புதுடெல்லி, மார்ச்.30-
நீர் மேலாண்மையில் 3-வது இடம் பிடித்த தமிழகத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று விருது வழங்கினார்.
மத்திய ஜல்சக்தி அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் தேசிய நீர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. நீர் மேலாண்மையில் சிறப்பாக செயல்படும் மாநிலங்கள், மாவட்டங்கள், உள்ளாட்சி அமைப்புகள், நிறுவனங்கள், பள்ளிகள், தொண்டு நிறுவனங்களை கள ஆய்வு செய்து விருதுக்கு தேர்ந்து எடுக்கிறார்கள்.
இந்த வகையில் 3-வது தேசிய நீர் விருது விழா டெல்லியில் உள்ள விக்யான் பவனில் நேற்று நடைபெற்றது. விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கி கவுரவித்தார். மேலும் ‘மழைநீரை பிடிப்போம்’ என்கிற விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் தொடங்கி வைத்தார். இதில் மத்திய ஜல்சக்தி துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத். இணை மந்திரி பிரகலாத்சிங் பட்டேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், நாட்டிலேயே சிறந்த மாநிலத்துக்கான விருது உத்தரபிரதேச மாநிலத்துக்கு வழங்கப்பட்டது. 2-வது இடத்துக்கான விருது ராஜஸ்தான் மாநிலத்துக்கு வழங்கப்பட்டது.
தமிழகம் 3–வது இடத்தை பிடித்து இருந்தது. இதற்கான விருதை தமிழக நீர்வளத்துறையின் கூடுதல் தலைமைச்செயலாளர் சந்தீப் சக்சேனா பெற்றுக்கொண்டார்.
மதுரை மாநகராட்சி
இதைப்போல சிறந்த நகர உள்ளாட்சி அமைப்புகளில் 3-வது இடத்துக்கான விருதை மதுரை மாநகராட்சிக்காக மேயர் இந்திராணியும், பள்ளிகள் பிரிவில் முதல் இடத்துக்கான விருதை காவேரிப்பட்டினம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை வளர்மதியும் பெற்றுக்கொண்டனர். பள்ளிகள் பிரிவில் புதுச்சேரி அமலோற்பவம் லூர்து அகாடமி, மணப்பேடு அரசு நடுநிலைப்பள்ளி ஆகியவை முறையே 2 மற்றும் 3-வது இடத்துக்கான விருதை பெற்றன.
மேலும் சிறந்த கிராம பஞ்சாயத்து பிரிவில் (தென் மண்டல அளவில்) செங்கல்பட்டு மாவட்டம் வெள்ளப்புதூர் ஊராட்சிக்கு 2-ம் இடத்துக்கான விருது வழங்கப்பட்டது. கம்பெனிகள் பிரிவில் தமிழ்நாடு ஹுண்டாய் மோட்டார் நிறுவனத்துக்கும், தன்னார்வ தொண்டு நிறுவனம் பிரிவில் கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவுக்கும் 2-வது இடத்துக்கான விருது வழங்கப்பட்டது.
2-வது தேசிய நீர் விருது விழாவில் தமிழகம் நாட்டிலேயே சிறந்த மாநிலத்துக்கான விருதை பெற்றது குறிப்பிடத்தக்கது.