செய்திகள்

நீராவி என்ஜின் வடிவில் சுற்றுலா ரெயில்: சென்னை -புதுச்சேரி இடையே சோதனை ஓட்டம்

சென்னை, ஜூலை 17–-

நீராவி என்ஜின் வடிவிலான சுற்றுலா ரெயில் சென்னை எழும்பூர் – -புதுச்சேரி இடையே நேற்று சோதனை ஓட்டம் நடத்தி பார்க்கப்பட்டது.

சுற்றுலா ரெயில் சேவையை மேம்படுத்த பல்வேறு புதிய திட்டங்களை ரெயில்வே வாரியம் அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தெற்கு ரெயில்வேயில் புதிய சுற்றுலா ரெயில் சேவையை நடைமுறைப்படுத்தும் வகையில் பாரம்பரியமிக்க நீராவி என்ஜின் வடிவில் மின்சார ரெயில் வடிவமைக்கப்பட்டது.

இந்த ரெயில் ஆவடி, பெரம்பூர், பொன்மலை ஆகிய ரெயில்வே பணிமனைகளில் உருவாக்கப்பட்டு இயக்கி பார்க்கப்பட்டது. இந்த ரெயிலின் முன்பகுதி முழுவதும் பழங்காலத்தில் இயங்கும் நீராவி என்ஜின் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல, ரெயிலில் நீராவி என்ஜின் புகை வெளியேற்றுவது போன்ற அமைப்பும், ஒலியும் அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 மாதங்களாக இந்த ரெயில் ஆவடி பணிமனையில் சோதனை ஓட்டம் நடத்தி பார்க்கப்பட்டது. இந்த ரெயிலை மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் சமீபத்தில் பார்வையிட்டார்.

இந்த மின்சார சுற்றுலா ரெயில் 4 பெட்டிகள் கொண்டது. இதில், ஒரு பெட்டி முழுவதும் உணவு சமைப்பதற்கான கூடம் அமைக்கப்பட்டுள்ளது. பயணிகள் உணவு அருந்தும் வகையில் பல்வேறு வசதிகளுடன் மொத்தம் 48 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ரெயில் முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னை – -புதுச்சேரி இடையே இந்த ரெயில் நேற்று சோதனை ஓட்டம் நடத்தி பார்க்கப்பட்டது. சென்னை எழும்பூரில் இருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்ட ரெயிலில் தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் மற்றும் ரெயில்வே அதிகாரிகள் பயணம் செய்தனர். இடையில், கிண்டி, கூடுவாஞ்சேரி உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நிறுத்தி ஆய்வு செய்யப்பட்டது.

இந்த ரெயில் மதியம் 12.30 மணியளவில் புதுச்சேரி ரெயில் நிலையம் சென்றடைந்தது. அங்கு பல்வேறு பணிகளை தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் பார்வையிட்டார். பின்னர், ரெயில் நிலைய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

இதைத்தொடர்ந்து சுற்றுலா ரெயில் மதியம் 2.30 மணியளவில் புதுச்சேரியில் இருந்து புறப்பட்டு இரவு 8 மணியளவில் சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் வந்தடைந்தது. இந்த சோதனை ஓட்டத்தில், சுற்றுலா ரெயிலின் வேகம், ரெயில் நிறுத்தங்கள், வழித்தட பராமரிப்பு, சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு பயண நேரம், பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.

எந்த வழித்தடத்தில் சுற்றுலா ரெயிலை இயக்கலாம் என்று தெற்கு ரெயில்வே ஆய்வு செய்து வந்த நிலையில் சென்னை- – புதுச்சேரி இடையே சோதனை ஓட்டம் நடத்தி பார்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல, இன்னும் 2 அல்லது 3 மாதங்களில் இந்த ரெயில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *