செய்திகள்

நீர் வள பாதுகாப்பு இயக்கத்தில் பங்கு பெறுங்கள்: பொதுமக்களுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

Spread the love

திருவள்ளூர், ஆக. 8–

நீர் வள பாதுகாப்பு இயக்கத்தில் பொதுமக்கள், இளைஞர்கள், தனியார் நிறுவனங்கள் பங்கு பெறுங்கள் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார்.

மழைநீரை ஒரு சொட்டு கூட வீணாகாமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

தமிழ்நாடு நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர்மேலாண்மை இயக்கத்தின் பணிகள் தொடக்க விழா திருவள்ளூர் மாவட்டம் மஞ்சங்காரனையில் நடந்தது. விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நிரந்தர வற்றாத ஆறுகள் என்று எதுவும் இல்லை. பருவ மழையை நம்பியே இந்த ஆறுகள் உள்ளன. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில், ஆற்று நீரை கொண்டு ஏரி, குளம், குட்டை, ஊருணிகளை நிரப்பி, பின்னர் அந்த நீர் குடிநீருக்காவும் பாசனத்திற்காகவும் பயன்படுத்தப்பட்டது. இவ்வாறான பொறியியல் கட்டமைப்புகளை நமது முன்னோர்கள் கட்டமைத்து இருந்தனர். இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. ஆற்றை சுற்றியுள்ள கிராமங்கள் பாசன வசதி பெற்றன. நிரம்பிய ஒரு ஏரியிலிருந்து வெளியேறும் நீர் அடுத்த ஏரிக்கு பாயும் விதத்தில் கட்டமைப்புகளை ஏற்படுத்தினர். கல்லணை போன்ற சிறப்பான அணைகளை கட்டி, காவேரி ஆற்றை பாசன வசதிக்கு பயன்படுத்திக் கொண்டனர். இதேபோன்று, பல நீர் நிலைகளை தமிழ்நாடு முழுவதும் ஏற்படுத்தி நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கினர்.

ஒவ்வொரு நீர்த்துளியையும் சேமி்க்க வேண்டும்

பொருளாதார வளர்ச்சிக்கு நீர் மேலாண்மை மிகவும் அவசியமானதாகும். பருவமழை பொய்க்கும் காலங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதற்கான நிரந்தர தீர்வை காண்பது மிகவும் இன்றியமையாதது. விண்ணிலிருந்து மண்ணில் விழும் ஒவ்வொரு நீர்த்துளியும், பயன்படுத்தப்பட்ட நீரும் மறுசுழற்சி செய்து முறையான பயன்பாட்டிற்காக சேமிக்கப்பட வேண்டும்.

இதற்கென அனைத்து ஏரிகளிலும், குளங்களிலும், குட்டைகளிலும், கண்மாய்களிலும், ஊருணிகளிலும், வரத்து வாய்கால்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும். அனைத்து கிராமங்களிலும் புதிய ஏரிகளையும், குட்டைகளையும், நீர்ப்பிடிப்பு பகுதிகளையும் உருவாக்க வேண்டும். பாசன வாய்க்கால்களை செப்பனிடவும் பண்ணைக் குட்டைகள் உருவாக்குவதை ஊக்கப்படுத்தவும் வேண்டும்.

நீர் மேலாண்மையின் முக்கியத்துவத்தை உணர்ந்த அம்மா, மழைநீர் சேகரிப்பை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றினார். தற்போது, என்னுடைய அரசு, அம்மாவின் வழியிலேயே மழை நீர் சேகரிப்பை முன்னெடுத்துச் செல்லவும், நீர் நிலைகளின் கொள்ளளவினை அதிகப்படுத்தி பாதுகாக்கவும், வேளாண்மைக்கு நீர் திறம்பட பயன்படுத்துவதை உறுதி செய்யவும், கழிவுநீர் மற்றும் பயன்படுத்தப்பட்ட நீரினை சுத்திகரித்து மறுசுழற்சி முறையில் உபயோகிப்பதை பெருமளவில் ஊக்கப்படுத்த ‘‘நீர் வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கம்” என்ற ஒரு தீவிர மக்கள் இயக்கத்தை தொடங்க சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிவித்து, அதனை இன்று நான் துவக்கி வைப்பதில் பெருமை கொள்கிறேன். இந்த தீவிர இயக்கத்தில், கீழ்க்காணும் வழிமுறைகளின் மூலமாக அம்மாவின் அரசு செயல்படுத்த உள்ளது.

மழைநீர் சேகரித்தல், நீரிலை மறுசுழற்சி செய்தல்

* மழை நீர் சேகரித்தல், நீர் நிலைகளைப் பாதுகாத்து அதன் கொள்திறனை அதிகரித்தல்

* நிலத்தடி நீரை செறிவூட்டி, குடிநீர் வழங்குதலை நிலைப்படுத்துதல்

* வேளாண்மை மற்றும் அதனைச் சார்ந்த துறைகளின் நீர் பயன்பாட்டுத் திறனை அதிகரிப்பதோடு, மானாவாரி வேளாண்மைக்காக மழை நீர் சேகரிக்கும் திட்டத்தையும் செயல்படுத்துதல்

* பயன்படுத்தப்பட்ட நீரினை மறுசுழற்சி செய்து உபயோகப்படுத்துவதன் மூலம் நன்னீருக்கான தேவையை குறைத்தல். இதன் மூலம் மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சி கோட்பாட்டினை தீவிரமாக கடைபிடித்தல்

* ஆறுகள், ஏரிகள், முக்கிய கடற்கரை பகுதிகள், முகத்துவார நீர்நிலைகள், கழிமுகங்கள், சிற்றோடைகள் மற்றும் சதுப்பு நிலங்களின் சூழலியலை மீட்டெடுத்தல்.

இச்செயல் திட்டம் மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில், பல்வேறு துறைகளின் உதவியுடன் செயல்படுத்தப்படும். நகர்ப் பகுதிகளில் வார்டு வாரியாகவும், ஒவ்வொரு கிராமத்திலும், ஒன்றியத்திலும் நீர் பாதுகாப்பு வாரியம் அமைக்கப்பட்டு, அவற்றில் பெண்கள் பெருவாரியாக கலந்து கொண்டு செயல்படுவதை இத்திட்டம் உறுதி செய்கிறது.

மக்கள் இயக்கமாக மாற்ற தீவிர பிரச்சாரம்

இந்த நீர்வள பாதுகாப்பு இயக்கத்தை ஒரு மக்கள் இயக்கமாக மாற்ற ஒரு தீவிர பிரச்சார இயக்கம் 2019, இன்று இவ்விழாவின் மூலம் தொடங்கி ஒருமாத காலத்திற்கு தீவிரமாக செயல்படுத்தப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியை இந்த நிகழ்ச்சியின் வாயிலாக தெரிவித்துக் கொள்கின்றேன். இந்தத் தீவிர இயக்கத்தில் மாண்புமிகு அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் பெருமளவில் பங்கேற்பர். மாவட்ட ஆட்சியர்கள், இத்தீவிர இயக்கப் பணிகளை ஒருங்கிணைத்து செயல்படுத்துவர். இந்த இயக்கம், தனியார் நிறுவனங்கள், பொது மக்கள் அரசுசாரா நிறுவனங்கள், தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் ஆகியோரின் பங்களிப்புடன் ஒரு மக்கள் இயக்கமாக செயல்படுத்தப்படும். இந்த தீவிர இயக்கத்தின் மூலம் பருவமழை காலத்திற்கு முன்பு நீர்நிலைகளை மேம்படுத்தி, அதிக அளவு மழை நீரை சேமிக்க வழி வகை செய்யப்படும்.

குடிமராமத்துத் திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 499.99 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு, 1829 பணிகளும், தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாட்டின் ஒரு பகுதியாக, காவேரி டெல்டா பகுதியில் உள்ள கால்வாய்களை சீரமைக்க 61 கோடியே 38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அனுமதி வழங்கப்பட்டுள்ள பணிகளும், இந்த இயக்கத்தின் மூலமாக எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.

ரூ.1,250 கோடியில் கொள்ளளவினை அதிகரிக்கும் பணி

இத்தீவிர பிரச்சார இயக்கத்தின் மூலம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் கிராமம் தோறும் சிறுபாசன ஏரிகள், குட்டைகள் மற்றும் ஊருணிகளின் கொள்ளளவினை அதிகரிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்படும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 750 கோடி ரூபாயுடன், கூடுதலாக சிறப்பு நிதியாக 500 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசு வழங்கி, மொத்தம் 1,250 கோடி ரூபாய் நிதியின் மூலம் இப்பணிகள் சிறப்பாக செயல்படுத்தப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை மாநகரத்திலுள்ள 210 நீர்நிலைகளில், மாநகராட்சி நிதி மற்றும் தனியார் நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதியின் மூலமாக 53 நீர் நிலைகளில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், 114 நீர்நிலைகளில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைப்புப் பணிகளும் இத்தீவிர இயக்கத்தின் மூலம் மேற்கொள்ளப்படும்.

தமிழ்நாடு நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் மேலாண்மை இயக்கத்தின் மூலம் நீண்ட கால செயல்பாடுகளாக, மாநிலத்தில் பாயும் நதிகளை இணைத்தல், கோதாவரி–காவேரி ஆறுகளை இணைக்கும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களும் எடுத்துக் கொள்ளப்படும்.

இதுதவிர, கழிவுநீரை மறு சுழற்சி மூலம் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து நன்னீருக்கான தேவையைக் குறைத்தல், ஆறுகள், ஏரிகள், முக்கிய கடற்கரைப் பகுதிகள், முகத்துவார நீர்நிலைகள், கழிமுகங்கள், சிற்றோடைகள் மற்றும் சதுப்பு நிலங்களின் சூழலியலை மீட்டெடுத்தல், சொட்டுநீர் பாசன திட்டத்தை தீவிரமாக செயல்படுத்துதல், பண்ணைக் குட்டைகள் அமைத்தல் போன்ற எண்ணற்ற திட்டங்களை அம்மாவின் அரசு செயல்படுத்தி வருகிறது.

‘நடந்தாய் வாழி காவேரி’ திட்டம்

கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்தைப் போன்றே, காவேரி மற்றும் அதன் துணை ஆறுகளை தூய்மைப்படுத்த ‘‘நடந்தாய் வாழி காவேரி” என்னும் ஒரு புதிய திட்டத்தை அம்மாவின் அரசு, இந்த இயக்கத்தின் மூலம் செயல்படுத்தும். இத்திட்டம், இந்திய அரசு மற்றும் வெளிநாட்டு நிதியுதவி முகமைகளின் உதவியுடன் அம்மாவின் அரசு படிப்படியாக நிறைவேற்றும். காவேரி ஆற்றில், கழிவு நீர் மற்றும் தொழிற்சாலைக் கழிவு கலப்பதை தடுக்கவும், கடல் முகத்துவாரம் வரை ஆற்றை மீட்டெடுக்கவும் ஒரு விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து செப்டம்பர் மாதத்தில் மத்திய அரசுக்கு சமர்ப்பிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

இதே போன்று, பவானி, வைகை, அமராவதி மற்றும் தாமிரபரணி ஆறுகள் மாசுபடுவதைத் தடுக்கவும் அம்மாவின் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.

பெருகி வரும் மக்கள் தொகையும், அதற்கேற்ப பெருகும் நீரின் தேவையினையும் கருத்தில் கொண்டு, இனி நாம் ஒவ்வொருவரும் நீரின் சேமிப்பைப் பற்றி சிந்தித்து, அடுத்த தலைமுறைக்கு வளமான நீராதாரத்தை விட்டுச் செல்ல வேண்டும் என்பதே எனது அன்பான வேண்டுகோள்.

இந்த நீர் வள பாதுகாப்பு இயக்கத்தில் மிகப் பெரிய அளவில் பொது மக்களும், இளைஞர்களும், தனியார் நிறுவனங்களும், அரசு சாரா நிறுவனங்களும், தொழில் நிறுவனங்களும் முனைப்புடன் பங்கேற்று, மாநிலத்தின் ஒட்டு மொத்த நலனை பாதுகாக்க தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என இத்தருணத்தில் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

நிலத்தடி நீரை செறிவூட்ட…

ஆகவே, இன்றைக்கு ஒரு மிகச் சிறந்த திட்டத்தை துவக்கி வைத்திருக்கின்றோம். வறட்சியான காலத்திலே நமக்குத் தேவையான நீரை சேமிப்பது தான் இந்தத் திட்டத்தின் மிக முக்கிய நோக்கமாகும். 40 ஆண்டுகாலம் இல்லாத வறட்சி. இரண்டு மூன்று ஆண்டு காலமாக பருவமழை முழுமையாக நமக்கு பொழியவில்லை. இதனால் நிலத்தடி நீர் குறைந்து கொண்டே செல்கின்றது. ஆகவே, நிலத்தடி நீரை செறிவூட்டுவதற்கும், நிலத்தடி நீரை வேளாண் பெருமக்கள் பயன்படுத்தி வேளாண் பணிகளை மேற்கொள்வதற்கும், குடிநீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும் இந்தக் குடிமராமத்துத் திட்டம் மிகப் பெரிய திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் மூலமாக, தமிழகத்திலிருக்கின்ற பொதுப்பணித் துறை மற்றும் ஊராட்சி ஒன்றியங்களின் பராமரிப்பில் இருக்கின்ற ஏரிகள் முழுவதும் படிப்படியாக தூர்வாரப்பட்டு, அதன் மூலமாக ஏரிகள் ஆழப்படுத்தப்பட்டு, கரைகள் பலப்படுத்தப்பட்டு, மதகுகள் சரிசெய்யப்பட்டு, வரத்து வாய்க்கால்கள் சுத்தப்படுத்தப்பட்டு, உபரி நீர் வெளியேறுகின்ற கால்வாய்கள் சுத்தப்படுத்தப்பட்டு, சீரமைக்கப்பட்டு இன்றைக்கு ஒரு முழுமையான ஏரியாக காட்சி அளிக்கக்கூடிய அளவிற்கு அம்மாவினுடைய அரசு திட்டம் தீட்டி செயல்படுத்துகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

1829 ஏரிகள் தூர்வாரப்படுகின்றன

பல ஆண்டுகாலமாக, கிட்டத்தட்ட 20, 30 ஆண்டுகளாக தூர்வாராமல் இந்தத் திட்டத்தை கிடப்பில் போட்டுவிட்டார்கள். அம்மாவின் அரசு தான் இந்தத் திட்டத்தை கையிலெடுத்து, இன்றைக்கு சிறப்பாக செயல்படுத்திக் கொண்டிருக்கின்றது. தூர்வாரும்பொழுது ஏரிகள் ஆழமாவதுடன், கிடைக்கும் வண்டல் மண் விவசாயிகளுக்கு இயற்கை உரமாகப் பயன்படுகின்றது. இருவிதத்தில் நன்மை கிடைக்கின்றது.

பருவ காலங்களில் பொழிகின்ற மழை நீர் ஒரு சொட்டுக்கூட வீணாகாமல் பாதுகாப்பதற்காகத் தான் இந்தத் திட்டத்தை நாங்கள் துவக்கி வைத்திருக்கின்றோம். இந்தத் திட்டத்திற்கு புத்துயிர் கொடுத்த அரசு அம்மாவின் அரசு. 2017–18ம் ஆண்டு பரீட்சார்த்த முறையில் இந்தத் திட்டத்தை துவக்கினோம். முதற்கட்டமாக 1519 ஏரிகளும், இரண்டாம்கட்டமாக 2018–2019ம் ஆண்டில் ரூபாய் 328 கோடியில் 1511 ஏரிகளுக்கான திட்டத்தை அறிவித்தோம். 2019–2020ம் ஆண்டிற்கு 1829 ஏரிகள் ரூபாய் 499 கோடியில் தூர்வாருவதற்கு தேர்வு செய்யப்பட்டிருக்கின்றன என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்று 43-பனப்பாக்கம் என்ற பகுதியில் உள்ள ஏரியில் குடிமராமத்துத் திட்டத்தை துவக்கி வைத்துள்ளேன். ஒரு மனிதனுக்கு நீர் எப்படியோ, அதுபோல் விவசாயத்திற்கு உயிராக இருப்பது நீர். எனவே, அந்த நீரை, ஒரு சொட்டுகூட வீணாகாமல் பாதுகாப்பது அரசின் கடமை என்பதால் இப்படி ஒரு செயல்திட்டத்தைத் தீட்டி நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றோம். பொதுப்பணித் துறை சார்பில், குடிமராமத்துத் திட்டம் மூலமாக, முழுக்க, முழுக்க விவசாயப் பெருங்குடி மக்கள், பாசனத்திற்குட்பட்ட விவசாயிகள் சங்கம், ஆயக்கட்டுதாரர்களை ஈடுபடுத்தி, அவர்களிடத்தில் நிதியை கொடுத்து அவர்கள் மூலமாக ஏரிகளை சீரமைத்து ஏரிகளில் வண்டல் மண் அள்ளுவது, கரையை பலப்படுத்துவது, மதகுகளை சீர் செய்வது, வரத்து வாய்க்கால்களை சுத்தப்படுத்துவது, உபரிநீரை வெளியேற்றுகின்ற கால்வாய்களை சுத்தப்படுத்துவது போன்ற பணிகளை செயல்படுத்துகின்றோம்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *