செய்திகள்

நீலகிரியில் 10 புலிகள் இறந்தது ஏன்? தேசிய பாதுகாப்பு ஆணையம் அறிக்கை

சென்னை, அக்.8–

நீலகிரியில் இயற்கை காரணங்களால் புலிகள் இறந்தது குறித்து தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:– தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் 20.9.2023, கடிதப்படி தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம், பெங்களூரு, டாக்டர். கே. ரமேஷ், விஞ்ஞானி, வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டுப் பணியகத்தின் மண்டல துணை இயக்குநர் டாக்டர் கிருபாசங்கர் மற்றும் சென்னையைச் சேர்ந்த வனவிலங்கு ஆய்வாளர் டோக்கி ஆதிமல்லையா ஆகியோர் கொண்ட குழு 25.9.2023 அன்று நீலகிரியில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் 10 புலிகள் இறந்தது குறித்து விரிவான கள மதிப்பீட்டை மேற்கொண்டனர்.

புலிகளின் உயிர்வாழ்வு விகிதம் எண்ணிக்கை, அடர்த்தியைப் பொறுத்தது என்று என்.டி.சி.சி.ஏ. கூறுகிறது. பொதுவாக, வயது முதிர்ந்த பெண் புலிகள் ஒரு பிரசவத்தில் 2-3 குட்டிகளை (சில சமயங்களில் 5 வரை) பிரசவிக்கும். அதில் 50% குட்டிகள் நோய், பட்டினி மற்றும் சிசுக்கொலை போன்ற பல காரணிகளால் இறக்கும். சேகூர் பகுதியில் 2 வார குட்டிகள் இறப்பதற்கு சாத்தியமான காரணம்: இரண்டு குட்டிகளின் (குறைந்தபட்சம் ஒன்று) உடல் நலம் குன்றியதாக இருக்கலாம். இது அடுத்தடுத்த பிரசவங்களில் தகுந்த குட்டிகளை வளர்ப்பதற்கான ஆற்றலைச் சேமிப்பதற்காக தாயால் கைவிடப்படுவதற்கு வழிவகுக்கும். மேலும் இளைய வயதில் குட்டிகள் பிரசவம் (அனுபவமற்ற தாய்) குட்டிகளை கைவிடப்படுவதற்கான காரணங்களில் ஒன்றாக இருக்கலாம்.

சின்ன குன்னூர் பகுதியில் உயிரிழந்த 4 குட்டிகள் இரண்டு மாதங்களே ஆனவை என தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த குட்டிகள் இறப்பதற்கு இரண்டு முக்கிய காரணங்களை அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது. முதலாவதாக, இந்த வயதில் குட்டிகள் தாயால் கொல்லப்படும் உணவை உண்ணத் தொடங்குகின்றன. அதனால் குட்டிகளை வளர்க்க தாய் அடிக்கடி இரையை கொல்லவேண்டும்.

குட்டிகளை வேறு இடம் மாற்றும்

பின்னர் இரை அடர்த்தி குறைவாக இருந்தால் தாய் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கும். இது நீண்ட காலத்திற்கு குட்டிகளை கவனிக்கப்படாமல் இருப்பதற்கு வழி வகுக்கிறது. மேலும் குட்டிகள் ஈன்ற இடம் பாதுகாப்பற்றதாகக் கருதப்பட்டால், தாய் குட்டிகளை (2-3 மாதங்களுக்குப் பிறகு) வேறு இடத்திற்கு மாற்றும். குறிப்பாக இந்த இடம் குறிப்பிடத்தக்க மனித இடையூறுகளால் சூழப்பட்டுள்ளது. எனவே, இந்த குட்டிகள் நீண்ட காலத்திற்கு தாயினால் கவனிக்கப்படாமல் விடப்பட்டிருக்கலாம். எனவே, நீண்ட பட்டினியால் குட்டிகள் இறந்திருக்கலாம்.

தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் மேலும் குறிப்பிட்டது என்னவென்றால் எந்தவொரு பிராந்திய பெரிய மாமிச உண்ணிகளுக்கும் உட்பூசல் என்பது ஒரு பொதுவான நிகழ்வாகும். இது எண்ணிக்கை, அடர்த்தி, பாலின விகிதம் மற்றும் வளங்கள் மற்றும் துணையின் கிடைக்கும் தன்மையைப் பொறுத்தது. எனவே நடுவட்டம் மற்றும் கார்குடி ஆகிய இரண்டு இடங்களில் புலிகள் இறந்தது உட்பூசல் சண்டையின் காரணமாகும்.

அவிலாஞ்சி பகுதியில் இரண்டு புலிகள் (இரண்டு ஆண்களும்) விஷம் கலந்த இறந்த மாட்டின் உணவை சாப்பிட்டதால் இறந்தது என தெளிவாகத் தெரிகிறது. இறந்த மாட்டில் விஷம் வைத்த நபர் ஏற்கனவே வன துறையால் கைது செய்யப்பட்டிருக்கிறார். இது முற்றிலும் பழிவாங்கும் கொலை.

இவ்வாறு தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் கூறுகிறது.

தனிப்படை மூலம்

தேடுதல் வேட்டை

இறந்த புலிக்குட்டிகளின் தாய்களை அடையாளம் காண எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் (சேகூர் பகுதியில் 2 குட்டிகள் மற்றும் சின்ன குன்னூர் பகுதியில் 4 குட்டிகள்) குறித்து வனத்துறை முதன்மை தலைமை வன பாதுகாவலர் கூறியதாவது:–

புலிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க 6 குட்டிகள் இறந்த இடங்களை சுற்றி ட்ராப் கேமராக்கள் பொருத்தப்பட்டன. சின்ன குன்னூர் பகுதியில் 40 இடங்களிலும், சேகூர் பகுதியில் 18 இடங்களிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் மேற்கண்ட பகுதிகளில் 6 தனிப்படைகள் மூலம் தீவிர தேடுதல் பணியும் நடைபெற்று வருகிறது.

சின்ன குன்னூர் பகுதியில் பொருத்தப்பட்ட கேமராக்களில் இருந்து 15 புலி படங்கள் கண்காணிப்பு குழுவினருக்கு கிடைத்துள்ளது. இதில் 4 பெண் புலிகள். மேலும் சின்ன குன்னூர் பகுதியில் 4 பெண் புலி படங்கள் கேமராக்களில் பதிவாகி உள்ள இடங்களில், 6 எச்ச மாதிரிகளை குழுக்கள் சேகரித்துள்ளனர். குட்டிகளின் சாத்தியமான தாய்களை அடையாளம் காண சேகரிக்கப்பட்ட அனைத்து மாதிரிகளும் டிஎன்ஏ பகுப்பாய்விற்காக ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

சேகூர் பகுதியில் 5 புலி படங்கள் கிடைத்துள்ளன. இதில் 4 பெண் புலிகள். புலிகளின் நடமாட்டம் குறித்த கூடுதல் தகவல்களைப் பெற, அருகிலுள்ள அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கும் வகையில் தேடுதல் தற்போது விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

சமீபத்தில் நீலகிரியில் 10 புலிகள் உயிரிழந்தது பரவலான கவலையை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு நடை முறைகளை மேம்படுத்த தமிழக அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வேட்டை தடுப்பு காவலர்களை வன காவலர்களாக அரசு முறைப்படுத்தியுள்ளது. நீலகிரி கோட்டம் மற்றும் தாங்கல் கோட்ட எல்லையில் உள்ள முதுமலை தாங்கல் பகுதிகளில் கூடுதலாக மூன்று வேட்டை தடுப்பு முகாம்கள் அமைத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. புலிகளைப் பாதுகாக்கும் முயற்சியில் துறை அதிக பட்ச முயற்சிகள் எடுக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *