ஆர்.முத்துக்குமார்
கோடை அறிகுறிகள் அரும்ப சென்னை நகர மக்கள் கடுமையான வெப்பத்திற்கும் குடிநீர் தட்டுப்பாடுகளுக்கும் தயாராகி வருகிறார்கள்.
ஏப்ரல் 19 தமிழகமே பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க தயாராகி வரும் நிலையில் அனல் பறக்கும் அரசியல் விவாதங்கள் புயலாய் பரவிட, வேட்பாளர்களும் அவர்களது ஆதரவாளர்களும் சென்னை உட்பட பல பகுதிகளில் தொடர் பிரச்சாரங்களில் முழு மனதுடன் ஈடுபட்டாலும் வெப்பம் காரணமாக பிரச்சாரங்களை குறைத்துக் கொண்டாக வேண்டிய கட்டாயத்திலும் உள்ளனர்.
வெப்பம் அடுத்த சில வாரங்களில் புதிய உச்சத்தை தொட இருக்கும் நேரத்தில் அக்னி நட்சத்திர கால கட்டமும் நெருங்க, குடிநீர் தட்டுப்பாடும் வந்துவிடும்.
ஆறு மாதங்களுக்கு முன்பு சென்னை அதீத மழை பொழிவு காரணமாக நீரில் மூழ்கிய நிலையில் தத்தளித்தது. அருகாமையில் இருந்த நீர் தேக்கங்களும் நீர்நிலைகளும் நிரம்பி வழிந்தது.
ஆனால் ஆறு மாதங்களில் தண்ணீர் பஞ்சம் வரும் என்ற அச்சத்தில் நகரவாசிகள் தவிப்பது ஏன்?
ஒரு பக்கம் நமது பாதுகாப்பு அரணாக வங்காள விரிகுடா கடல் இருந்தும் நகரில் அன்றாட உபயோக நீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதை அறிவோம்.
நகரவாசிகளின் ஒரே கவலை தேர்தல் நாள் வரை தட்டுப்பாடின்றி தண்ணீர் வழங்கும் நிலை இருக்கும். ஆனால் அதற்குப் பிறகு நிலை எப்படி இருக்கும்?
மொத்தமாக வற்றிவிடவில்லை என்றாலும் செம்பரம்பாக்கம், பூண்டி, சோழாவரம் சேமிப்பு கையிருப்பு நீர் அடுத்த மூன்று மாதங்களுக்கு அன்றாட உபயோகத்திற்கு தேவைப்படுகிறது.
ஆகவே கையிருப்பு நீரை ரேசன் முறையில் வினியோகிக்க வேண்டிய நிலை வரலாம்.
கடந்த 20 ஆண்டுகளில் கோடைக்கால ஏக்கத்திற்கு சென்னை நகரம் பல புதுப்புது யுத்திகளை கொண்டு சமாளித்து வருகிறது.
மீஞ்சூரில் கடல்நீரை குடிநீராக்கும் ராட்சத கட்டுமானத்தை உருவாக்கினார்கள். அதன் பின்னணியில் ரஷ்ய விஞஙஞானிகளின் தொழில்நுட்ப உதவிகளும் இருந்தது.
அதன் வெற்றியை தொடர்ந்து நெமிலி கடற்கரை பகுதியிலும் கடல்நீரை சுத்திகரிக்கும் ஆலைகள் நிர்மாணிக்கப்பட்டது. தற்சமயம் நெமிலியின் திறன் மூன்று மடங்கு அதிகரித்து செயல்பட்டு கொண்டு
இருக்கிறது.
இவை காரணமாக சென்னை நீர் இல்லா நாட்களை உருவாகாது பார்த்துக் கொள்கிறது. ஆனால் தமிழகம் எங்கும் நிலவும் வெப்ப சூழல் காரணமாக தண்ணீர் பஞ்சம் உருவாகிட நிலத்தடி நீரை உபயோகித்துக் கொண்டிருக்கிறோம்.
ஜனத்தொகை பெருக்கம், தொழிற்சாலைகள் அதிகரிப்பு காரணங்களால் நீர் மாசு ஏற்பட்டு வீணாகி விடுவதும் வளர்ச்சியும் ஏற்படுகிறது.
2050ல் உலக நாடுகள் அடைய வேண்டிய 17 அதிமுக்கிய நிலையான வளர்ச்சி இலக்குகளில் சுத்தமான குடிநீரும் முக்கியமான ஒன்றாகும்.
வருங்கால தலைமுறை நீரின்றி தவிக்க வைக்கப் போவது நாம் ஆகவா இருக்கவேண்டும்?
உலக வெப்பமயம் பற்றி விஞ்ஞானபூர்வமாக உணர்ந்துவிட்டாலும் அதை நிவர்த்தி செய்ய எந்த நடவடிக்கையையும் பற்றி யோசிக்காமல் இருக்கிறோம்.
நாம் நகர வசதிகளை உருவாக்க மரங்களையும் இயற்கை வளங்களையும் அழித்தோம்; அதன் பயனாக காலநிலை மாற்ற சிக்கல்களில் சிக்கி தவிக்கின்றோம்.
சில நாட்களில் அதீத மழைப்பொழிவு, நீரில் மூழ்கி தவிக்கும் பரிதாபம்! அடுத்த சில மாதங்களில் பல வாரங்களுக்கு தொடரும் வறட்சி!
நாம் வாழும் பூமியில் 70 சதவீதம் நீர் சூழ இருப்பதில் 3 சதவீதம் மட்டுமே குடிநீர் உபயோகத்திற்கு ஏற்றதாக இருக்கிறது.
நகர மேற்பரப்பில் வாகன நெரிசலை போக்க பூமியைத் தோண்டி ரயில் பாதைகள் அமைத்து வருவது போல் புதிய நீர் சேமிப்பும் நீர் செல்லும் பாதைகளையும் பூமிக்கு அடியே ஏற்படுத்தியாக வேண்டிய கட்டாயமும் வந்து விட்டது.
தற்சமயம் கடல்நீரை குடிநீராக மாற்றி அதை நிலத்தடி குழாய் வழியாக சென்னையில் பல பகுதிகளுக்கு தங்கு தடை இல்லாமல் நீர் வழங்கி வருவது போல் தமிழக எல்லையில் கடற்கரை பகுதியில் மேலும் பல நூறு கடல்நீரை உபயோகத்திற்கு ஏற்ற நீராக மாற்றிடும் ஆலைகள் அமைத்து நிலத்தடியில் நீர் வழித்தடங்கள் உருவாக்கி தமிழகமெங்கும் புதிய நீர் இணைப்பகங்களை உருவாக்கி உலகத்திற்கே நல்ல முன் உதாரணமாக உயர வேண்டும்.
இதற்கு பல லட்சம் கோடிகள் செலவாகுமே? என யோசித்துக் கொண்டிருந்தால் கோடை வெப்பத்தில் வற்றும் நீர் மீண்டும் மழையாய் நமக்கு கிடைக்கும் சதவிகிதம் குறைந்தால் அதன் விபரீதத்தில் மானுடம் அழிவை சந்திக்க வேண்டிய கட்டம் வரும் அபாயம் இருக்கிறது.