சிறுகதை

நீலக் கலர் பறவை ! – மகேஷ் அப்பாசுவாமி

அந்த பிரம்மாண்ட சாப்பிங் மாலில் உள்ள, தனசேகரின் ஃபேன்ஸி கடைக்கு , ஏ.சி மெக்கானிக் சந்துரு வந்தான்.

மாலில், தனசேகரின் ஃபேன்ஸி கடை எப்போதும் கூட்டமாகவே இருக்கும். அன்றும் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது.

கல்லூரி பெண்கள், திருமணமான பெண்கள் என இரு வகையினர் பொருட்களை தேர்வு செய்து கொண்டிருந்தனர்.

கடை உரிமையாளர் தனசேகரிடம் , “சார் ஏ.சி’யில் ‘கம்ப்ரசர் ரிப்பேர்’ ஆயிடுச்சு …எப்படியும் ஒரு ஐந்தாயிரம் வரை, செலவு ஆகலாம்…சந்துரு சொல்ல… சொல்ல… அவனது கண்கள், பொருட்கள் தேர்வு செய்து கொண்டிருந்த ஒரு பெண்ணின் இடுப்பில் மேய ஆரம்பித்தது…

அவளும் ஒன்று இரண்டு முறை அவன் பார்ப்பதை பார்த்து விட்டாள் . ஆனால் அவன் பார்ப்பதை அவள் தவறாக நினைக்காமல் அவன் பேசும் மொழி மீது ,அவளது கவனம் சென்றது.நம் ஊர் பேச்சுவழக்கு ஆச்சே…என்று மனதுக்குள் நினைத்தவள்….

சந்துரு முதலாளியிடம் பேசி விட்டு, வெளியேறியதும்

அவளும் பொருட்கள் வாங்கி விட்டு அந்த நேரம் வெளியேறினாள்….

“சார் ஒரு நிமிடம்…” மெதுவாக சந்துருவை அழைத்தாள் அந்த பெண்.

“திரும்பிப் பார்த்தான் சந்துரு…”

“நான்தான் கூப்பிட்டேன். உங்களுக்கு நாகர்கோவிலா…?” கேட்டாள் அந்த பெண்.

“ஆமாம் மேடம் ஏன் கேட்குறீங்க…”கேட்டான்.சந்துரு .

“எனக்கும் நாகர்கோவில்தான்…நீங்க, கடை முதலாளிகிட்ட பேசியதை கேட்டு ,நம்ம ஊர் பேச்சுவழக்கு பேசுறாரே…என நினைத்தேன் ,அதான் உங்களிடம் கேட்க வேண்டும் என தோன்றியது… கேட்டேன்.

“ஓ…அப்படியா?நாகர்கோவிலில் உங்களுக்கு எந்த ஏரியா ? “கேட்டான் சந்துரு.

“மீனாட்சி புரம்”

“அப்படியா …எனக்கு வடசேரி “.

“ரெம்ப நெருங்கிட்டோமே…சரி… சரி, நீங்க திருச்சில என்ன பண்றீங்க…?”கேட்டாள்.

“ஏ.சி மெக்கானிக்கா இருக்கேன்.சரி உங்க பெயர் என்ன? நீங்க என்ன பண்றீங்க …”?கேட்டான் சந்துரு.

“என் பெயர் கவிதா. நான் குடும்ப தலைவியா இருக்கேன்.

வீட்டுக்காரர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார்…லவ் மேரேஜ், அதான் மாமியாருடன் திருச்சியில் இருக்கிறேன்…” . என கவிதா சொல்ல சொல்ல ,இரண்டு மூன்று முறை , தனது மார்பு பகுதி சேலை மடிப்பை சரி செய்து கொண்டாள்.

வீட்டுக்காரர் வெளிநாட்டில் இருக்கிறார்…இளம் வயது வேறு …ஒரு கணம் ,கலர் கலர் எண்ணங்கள்,சந்துரு மனதில் வந்து சென்றது.

“சரி சார்… பக்கத்து வீட்டு பொண்ணு வந்திடுச்சு… நான் சொல்ல வந்த விஷயத்தை, சொல்லாமல் விட்டுட்டேன். இனி பேச முடியாது. பாலக்கரையில் வீடு இருக்கிறது.. …எப்ப வந்தாலும்,காலை பத்து மணிக்கு மேல வாங்க … , அவசர அவசரமாக விட்டு விட்டு விலாசத்தை, சந்துருவிடம் கொடுத்து விட்டு கண்களால் விடை பெற்று சென்றாள் கவிதா.

சந்துரு மனதுக்குள் , என்ன விஷயமாக இருக்கும்….?ஏன் பத்து மணிக்கு மேல் வர சொன்னாள்…என நீலக் கலர் பறவைகள் ,மனதில் சிறகடித்து பறக்க தொடங்கின…விலாசத்தை திரும்ப திரும்ப பார்த்தான். மகிழ்ந்தான்.

இரு தினங்கள் கழித்து…

அலுவலகத்தில் இருந்து போன் வந்தது.

பாலக்கரை பக்கம் வேலை.. தகவல் சொன்னார்கள்.

தகவலை கேட்டு,சந்துரு மனது, பூரிப்பில் ஆழ்ந்து போனது .காலண்டரை போய் பார்த்தான்.மேஷம் ராசி_ எதிர்பாராத மகிழ்ச்சி ; போடப்பட்டிருந்தை கண்டு ,துள்ளி குதித்தான் , அவசர அவசரமாய் டூ _வீலரை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.

பாலக்கரை அன்புடன் வரவேற்கிறது …போர்டு கண்ணில் பட்டதும்

‘அப்படா வந்துட்டோம்…போற வழியில் கவிதாவை பார்த்து விட்டு அப்புறம் அலுவலக வேலையை பார்க்கலாம்…என மனதுக்குள் நினைத்தவன் , அந்த விலாசத்தில் உள்ள அந்த குறிப்பிட்ட வீட்டு எண்ணை ,தேடி கண்டு பிடித்து விட்டு ,அந்த வீட்டின் காலிங் பெல்லை அழுத்தினான் சந்துரு .

வெளியே வந்த கவிதா… “நீங்க நேற்றே வருவீங்கனு எதிர்பார்த்தேன்… வாங்க…வாங்க…தாங்க முடியலை…! நல்ல வேளை இப்பத்தான் மாமியார் வெளிய போனாங்க… வர்றதுக்கு இரண்டு மணி நேரம் ஆகும். சீக்கிரமா பெட்ரூமுக்கு வாங்க… என கூறி சந்துருவை அழைத்து சென்றாள்.கவிதா

“ராசி பலன் இப்படியுமா வேலை செய்யும் ? பலன் கணித்தவன் வாழ்க…”இப்படி சந்துரு மனதுக்குள், சந்தோஷ ஊஞ்சல், குதிரை வேகத்தில் பயங்கரமாய் ஓட ஆரம்பித்தது..

“ஏங்க… இதுதான் மாமியார் பெட்ரூம் .கட்டிலை கொஞ்சம் நகர்த்தி போட்டுக்கலாமா? “கேட்டாள் கவிதா.

” உங்கள் விருப்பம்… அசடு வழிந்த படியே சொன்னான் சந்துரு .

“ஏங்க வேலை செய்ய போறது நீங்க …கட்டில் இருந்தால், எப்படி ஏ.சி’ யை கழற்றி சர்வீஸ் பண்ணுவீங்க?”…கவிதா கேட்டதும்

ஊஞ்சல் கயிறு அறுந்து விழுந்தவன் போல் ஆன

சந்துரு ஏ.சி’ யை கழற்றி சர்வீஸ் பண்ணிவிட்டு கொடுத்த கூலியை வாங்கிக் கொண்டு ஓடியே போனான். !

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *