால் இத்துடன் முடிக்கிறேன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *