செய்திகள்

நீலகிரி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் அரசு துரித நடவடிக்கை எடுக்கும்: துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

ஊட்டி, ஆக. 13–

நீலகிரி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் அரசு துரித நடவடிக்கை எடுக்கும் என்றும், ஆளுங்கட்சியை குறை கூறுவதையே ஸ்டாலின் முழு நேரமாக வைத்துள்ளார் என்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

நீலகிரி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் மேற்கொள்வது குறித்து கலெக்டர் அலுவலகத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், அமைச்சரும் அரசு கேபிள் வாரிய தலைவருமான உடுமலை ராதாகிருஷ்ணன் முன்னிலையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு பின், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்கைளை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:

கனமழையால் பாதிப்படைந்த மக்களுக்கு தற்காலிக மற்றும் நிரந்தர தேவை என்னென்ன என ஆராய்ந்து அரசு போர்க்கால அடிப்படையில் அரசு செய்து கொடுக்கும். ஸ்டாலின் எப்போதும் ஆளுங்கட்சியை குறை கூறுவதையே முழு நேரமாக வைத்துள்ளார் என கூறிய அவர், கூடலூர் பகுதியில் கன மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் ஆய்வு செய்தபின் அப்பகுதியில் வாழும் மக்களுக்கான அனைத்து தேவைகளையும் உடனடியாக செய்ய அரசு துரித நடவடிக்கை எடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்பு அவர் கூடலூர் புறப்பட்டுச் சென்றார். ஆய்வின் போது, கலெக்டர் இன்னசென்ட் திவ்யா மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *