ஆர். முத்துக்குமார்
கோடை அறிகுறிகள் அரும்ப, சென்னை நகர வாசிகள் கடுமையான வெப்பத்திற்கும், குடிநீர் தட்டுப்பாடு வருமா? என்ற கேள்விக்குறியுடனும் கவலையோடு இருப்பதை உணர முடிகிறது.
5 மாதங்களுக்கு முன்பு சென்னை மட்டுமின்றி தமிழகமெங்கும் பரவலான பலத்த மழை பொழிவு காரணமாக வெள்ளப்பெருக்காக காட்சி தந்த நிலை மாறி இப்படி தண்ணீர் தட்டுப்பாடு வருமா? என்ற அச்சக் கேள்விக்கு பதில் தேடுவது வாடிக்கையாகத்தான் இருக்கிறது.
20 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை நகரம் கோடைக் காலத்தில் தண்ணீருக்கு ஏங்கித் தவித்தது. அரசும் நிலமையை சமாளிக்க குடிநீர் சப்ளை லாரிகளை இரவுப் பகலாக இயக்கி நிலமையை ஓரளவு சமாளித்தது.
ஆனால் கடந்த 15 ஆண்டுகளில் மீஞ்சூர் மற்றும் நெமிலி கடற்கரைப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட கடல் நீரை குடிநீராக்க மாற்றும் ஆலைகள் மூலம் நகரின் நீர் தேவையை பெரும்பாலும் சமாளித்து வருகிறது.
தமிழகமெங்கும் தண்ணீர் தேவைக்கு பூமிக்கடியில் இருக்கும் நீரை தோண்டி எடுத்து உபயோகிப்பது பிரபலமானது. ஆனால் அதன் காரணமாக நிலத்தடி நீர் அளவு கடுமையாக குறைந்து விடுவதால் அதன் தன்மையும், நிலப்பரப்பின் தட்பவெப்படும் மாறி விடுகிறது.
மக்கள் தொகை அதிகரிப்பு, தொழிற்சாலைகள் அதிகரிப்பு, நீர்நிலைகள் பராமரிப்பின்மை, நீர் மாசுப்பாடு உள்ளிட்டவற்றால் சுத்தமான குடிநீரக்குத் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும் முழுமையாகப் பலன் கிடைக்கவில்லை. எனவே 2050ம் ஆண்டுக்குள் உலக நாடுகள் அடைய வேண்டிய 17 நிலையான வளர்ச்சி இலக்குகளில் சுத்தமான குடிநீரும் முக்கியமான ஒன்றாக உள்ளது.
பிரம்மோஸ் மையத்தின் நிறுவனர் சிவதாணுப் பிள்ளை, ‘‘எதிர்காலத்தில் தண்ணீருக்காக போர் நடக்க வாய்ப்புள்ளது. எனவே நம் குழந்தைகளுக்குத் தண்ணீரின் அவசியம் குறித்து தெரிந்திருக்க வேண்டும். நம்மிடையே நீர் ஆதாரத்துக்கான திட்டமிடல் சரியாக இல்லை. அதைச் சரிப்படுத்த வேண்டும். அதேபோல் உலக வெப்பமயமாதலும் அதிகரித்து வருகிறது. மனிதர்களால் மரங்கள் அழிக்கப்படுவதும், கால நிலை மாற்றமும் தான் இதற்குக் காரணம். இனி வரும் காலங்களில் குடிநீருக்காக நிலத்துக்கு அடியில் தோண்டாமல் கடலிலிருந்து குடிநீலை எடுக்கத் திட்டமிட வேண்டும்’’ என்றார்.
நாம் வாழும் இந்த அரிய பூமியில் 71% நீராக இருக்கிறது. அதில் 3% மட்டுமே குடிநீர் உபயோகதிற்கு ஏற்றது. ஆகவே குடிநீர் தட்டுப்பாடு என்பது உலகளாவிய பிரச்சனையாகத் தான் இருக்கிறது. இந்நிலையில் நமது பங்களிப்பாக நிலத்தடி தண்ணீரை அதீதமாக உபயோகிக்காமல் இருப்பது தான் உத்தமம்!
தமிழக முதல்வர் ஸ்டாலினும் அடுத்த 20 ஆண்டுகளுக்குப் பிறகு நிலத்தடி நீர் வற்றாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டிய செயல் திட்டத்தை மேற்கொள்ள வேண்டும். அதற்கு நமது கடற்கரை பகுதிகளில் கடல்நீர் சுத்திகரிப்பு அதிகமாக்க செயல்திட்டத்தை அமுல்படுத்தியாக வேண்டும்.