செய்திகள்

நீலகிரிக்கு பிரச்சாரம் செய்ய வந்த ராகுல் காந்தியின் ஹெலிகாப்டரில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை

நீலகிரி, ஏப். 15–

நீலகிரியில் திமுக வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வந்த காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தியின் ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும்படையினர் சோதனை மேற்கொண்டனர்.

தமிழகத்தல் 19–ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் நாளை மறுநாள் (17–ந் தேதியுடன் முடியவுள்ள நிலையில், பிரசாரம் சூடுபிடித்துள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரங்களை தீவிரமாக செய்து வரும் நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து எம்பிக்கள், அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில், நீலகிரியில் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ராகுல் காந்தி இன்று நீலகிரி மாவட்டம் பந்தலூர் வந்தடைந்தார். அப்போது அங்கு வந்த தேர்தல் பறக்கும் படையினர் ராகுல் காந்தி வந்த ஹெலிகாப்டரில் சோதனை மேற்கொண்டனர்.

உதயநிதி ஹெலிகாப்டரிலும் சோதனை

ஹெலிகாப்டரில் இருந்த பை உள்பட அனைத்தையும் ஒன்று விடாமல் அதிகாரிகள் சோதனை செய்தனர். இந்த சோதனையில் பணமோ பொருட்களோ எதுவும் சிக்கவில்லை. இதனால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 10 நிமிடங்கள் வரை இந்த சோதனை நீடித்தது. இதையடுத்து, அங்கிருந்து அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர்.

அதன்பின்னர் நீலகிரி மாவட்டம் தாளூர் பகுதியில் தேயிலை தோட்ட தொழிலாளர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடினார். தாளூர் தேவாலயத்திற்கு வந்த ராகுல் காந்தி தேவாலயத்தில் இருந்த கூட்டரங்கில் சுமார் 5 நிமிடங்கள் உரையாற்றினார். நீலகிரியில் பிரசாரத்தை முடித்துவிட்டு தான் போட்டியிடும் கேரளா மாநிலம் வயநாடுக்கு ஹெலிகாப்டரில் ராகுல்காந்தி புறப்பட்டு சென்றார்.

முன்னதாக நீலகிரியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். இதற்காக ஹெலிகாப்டர் மூலமாக உதயநிதி ஸ்டாலின் நேற்று நீலகிரி வந்திருந்தார். அப்போது அவர் வந்த ஹெலிகாப்டரையும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *